Published : 27 Jun 2019 10:52 AM
Last Updated : 27 Jun 2019 10:52 AM
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அனந்த சரஸ் திருக்குளத்தில் இருந்து எடுக்கப்படும் அத்திவரதர் பக்தர்களுக்கு 48 நாள் அருள் மழை பொழியும் அரிய நிகழ்வை ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு முறை காண்பதே அரிது.
அப்படிப்பட்ட அத்திவரதரின் தரிசனத்தை மூன்றாவது முறையாக தான் காண இருப்பதும் அந்த அத்திவரதரின் அனுக்கிரகத்தால்தான் என்கிறார் காஞ்சிபுரத்தில் வாழும் சுந்தர்ராஜன்.
காணும் பொருள்களில் கடவுள்
தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தெர்மோகோல், சாக்குத்துணி, பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பல விதமான பொருட்களைக் கொண்டே தெய்வத் திருவுருவங்களை பல ஆண்டுகளாக வடித்துவருகிறார்.
தற்போது அத்திவரதர் தரிசனம் அளிக்கும் நிகழ்வை ஒட்டி, பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியும் பொருட்களைக்கொண்டே அத்திவரதர் வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஏழு அடி நீளம், நான்கு அடி அகலம் அளவில் அத்திவரதரை செய்திருக்கிறார் சுந்தர்ராஜன். தெர்மோகோல், எம்சீல் போன்ற பொருள்களைக் கொண்டே அத்திவரதரை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார். உடைந்த பிளாஸ்டிக் பக்கெட்டே கிரீடமாகி யிருக்கிறது. பிவிசி பைப்புகள் பெருமாளின் திருக்கரங்களாகி இருக்கின்றன.
“கடந்த 2009லிருந்து கருட வாகனம், அனுமந்த வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், யானை, குதிரை, யாளி, சந்திர பிரபை, சூரிய பிரபை, பல்லக்கு போன்ற வாகனங்களை செய்து கொலுவில் வைத்துவிடுவேன். காஞ்சிபுரம் கோயிலுக்கு வருபவர்களும் எங்கள் வீட்டு கொலுவில் இந்த வாகனங்களை பார்த்து ரசிப்பார்கள்” என்றார் சுந்தர்ராஜன்.
“பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கிறது. பலருக்கும் பயன்படாத பொருள்களாக இருப்பவை என்னுடைய தந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காபி கொடுக்கும் கோப்பையையே அவர் சாமரமாக மாற்றிவிடுவார். வீட்டில் ஒருகால் ஒடிந்த ஸ்டூல் இருந்தால், இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்பார்.
அடுத்த முறை நவராத்திரிக்கு வீட்டுக்குப் போகும்போது அந்த கால்ஒடிந்த ஸ்டூல் ஏதாவது ஒரு வாகனத்தின் ஒரு பாகமாக ஆகியிருக்கும். வரதராஜர் உற்சவர் விக்கிரகத்தை இதுபோல் செய்திருக்கிறார்.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும், தாயார், தேசிகர், பெருமாள் வாகனங்களை செய்து கடந்த பத்து வருடமாக நவராத்திரி கொலுவில் வைப்பதை இறைப் பணியாக ஈடுபாட்டோடு செய்வருகிறார் என்னுடைய தந்தை” என்கிறார் சென்னையில் வசிக்கும் சுந்தர்ராஜனின் மகளான சுபாஷினி பார்த்தசாரதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT