Last Updated : 06 Jun, 2019 11:12 AM

 

Published : 06 Jun 2019 11:12 AM
Last Updated : 06 Jun 2019 11:12 AM

ரமலான் நோன்பு: நபிகளாரின் எண்ணம்

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பு. நோன்பு குறித்து அண்ணல் நபி வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய சில எண்ணங்களைப் பார்ப்போம். இது நோன்பு குறித்த தெளிவை நமக்குத் தர உதவியாக இருக்கும்.

அண்ணல் நபி மக்காவைத் துறந்து மதீனா நகர் சென்றபோது, அகதியாய் அங்கே தஞ்சமடைந்த ஒவ்வொரு மக்காவாசியையும், ஒரு மதீனாவாசியோடு இணைத்துச் சகோதரராக்கினார். அவ்வகையில் நபித்தோழர் அபுதர்தாவும் ஸல்மான் பார்ஸியும் இந்தப் பிணைப்புக்குக் கட்டுப்பட்ட சகோதரர்கள் ஆனார்கள்.

ஒருமுறை நபித்தோழர் ஸல்மான் அபுதர்தாவைச் சந்திக்கச் சென்றார். அங்கு அபுதர்தாவின் மனைவியார் உம்முத்தர்தா அலங்காரம் ஏதுமின்றி, எதிலும் பற்றின்றி இருப்பதை அறிந்தார். அதன் காரணத்தைக் கேட்டபோது, அவ்வம்மையார், “உங்கள் சகோதரர் அபுதர்தா உலகப் பற்றின்றி வாழும்போது, நான் யாருக்காக அலங்காரம் செய்து கொள்வது?” என்றார் வருத்தத்துடன்.

நோன்பு நேர விருந்து

சற்று நேரத்தில் அபுதர்தா வந்தார். தன்னுடைய சகோதரர் ஸல்மானுக்காக உணவு தயாரிக்கும்படி மனைவியிடம் சொன்னார். உணவு தயாரானதும், தாம் நோன்பிருப்பதை ஸல்மானிடம் தெரிவித்து அவருக்கு விருந்து படைக்கவும் செய்தார்.

ஆனால், ஸல்மானோ, “அபுதர்தா, நீங்கள் என்னோடு சேர்ந்து உண்டால்தான் நானும் உணவைப் புசிப்பேன்!” என்று ஒரே பிடிவாதமாக அபுதர்தாவின் உபரி நோன்பைக் கைவிடச் செய்தார்.

இரவு வந்ததும், வழக்கம்போல, அபுதர்தா உபரி தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தயாரானார். அவரிடம் ஸல்மான், “உறங்குங்கள் பிறகு தொழுது கொள்ளலாம் என்று வலியுறுத்தித் தூங்கவைத்தார். இரவின் கடைசி பகுதியில் தொழுவதற்காக அபுதர்தாவை எழுப்பவும் செய்தார். அதன் பிறகு நபித்தோழர் ஸல்மான் இப்படி அறிவுறுத்தினார்: “அபுதர்தா நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், உங்கள்மீது இறைவனுக்கு உரிமையிருப்பது போலவே, உங்கள் உடலுக்கும் உரிமையுண்டு, உங்கள் மனைவிக்கும் உரிமையுண்டு. எனவே, அவரவருக்கான உரிமைகளைச் சீராக நிறைவேற்றுங்கள்”

அதன்பின், நபிகளாரைச் சந்தித்த ஸல்மான் நடந்தவற்றைச் சொன்னார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட நபிகளார், “ஸல்மான் நீங்கள் சொன்னவை அனைத்தும் சரிதான்!” என்று அவருடைய அறிவுரையை ஆமோதித்தார்.

வேதனை வேண்டாம்

நபிகளாரின் திருச்சன்னிதியில் தங்கியிருந்து நேரடி போதனைகளைப் பெற்றுச் சென்ற பாஹிலா குலத்தைச் சேர்ந்தவர் உபரியான தொடர் நோன்பு நோற்று ஆள் அடையாளம் தெரியாத மாற்றத்துக்குண்டானபோது, அவரை நபிகளார் வேதனையில் ஆழ்த்திக்கொள்ள வேண்டாம் என்று கண்டித்தார். அத்துடன், கண்ணியத்திற்குரிய மாதங்களான ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மாதங்களில் உபரி நோன்பு நோற்கும்படியும், சில ஆண்டுகளில் நோன்பு நோற்காமலிருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

இதுபோலவே, தொடர்ந்து பகல் முழுவதும், உபரி நோன்பு நோற்பதாகவும், இரவில் உபரி வணக்கங்களில் ஈடுபட்டுவருவதாகவும் நபித்தோழர் அப்துல்லாஹ் அம்ரு பின் ஆஸ் குறித்து புகார் வந்தபோது, ‘அப்படிச் செய்ய வேண்டாம்’ என்று அவரை நபிகளார் தடுத்தார். ‘சில நாள் உபரி நோன்பு நோற்கும்படியும், சில நாள் உபரி நோன்பு நோற்காமலிருக்கும்படியும், பின்னிரவுத் தொழுகையான தஹஜ்ஜத் தொழுகை தொழுதுவரும்படியும், உடலுக்கான உரிமைகளையும், மனைவிக்கான உரிமைகளையும், சக மனிதர் சம்பந்தமான உரிமைகளையும் நிறைவேற்றும்படியும் அவரிடமும் நபிகளார் வலியுறுத்தினார்.

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், அது இறைவழிபாடானாலும், சமநிலைப் போக்கைக் கடைபிடிக்கும்படி நபிகளார் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x