Last Updated : 27 Jun, 2019 10:47 AM

 

Published : 27 Jun 2019 10:47 AM
Last Updated : 27 Jun 2019 10:47 AM

திருக்காட்சி நாள்: ஜூலை 1 - அரிதாகப் பூக்கும் அத்திவரதர்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு  ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் ஆதிமூர்த்தி அத்தி வரதர் வரும் ஜூலை மாதம் முதல் நாள் மக்களுக்குக் காட்சியளிக்க இருக்கிறார்.

தற்போது  கருவறையில்  வரதராஜப் பெருமாளாக பக்தர்களுக்கு காட்சியளிப்பவர்  பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் ஆவார். அத்தி வரதரின் திருமேனி பிரம்ம தேவரால் அத்திமரத்தில் செய்யப்பட்டதாகும்.

அத்தி வரதர் தோன்றிய வரலாறு  

பிரம்ம தேவர் பெருமாளை நோக்கி யாகம் செய்தார். பிரம்மாவிடம் சினம் கொண்டிருந்த சரஸ்வதி தேவி, அந்த யாகத்துக்கு வரவில்லை,  சரஸ்வதி தேவியின் துணையின்றி யாகத்தைப் பூர்த்திசெய்ய முடியாது என்று எண்ணினார் பிரம்ம தேவர். இதனால் காயத்ரி, சாவித்திரி தேவியின் துணையோடு யாகத்தை அவர் தொடர்ந்தார். 

பிரம்மாவின் யாகத்தை கண்டு மேலும் சினம் கொண்ட கலைமகளான  சரஸ்வதி தேவி, யாகத்தைத் தடுத்து நிறுத்த நினைத்தார். யாகத்தைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பூமியை இருளில் மூழ்கடித்தார். இருளில் தவித்த பிரம்ம தேவருக்கு தடைகளை  நீக்கி, மீண்டும் யாகம் தொடரத் துணைநின்றார் பெருமாள்.

மீண்டும் யாகம் தொடரவே  பல இடையூறுகளை சரஸ்வதி தேவி செய்தார். பிரம்ம தேவனின் வேண்டுதலைக் கேட்டு, சரஸ்வதி தேவி ஏற்படுத்திய தடைகளை முறியடித்த பெருமாள், பிரம்ம தேவரின் யாகம் தொடர துணைநின்றார். இறுதியில் வேகவதி நதியாக வந்த சரஸ்வதி தேவி யாகம் நடக்கும் இடம் நோக்கிப் பாய்ந்தார். சரஸ்வதி தேவியை அணையாகத் தடுத்து நிறுத்தினார் திருமால்.

சரஸ்வதியின் கோபத்தைத் தணித்த பெருமாள் , பிரம்மாவுடன் யாகத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார். கோபம் தணிந்த சரஸ்வதி தேவி, பிரம்மா, காயத்ரி, சாவித்திரி ஆகியோருடன் யாகத்தில் பங்கேற்றார். அக்னியிலிருந்து  வெளிப்பட்ட வரதராஜ பெருமாள்  பிரம்ம தேவர், சரஸ்வதி தேவி, காயத்ரி தேவி, சாவித்ரி தேவி ஆகியோருக்குக் காட்சியளித்தார். அவர்கள் விரும்பிய வரங்களை  அளித்தார். அதனால் வரதர் எனப் பெயர் பெற்றார்.

பேழைக்குள் வரதர்

பெருமாளின் அற்புதக் காட்சியைக் கண்ட பிரம்ம தேவர் பெருமாளுக்கு அத்தி மரத்திலான ஒரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அத்தி மரத்திலான பெருமாள், அத்தி வரதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் இந்திரனின்  வாகனமாகிய ஐராவதம் எனும் யானை, அத்தி வரதரரகக் காட்சியளித்த வரதராஜ பெருமாளை சுமந்தது. பின்னர் இது ஹஸ்திகிரி என அழைக்கப்பட்டது.

பின்னாளில் அத்தி கிரி என அளிக்கப்பட்டது அத்தி என்றால் யானை, கிரி என்றால் மலை. யானைமலை போன்று இருப்பதால் இப்பெயர் வந்தது. அத்தி கிரி என்னும் மலை மீது வரதராஜ பெருமாள்  அருள்பாலிக்கிறார். பிரம்மாவின் வேண்டுதலுக்கிணங்க பக்தர்களுக்கு வரதராஜ பெருமாளாக காட்சியளிக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருவேன் என்று கூறிய அத்திவரதர், கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள ஆனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் நாலுகால் மண்டபத்தில் வைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

எப்போதும் வற்றாத திருக்குளத்தினருகே வெள்ளிப் பேழைக்குள் சயனக் கோலத்தில் பிரம்ம தேவரால் வைக்கப்பட்ட அத்திவரதரின் திருக்காட்சியைக் காண காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஒருவரின் ஆயுள்காலத்தில் ஓரிரண்டு முறை மட்டுமே பார்க்க சாத்தியமுள்ள அத்திவரதர், வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் காட்சி தர இருக்கிறார். வாய்ப்பு உள்ளவர்கள் அத்திவரதரை நேரில் கண்டு தரிசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x