Published : 27 Jun 2019 11:01 AM
Last Updated : 27 Jun 2019 11:01 AM
விநாயகரின் தோற்றம் பற்றிய கதையைப் பார்ப்போம். சக்தி தன் உடலில் ஊறிவரும் சந்தனத்தை உருட்டித் திரட்டி அதிலிருந்து விநாயகனை உருவாக்கினாள் என்பதுதான் கதை. இந்தக் கதை நம்மில் பெரும் பாலோருக்குத் தெரியும். விநாயகருடைய தோற்றத்தின் அடிப்படை பற்றிப் பார்ப்போம்.
சிவன் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னாலேயே உள்ள, பிரபஞ்சத்தின் அடிப்படையான நிர்க்குணப் பிரம்மத்தின் குறியீடு. சக்தியைப் பெண்ணுருவமாகக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் உருவாக்கி உருக்கொடுப்பது பெண்மையின் செயலல்லவா?
சக்தியின் சுழற்சி
சக்தி ஒரு பெண் அல்ல. பெண்மையின் சாந்நித்தியம். பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் சக்தி, சிவனுடன் ஒன்றியிருக்கிறது. அப்போது அசைவேதுமற்று, குணபேதங்களற்று, பொருள் அற்று, அளவுகள் அற்று, கால-வெளியற்று, எல்லையற்ற விரிவாக நிறைந்திருக்கிறது பிரம்மம். அதில் முதலில் ஒரு புள்ளியில் சக்தி ஒரு படைப்பதிர்வாகத் தோன்றி வெளிப்படுகிறது. அந்தப் புள்ளியைச் சுற்றிச் சக்தியின் சுழற்சி தொடங்குகிறது.
அந்தச் சுழற்சியின் கோடுகள் அனுபவத்தின் அடிப்படையான கால-வெளியைக் கட்டுகின்றன. கால-வெளி இல்லாமல் அனுபவம் இல்லை. எந்த ஒரு அனுபவமும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு நேரத்தில்தானே நிகழ்கிறது? இவ்வாறில்லாத அனுபவம் எதுவும் நமக்குத் தெரியாது. கனவு என்னும் அனுபவத்தில்கூட ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு நேரத்தில்தான் இருக்கிறோம்.
கால-வெளி அமைப்பு உருவானதும் சக்தியின் சுழற்சி புதிய பரிமாணங்களை மேற்கொள்கிறது. இப்போதுதான் பொருள் தோன்றுகிறது. சக்தி ‘பொருள்‘ என்னும் நிலையை அடைகிறது. பொருள் என்பதை ஓளி, ஒலி என்றுகூட அர்த்தம் கொள்ள வேண்டும்.
முதல்முறையாகச் சக்தியின் அதிர்விலிருந்து பொருள் ஊறி வருகிறது. பொருள் இன்னும் வடிவம் கொள்ளவில்லை. பொருட் கள் உருவாகவில்லை. உலகம் உருக்கொள்ளவில்லை. பிரபஞ்சம் தோற்றம் கொள்ளவில்லை.
இவ்வாறு சக்தியின் அதிர்விலிருந்து முதலில் தோற்றம் கொண்ட பொருள்தான் விநாயகன். ஆதிப்பொருள் அவன். பொருள் வடிவம் கொள்ளத் தொடங்கிய பிறகுதான் பலவித நுட்பமான சிக்கல்கள் ஏற்பட்டன. விநாயகன் சிக்கல்கள் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவன்.
சிக்கல்களின் தோற்றத்தையும் அவை உருக்கொள்ளும் விதங்களையும் அறிந்தவன். சிக்கல்கள், தடைகள் (விக்னங்கள்) அனைத்துக்கும் முந்தையவன். அதனால்தான் சிக்கல்களையும் இடர்களையும் நீக்குவதற்கு அவனை வேண்டுவது வழக்கமாக இருக்கிறது. அவன் விக்னேஸ்வரனாக இருக்கிறான். உண்மையில் விநாயகன் ஒரு ஆள் இல்லை. ஒரு பிரக்ஞை நிலை.
படைப்பின் பல நிலைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். நாம் நம் புலன்களால் காணும் இந்த உலகம் படைப்பின் நான்காவது கட்டம்; கடைசிக் கட்டம். இதற்கு முன்னால் மூன்று கட்டங்கள் உண்டு.
முதல் கட்டம் பரம். இது படைப்பாற்றலின் உள்ளார்ந்த நிலை. இந்தக் கட்டத்தில் எதுவும் கிடையாது. எந்த விதமான அசைவும் கிடையாது. அனைத்தும் அகவயமாக இருக்கிறது.
இரண்டாவது கட்டம் பச்யந்தி. இது ஒளி விழித்துக்கொள்ளும் நிலை என்று சொல்லலாம். பார்வையின் தொடக்கம். சுத்தப் பிரக்ஞை. குவிபடாத உள்ளொளி.
மூன்றாவது கட்டம் மத்யமம். இந்தக் கட்டத்தில் உள்ளொளி புத்தி என்னும் மையத்தில் குவிகிறது. அறிதல் என்பது இப்போதுதான் சாத்தியமாகிறது.
நான்காவது கட்டம் வைகரி. இந்தக் கட்டத்தில்தான் படைப்பு வெளிப்படையாகிறது. புலன்களால் அறிய முடிவதாகிறது. நாம் உலகம், பிரபஞ்சம் என்று அழைக்கும் அமைப்பு உருவாகிறது. அனுபவம் தோன்றுகிறது.
முதல் கட்டம் வெளித் தெரியாத வேர். இரண்டாவது கட்டம் வளர்ந்து மேலெழும் தண்டு. மூன்றாவது கட்டம் மலர்ந்து விரியும் பூக்கள். நான்காவது கடைசிக் கட்டம் பழுத்த கனி.
கேட்கக் கூடிய சொல்
வாக்கு என்று சொல்கிறோமே அது இதுதான். முதல் கட்டம் மௌனம். இரண்டாவது கட்டம் எண்ணம். மூன்றாவது கட்டம் மனத்தினுள் எழும் சொல். நான்காவது கட்டம் வெளியே உச்சரிக்கும் சொல். மற்றவர்களுக்குக் கேட்கக்கூடிய சொல்.
முதல் கட்டம் பரிமாணம் இல்லாத புள்ளி. இரண்டாவது கட்டத்தில் புள்ளி நீண்டு கோடாகிறது (நீளம்). ஒற்றைப் பரிமாணம். மூன்றாவது கட்டத்தில் கோடு செங்கோணமாகத் திரும்பி இரட்டைப் பரிமாணமான (அகலம்) தளம் உருவாகிறது. நான்காவது கட்டத்தில் கோடு மறுபடியும் செங்குத்தாக உயர்ந்து மூன்றாவது பரிமாணமான (உயரம்) கனம் தோன்றுகிறது. முப்பரிமாண உலகம் வெளித் தெரிகிறது.
முதல் கட்டம் தூய சக்தி. இரண்டாவது கட்டம் ஆதிப் பொருள். மூன்றாவது கட்டம் மனத்தில் ஏற்படும் வடிவம். நான்காவது கட்டம் கண்ணுக்குப் புலப்படும் உருவம்.
பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் இருந்து அதன் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நிலைகளின் சாட்சியாக இருக்கிறார். ஈசனிடமிருந்து ஞானத்தின் சாரமான அந்த மாங்கனியைப் பெறுவதற்காக அனைத்துக்கும் மூலமான சிவ-சக்தியைச் சுற்றிவந்தாலே போதுமென்ற உண்மையை அவர் எடுத்துக்காட்டினார்.
முருகனை அவர் தோற்கடித்து மாங்கனியைப் பெற்றார் என்று பார்க்க வேண்டியதில்லை. முருகன் என்னும் பிரக்ஞை நிலையின் மகத்துவம் வேறு. அதன் நோக்கம் வேறு. பிரக்ஞையில் குடிகொண்டு அதன் சமநிலையைத் தொடர்ந்து பாதித்துவரும் இருண்ட சக்திகளை அழித்து, சமநிலையைக் காப்பது முருகனின் வேலை.
படைப்பு முறையை அறிந்தவர்
படைக்கப்பட்ட பிரபஞ்சம் சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடு. காலவெளிப் பரிமாணத்தில் வெளிப்பட்டுத் தோற்றம் கொண்டு இயங்குவது. அதை அனுபவம் கொண்டு புரிந்து கொள்வது காலத்தின் ஓட்டத்தில் நடக்கும் பயணம்.
ஆனால் காலவெளிக்கு அப்பால் அதற்கு ஆதாரமாக நிற்கும் எல்லையற்ற, குணங்களைக் கடந்த பரம்பொருளின் முதல் அம்சமான ஆண்மையும் பெண்மையும் ஒருங்கிணைந்த நிலையை உணர்ந்துகொண்டால் ஞானத்தின் ஊற்றைக் கைக்கொண்டுவிட முடியும் என்னும் உணர்தலின் நாயகன் விநாயகன்.
வாழ்வின் ஒவ்வொரு பொருளும் அனுபவமும் மேற்சொன்ன பரம்-பச்யந்தி-மத்தியமம்-வைகரி என்னும் நான்கு நிலைகளையும் கடந்துதான் வருகிறது. விநாயகர் முதல் கட்டமான ஆதிசக்தியிலிருந்து இரண்டாவது கட்டமான ஆதிப்பொருள் தோன்றும்போது உருவாகிய நிலையின் குறியீடாக விளங்குபவர். பிரபஞ்சத்தின் படைப்பு முறைமை முழுவதும் அறிந்தவர். வாழ்க்கை ஓட்டத்தின் நான்கு நிலைகளையும் அறிபவர். அதனால்தான் அவர் அருளால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் நீங்கும் என்று நம்புகிறோம்.
(மேலும் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :
sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT