Last Updated : 01 Mar, 2018 10:54 AM

 

Published : 01 Mar 2018 10:54 AM
Last Updated : 01 Mar 2018 10:54 AM

துளி சமுத்திரம் சூபி 19: மகத்துவம் மிக்க மகிழ்ச்சி எது?

எண்ணங்களின் திரட்சியை மனம் எனலாம். உடலைப் போன்று மனதை மறைப்பதற்கு உடை இல்லாததால் அது ஒப்பனையுமற்று மிதக்கிறது. ஆனால், அதன் உருவைக் காணும் திறன் நம் கண்களுக்கு இருப்பதில்லை. அது பேசும் மொழியைக் கேட்கும் சக்தி நம் காதுகளுக்கு இருப்பதில்லை. ஒருவேளை காதுகளுக்கு அது சாத்தியப்பட்டாலும் அந்த மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் நம் அறிவுக்கு இருப்பதில்லை.

இருப்பினும், மனம் நம் புலன்களின் அனுமதி இன்றி நம்முடன் தொடர்ந்து ஒரு உரையாடலைக் காலம் காலமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. உரையாடலில் சில நம்மைக் கீழே இழுத்துச் சென்று நம் திறனின் எல்லைகளைச் சுருக்கும்; சில நம்மை உயர்ந்த தளத்துக்கு எடுத்துச் சென்று நமது எல்லைகளை விரிவாக்கும். அவ்வாறு நம்மைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்துத் தன் எழுத்துகளில் நிரம்பியிருக்கும் உயர்ந்த எண்ணங்களின் மூலம் இன்றும் நம்மை மேலே அழைத்துச் செல்லும் ஞானி ஹாத்திம் அஸம்.

ஞானியாக இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் நடக்கும் போர்களில் நாட்டின் மற்ற குடிமகன்களைப் போன்று போரில் அவர்கள் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. ஒரு முறை போரின்போது, ஒரு துருக்கியரால் ஹாத்திம் கீழே வீழ்த்தப்பட்டார். தன் மார்பின்மீது அமர்ந்திருந்த அந்த துருக்கியரின் கையில் இருக்கும் வாளைப் பொறுமையாகப் பார்த்தார். அந்தக் கை வாளை ஏந்தியபடி வேகத்துடன் மேல் நோக்கிச் சென்று கீழே இறங்கியது.

ஹாத்திம் அனைத்தையும் எந்த உணர்ச்சியுமின்றி ஒரு மூன்றாம் மனிதரைப் போன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பாய்ந்துவந்த அம்பு அந்த துருக்கியரின் மார்பில் பாய்ந்து அவரை வீழ்த்தியது. நிதானமாக எழுந்த ஹாத்திம், “என்னை நீ கொன்றாயா? அல்லது உன்னைத்தான் நான் கொன்றேனா?” என்று கேட்டபடியே சென்றார். எந்த முடிவையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தப் பொறுமையும் அர்ப்பணிப்பும் பற்றற்ற தன்மையும் அளவற்ற நம்பிக்கையும்தாம் ஹாத்திமின் சிறப்புகள்.

ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்கும் பாக்தாத்

ஆப்கானிஸ்தானில் இருந்த பால்க் நகரை ‘நகரங்களின் தாய்’ என்று அரேபியர்கள் சொல்வார்கள். செங்கிஸ்கானால் சூறையாடப்பட்டு நிர்மூலமாக்கப்படும்வரை, அந்நகரம் வளத்திலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியது. அதன் சிறப்புக்கு மேலும் சிறப்பூட்டும்வண்ணம் ஏழாம் நூற்றாண்டில் ஹாத்திம் அஸம் அங்கே பிறந்தார். எல்லா ஞானிகளையும் போன்று சிறுவயது முதல் இவரும் அறிவில் சிறந்து ஆன்மிகத்தில் ஊறி ஞானத்தின் பிழம்பாக ஜொலித்தார். ஆன்மிகத் தாகத்தைத் தீர்ப்பதற்காக பாக்தாத் வந்தவர், அங்கு ஷகீக் பல்கீயின் முதன்மையான சீடரானார்.

அவருக்கென்று பெரிய ஆசைகளோ பெரிய லௌகீகத் தேவைகளோ பெரிய கடமைகளோ எப்போதும் இல்லாமல் இருந்தது. இல்லாமல் என்பதைவிட அவருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது என்பதுதான் சரி. அவருக்கு வாழ்க்கையை அதன் போக்கில் எந்த எதிர்பார்ப்புமின்றி வாழும் தனித் திறமை இருந்தது. அவரின் இந்தப் பண்பால் ஏமாற்றங்களும் ஆதங்கங்களும் அவரை அண்ட முடியாமல் அவர் வாழ்நாள் முழுவதும் எட்டியே நின்றன.

“நேசிக்கப்படாத மனிதர் என்பவர் இந்த உலகினில் எங்கும் இல்லை. நம் உயிரினும் மேலாகச் சிலரை நாம் நேசிக்கிறோம். அவர்கள் அருகிலிருக்க வேண்டும் என ஏங்கித் தவிக்கிறோம். அதற்காகக் கடுமையாகப் போராடுகிறோம். ஆனால், இந்தப் நேசிப்பு எதுவரை தொடர்கிறது? அந்த அருகிலிருப்பவர் அளிக்கும் மகிழ்ச்சியும், உடல் நலன் குன்றும்போது அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் அக்கறையும், மரணப் படுக்கையில் இருக்கும்போது சோகத்தில் மூழ்கி உருகித் தவிக்கும் பரிதவிப்பும் அவர்கள் உயிருடன் உள்ளவரைதானே தொடர்கிறது.

அவர்கள் மறைந்தபின் மண்ணுக்குள் அவர்களை அடக்கம் செய்தபின் அவை தொடர்வதில்லையே? எல்லா வளமும் நலமும் பெற்று சுற்றம் சூழ வாழும்போது காண்பிக்கப்படும் நேசமும் அக்கறையும் அவர்கள் எல்லாம் இழந்து வெறும் உடலாக மண்ணில் புதையுண்ட பிறகு தொலைந்து போவதேன்? இவ்வாறு தொலைந்துபோவது காலங்காலமாக நடந்து கொண்டுதானே உள்ளது? அற்ப ஆயுசில் தொலைந்து போகும் இந்த நேசமே நமக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும்போது, நாம் தனியாக மண்ணில் புதையுண்ட பிறகும் நம்மை நேசத்துடன் தொடர்பவர் அளிக்கும் மகிழ்ச்சி எந்த அளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும்?

எனவே, இந்த மகத்துவமிக்க மகிழ்ச்சியை நாடிச் செல்லாமல், அற்ப ஆயுசு கொண்ட நேசங்களை நாடிச் செல்வதில் வாழ்க்கையை வீணடிப்பது மடமை” என்று எண்ணியவர் தன் வாழ்நாளைக் கடவுளுக்காக மட்டும் என முற்றிலும் அர்ப்பணித்தார்.

யாரால் பறிக்க முடியும்?

அவரைச் சந்திப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். அவர்கள் பெரும்பாலும் செல்வத்திலும் புகழிலும் பெயரிலும் நாட்டம் மிகுந்தவர்களாக இருப்பது அவருக்கு ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அதைவிட ஆச்சரியத்தை “உலக வாழ்வில் தங்களின் பாதுகாப்புக்கும் நிம்மதிக்கும் அவை தேவை” என்று அவர்கள் சொன்னது ஏற்படுத்தியது.

அவர்களை நோக்கி “உங்களுக்கென்று வழங்கப்பட்டிருப்பதை உங்களிடமிருந்து யாரால் பறித்துக்கொள்ள முடியும்? அதே போல் பிறருடையதில் துளியேனும் உங்களால் பறித்துக்கொள்ள முடியுமா? எனவே, போதும் என்ற மனதைக் கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி ஏதுமில்லை.

மரணம் எந்த நொடியிலும் நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வாழ்வது உங்கள் கடமை, உங்கள் வாழ்வை யாராலும் வாழ முடியாது. எனவே, மகிழ்ச்சியுடன் வாழ்வை ஒரு நொடி கூட வீணடிக்காமல் வாழ்ந்து அனுபவித்து மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக எப்போதும் இருங்கள்” என்று சொல்லிக் கீழ்நோக்கிச் சென்ற அவர்களின் வாழ்க்கை பயணத்தை மேல் நோக்கித் திருப்பிவைப்பார்.

ஹாத்திம்மின் சிறப்புகள் மன்னரின் கவனத்தைப் பெற்றது. அவரைக் காண விரும்பிய மன்னர், ஹாத்திம்மை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்தார். அரண்மனைக்குள் நுழைந்த ஹாத்திம், மன்னரை நோக்கி “துறவியாகிய மன்னரே” என்று பேசத் தொடங்கினார். ”நான் துறவி அல்ல, மன்னன். இந்த நாடே எனக்குக் கீழ்தான் உள்ளது, துறவியாகிய உன்னையும் சேர்த்து” என்று ஹாத்திமிடம் சற்றுக் கண்டிப்புடன் மன்னர் சொன்னார்.

“பெயரும் புகழும் செல்வமும் நிறைந்த இந்த உலக வாழ்வு எவ்வளவு அற்பமான எளிதான ஒன்று? நானோ அதில் திருப்தியடைய முடியாமல் பேராசை கொண்டு திரிகிறேன்.

ஆனால், நீங்களோ இந்த அற்ப வாழ்வில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்து நிம்மதியாக வாழ்கிறீர்கள். அப்படியானால் நீங்கள்தானே பெரிய துறவியாக இருக்க முடியும்?” என்று கேட்டு மன்னரின் ஞானக் கண்ணைத் திறந்துவைத்தவர், 852-ம் ஆண்டில் திர்மதியின் அருகில் உள்ள வாஷ்ஜர்த் என்ற இடத்தில் உடலை இழந்து எண்ணங்களால் இவ்வுலகில் நிலைபெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x