Published : 29 Mar 2018 10:17 AM
Last Updated : 29 Mar 2018 10:17 AM
மயிலாப்பூர் போகலாமா? அறுபத்து மூவர் வீதியுலாவை தரிசிப்போமா. வாங்களேன்... அறுபத்து மூவரையும் தரிசித்துச் சிலிர்ப்போம்.
சென்னை மயிலாப்பூரில் முக்கியமான விழாக்கள், வருடம் முழுவதும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானதொரு விழா அறுபத்து மூவர் திருவீதியுலா. பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்துநாள் விழாவாக அமர்க்களப்படும். அந்த விழாவில், தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டமென மக்கள் கூடி நின்று சிலிர்க்கும் விழா... அறுபத்து மூவர் வீதியுலா விழா.
இதோ... இன்று குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், அறுபத்து மூவர் எனும் குருமார்களைக் கண்ணாரத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம்.
இத்தனை சிறப்பு கொண்ட திருமயிலையைப் பற்றி இந்தநாளில் அறிந்துகொள்வோமா?
மயிலாப்பூர் என்பதே மயிலை என மருவியது. மயிலையே கயிலை கயிலையே மயிலை என்றும் அழகுறச் சொல்வார்கள், இந்தத் தலத்தை! மயில், ஆர்ப்பு, ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானதாம்! அதாவது, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடம் என்று அர்த்தம். மயில்கள் ஆரவாரம் செய்த ஊர் என்றும் கொள்ளலாம்.
அதுமட்டுமா? மயூராபுரி, மயூராநகரி என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து பிரம்மாண்ட புராணம் விவரிக்கிறது. ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட அற்புதமான திருத்தலம். எனவே மயூராபுரி, மயிலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
சோமுகாசுரன் என்பவன் வேதங்களை களவாடிச் செல்ல, மகாவிஷ்ணு அவனை அழித்து, வேதங்களைக் காத்தருளிய தலம் இது. எனவே புராணத்தில் வேதபுரி என்று மயிலாப்பூருக்குப் பெயர் உண்டு.
சுக்ராச்சார்யர், இங்கே உள்ள சிவலிங்கத்திருமேனியை தினமும் வழிபட்டு, தவம் இருந்தாராம். இதனால் சிவனருளைப் பெற்று, உமையவள் சகிதமாக சிவனாரின் திருக்காட்சியைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்ற திருத்தலம். எனவே, சுக்ராபுரி என்றும் மயிலாப்பூருக்குப் பெயர் இருந்திருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்!
ஒருகாலத்தில், இந்தப் பகுதியிலும் திருவொற்றியூரிலும் காபாலிகர்கள் அதிகம் நிறைந்திருந்தார்கள். அவர்கள் இங்கே உள்ள சிவனாருக்குப் படையலிடுவதும், வேண்டுவதும் வழக்கம். எனவே இந்தத் தலம், காபாலீச்சரம், கபாலீச்சரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. மேலும் சிவனாரின் திருநாமமும் ஸ்ரீகபாலீஸ்வரர் என்றானதாகச் சொல்கிறது புராணம்!
கி.பி.7&ம் நூற்றாண்டில், மயிலாப்பில், மயிலாப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டது. அடுத்து 200 வருடங்களுக்குப் பிறகு, திருமயிலை, மயிலாபுரி என அனைவராலும் அழைக்கப்பட்டதாக நந்திக் கலம்பகம் எனும் நூல் விவரிக்கிறது.
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஜெயங்கொண்டார் என்பவரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணியில், பண்டைய மயிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, 13&ம் நூற்றாண்டில்... மார்கோபோலோ, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி என்று இந்தத் தலத்தையும் ஊரையும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
இப்படி புராண - புராதனப் பெருமைகள் கொண்ட மயிலையில்... கயிலையே மயிலை எனும் அற்புதத் தலத்தில், மாலையில் அறுபத்து மூவர் விழாவை தரிசிப்போம். அடியார்க்கு அடியேன் என்று திகழும் கபாலீஸ்வரரின் அருளைப் பெறுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT