Last Updated : 02 Mar, 2018 09:50 AM

 

Published : 02 Mar 2018 09:50 AM
Last Updated : 02 Mar 2018 09:50 AM

சிஷ்யனாகவே இருப்போம்!

அவர் பெயர் ஹாசன். மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவர். இறக்கும் தருணத்தில் இருந்த அவரிடம், ‘‘உங்களின் குரு யார்’’ என்று யாரோ கேட்டார்கள்.

மரணத்தை நெருங்கும் வேளையிலும் மெள்ளப் புன்னகைத்தார் ஹாசன். ‘‘இந்தக் கேள்வியை இவ்வளவு தாமதமாகக் கேட்கிறீர்களே. நான் இறந்து கொண்டிருக்கிறேனே...’’ என்றார்.

உடனே கேள்வி கேட்டவர், ‘‘நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள். இன்னும் சுவாசிக்கிறீர்கள். உங்களால் பேச முடிகிறது. குருவின் பெயரை மட்டும் சொன்னால் போதும்’’ என்றார். அவருக்கு குருவைத் தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது.

குரல் செருமி, பேச ஆரம்பித்தார் ஹாசன்.

‘‘ஆயிரக்கணக்கில் எனக்கு குருமார்கள் உண்டு. அவர்களின் பெயரைச் சொல்லவே பல காலமாகும். அவர்களைப் பற்றிச் சொல்ல வருடங்களாகும். இருந்தாலும் நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதால் மூன்று பேரை மட்டும் சொல்கிறேன்.

முதலில் சொல்லப்போவது ஒரு திருடரைப் பற்றி. பாலைவனம் ஒன்றில் வழி தெரியாமல் தத்தளித்தேன். ஒரு கிராமத்துக்கான வழியைக் கண்டறிந்து, அந்த ஊரை அடைந்த போது நள்ளிரவாகிவிட்டிருந்தது. கடைகள் ஏதுமில்லை. எல்லா வீடுகளும் சாத்தியிருந்தன. தெருக்களில் நடமாட்டமே இல்லை. யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் மருகினேன். அப்போது ஒரு வீட்டில் நுழைவதற்கு முயன்ற திருடனைப் பார்த்தேன்.

அவனிடம் ‘‘இந்த ஊரில் தங்குவதற்கு இடமேதும் இருக்கிறதா?’‘ என்று கேட்டேன். உடனே அவன், ‘‘இந்த நள்ளிரவில் தங்க இடம் கிடைப்பது கடினம். நீங்கள் சூஃபி ஞானி போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், என் வீட்டில் தங்கிக் கொள்ளலாம்’’ என்றான்.

கொஞ்சம் தயக்கம் எனக்கு. அடுத்த விநாடியே சுதாரித்துத் தெளிந்தேன். ஆமாம்... அந்தத் திருடன், சூஃபியைப் பார்த்து பயப்படவில்லை. நான் ஏன் திருடனைப் பார்த்துப் பயப்படவேண்டும். ‘‘உன் வீட்டில் தங்குவதற்கு சம்மதம்’’ என்றேன் அவனிடம்!

அந்தத் திருடனை அவன் இவன் என்று சொல்ல மனம் வரவில்லை எனக்கு. அவர் மிகுந்த அன்பு கொண்டவர். அருமையானவர். அந்த ஊரில் சிலநாட்கள் இருக்க முடிவு செய்தேன். அவர் வீட்டில் ஒருமாதம் தங்கினேன். அந்த முப்பது நாட்களில், ஒவ்வொரு நாள் இரவிலும்... ‘‘உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். தியானம் செய்யுங்கள். ஓய்வெடுங்கள். நான் என் வேலையைப் பார்க்கக் கிளம்புகிறேன்’’ என்பார். திரும்பி வரும்போது, ‘‘ஏதாவது கிடைத்ததா’’ என்பேன். ‘‘கிடைக்கவே இல்லை. நாளை எப்படியும் கிடைக்கும் பாருங்கள்’’ என்பார் உறுதியுடன்!

அவர் நம்பிக்கை இழந்து நான் பார்க்கவே இல்லை. அந்த முப்பது நாளும், அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவரின் மகிழ்ச்சி குறையவே இல்லை. ‘‘இன்று கிடைக்கவில்லை. கடவுள் விரும்பினால் ஏதேனும் கிடைக்கும் எனக்கு. இந்த ஏழைக்கு உதவும்படி, உங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்’‘ என்றார்.

ஹாசன் தொடர்ந்து விவரித்தார். ‘‘நான் பல வருடங்களாக தியானம் செய்தேன். எதுவும் நிகழவில்லை. ஒருகட்டத்தில் மனம் உடைந்தேன். நம்பிக்கையையும் இழந்தேன். சகலத்தையும் நிறுத்திவிடலாமா என்று கூட யோசித்தேன். அப்போது அந்தத் திருடனைத்தான் நினைத்துக் கொள்வேன். அவரின் நம்பிக்கை, என்னையும் தொற்றிக் கொண்டது. எனக்குள் நம்பிக்கயை விதைத்த அவரின் திசை நோக்கி வணங்கினேன். அவரே என் முதல் குரு!

‘‘அப்படியெனில் இரண்டாவது குரு யார்’’ என்று கேட்டார் அந்த நபர்.

‘‘என் இரண்டாவது குரு நாய்’’ என்றார் ஹாசன். அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அவரே தொடர்ந்தார். ‘‘ஒருமுறை எனக்கு கடும் தாகம். நா வறண்டு, ஆற்றை நோக்கி நடந்தேன். கரையை அடைந்தேன். அப்போது நாய் ஒன்று கரைக்கு வந்தது. அதற்கும் தாகம் போல. தண்ணீரைக் குடிக்க குனிந்தது. தண்ணீரில் அந்த நாயின் பிம்பம் தெரிந்தது. ஆனால், வேறொரு நாய் நிற்பதாக நினைத்துப் பயந்தது. குரைத்தது. பிம்பமும் குரைத்தது. இன்னும் பயந்துபோய், தயங்கித் தயங்கித் திரும்பியது. ஆனால் தாகம். நிரம்பித் தளும்பியபடி இருந்த ஆற்றை ஏக்கமாகப் பார்த்தது. மீண்டும் கரை தொட்டது. குனிந்து தண்ணீர் குடிக்க முனைந்தது. அந்த பிம்ப நாய் இன்னமும் நிற்பதாக நினைத்தது. ஆவேசமாக தண்ணீருக்குள் பாய்ந்தது. அந்த பிம்பம் கலைந்தது. காணாமல் போனது. போதும் போதும் என அளவுக்கு தண்ணீரைக் குடித்தது. நீந்தி விளையாடியது. அதுவரை பயந்த நாயா இது. இப்படி துள்ளி விளையாடுகிறதே!

அப்போதுதான் உணர்ந்தேன். எவ்வளவு பயம் இருந்தாலும் துணிவுடன் செயலில் இறங்கினால், பயம் காணாமல் போய்விடும் என்பதை அந்த நாய் சொன்ன பாடமாக, வேதமாக உணர்ந்தேன். தயக்கத்தாலும் குழப்பத்தாலும் பின்வாங்க நினைக்கும் போதெல்லாம் அந்த நாய்தான் நினைவுக்கு வரும். ஆகவே என் இரண்டாவது குரு அந்த நாய்’’ என்றார் ஹாசன்.

எல்லோரும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர், மீண்டும் பேசத் துவங்கினார்.

‘‘என் மூன்றாவது குரு... ஒரு குழந்தை.

இப்படித்தான் ஒருமுறை, ஒரு ஊருக்குச் சென்றேன். அப்போது அந்தக் குழந்தை, ஏற்றிய மெழுகுவத்தியை ஏந்தியபடி சென்று கொண்டிருந்தது.

அந்தக் குழந்தையிடம்... அதாவது அந்தச் சிறுவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது எனக்கு. ‘‘இந்த மெழுகுவத்தியை நீயா ஏற்றினாய்’‘ என்று கேட்டேன். ஆமாம் என்று உற்சாகம் பொங்கச் சொன்னான் அந்த வாண்டு.

உடனே நான், ‘‘மெழுகுவத்தி வெறுமனே இருந்தது. நீ ஏற்றினாய். திரியில் ஒளி வந்துவிட்டது. இந்த ஒளி எங்கிருந்து வந்தது. தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டேன் அவனிடம்.

அந்தச் சிறுவன் உடனே என்ன செய்தான் தெரியுமா?

என் கேள்வியைக் கேட்டவுடனேயே கலகலவெனச் சிரித்தான். சிரித்துக் கொண்டே மெழுகுவத்தியை ஊதினான். ஒளியை அணைத்தான். என்னைப் பார்த்தான். ‘‘இதுவரை இருந்த ஒளி, இப்போது எங்கே போனது என்று சொல்லுங்கள்’’ என்று கேட்டான்.

அவ்வளவுதான். அந்த நிமிடமே எனக்குள் இருந்த கொஞ்சநஞ்ச ஆணவமும் தூள்தூளானது. எல்லாம் அறிந்தவன் என்பதே மாயை என உணர்ந்தேன். இன்னும் அறிந்து கொள்ள அநேகம் இருக்கிறது, இந்த உலகில் எனப் புரிந்துகொண்டேன். அந்தச் சிறுவன்தான் என் மூன்றாவது குரு’‘ என்றார் ஹாசன்.

‘‘நண்பர்களே. வாழ்வில் நாம் சந்திக்கிற ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ள ஏராளமானவை இருக்கின்றன. புத்தியின் வாசலைத் திறந்து வைத்திருந்தால், கற்றுக்கொண்டே இருக்கலாம். இன்னும் ஏராளமான குருமார்கள் இருக்கிறார்கள். பேசத்தான் இப்போது நேரமில்லை’’ என்றார் ஹாசன்.

‘‘நிறைவாக உங்களுக்கு ஒன்று... குரு என்று தனியே எவருமில்லை. எல்லோரும் நமக்கு குரு. அதற்கு நாம் எப்போதும் சீடனாக இருக்கவேண்டும். இதுவே முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x