Published : 10 Mar 2018 02:48 PM
Last Updated : 10 Mar 2018 02:48 PM
ஒருவரின் வாழ்க்கையில் இருந்தே நமக்கான பாடங்களையும் போதனைகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஏற்று நடக்கலாம். வழி என பின்பற்றலாம். வாழ்க்கையாகவே அமைத்துக் கொண்டு இனிதே வாழலாம்.
“ஆசையே துன்பத்திற்குக் காரணம் எனும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்தம் என்னும் சமயத்தை தோற்றுவித்து முக்தி அடைய எளிய வழியைக் காட்டியவர்.
புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இதை புத்த பூர்ணிமா என்கின்றனர்.
கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் என்கிற கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டனர். அவரின் தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி.
சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னர். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள அழகிய நகரம். புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.
புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இறந்துபோனார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா எனும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.
சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். உலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி யோசித்தார். ஒரு நாள் இவர் வெளியே சென்று கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக பாதித்தன.
வயது முதிர்ந்த மனிதர், நோயாளி ஒருவர், பிணம் ஒன்று, துறவி ஒருவர்... எனக் கண்டார். இதனால் மனம் கலங்கினார். வருந்தினார். யோசித்தார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. அப்படியே கண்டிருந்த போதும் வெகுவாக எதுவும் இவரை இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. இவைதான்... சித்தார்த்தன் என்பவரை, புத்தராக்கி நமக்கு வழங்கியது!
புத்தரின் வாழ்வே நம் வாழ்க்கைக்கான போதனை... வழிகாட்டி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT