Last Updated : 08 Mar, 2018 10:37 AM

 

Published : 08 Mar 2018 10:37 AM
Last Updated : 08 Mar 2018 10:37 AM

பெண்ணின் பெருவழிப் பாதை நேசம்

ன்ம விடுதலை அடைய இரண்டு வழிகள் உள்ளன. இரண்டே வழிகள்தாம் உள்ளன. ஒன்று தியானம், மற்றொன்று அன்பு. அவற்றை நீங்கள் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் எனலாம். ஒன்று மெய்யறிவைத் தேடும் பாதை, மற்றொன்று அர்ப்பணிப்பின் பாதை. இந்த இரு வழிகள் மட்டுமே.

இவற்றில் ஆணின் பாதை தியானம், பெண்ணின் பாதை அன்பு.

அன்பு செலுத்த இன்னொருவர் அவசியம். ஆனால், தனிமையில் நிகழ்வது தியானம். தனிமையில் இருக்கும்போது ஆண் தன்னைத்தானே ஆழ்நிலையில் தேடி மோட்சம் அடைகிறான். ஏனென்றால், தனிமையை நாடுவது ஆணின் இயல்போடு ஒன்றியிருக்கிறது. ஆனால், பெண்ணுக்குத் தனிமை என்பது கொடுமை. தனிமைச் சிறையில் அகப்படப் பெண் விரும்புவதே இல்லை. அவளுடைய பிறவியோ அன்பு செலுத்த ஏங்குகிறது. அன்பைப் பொழிய அவளுக்கு மற்றொருவர் அவசியம். யாருமின்றித் தியானம் செய்யலாம். அதேமாதிரி அன்பு செலுத்த முடியுமா?

பெண் என்னும் சக்தி தியான நிலையை அன்பின் வழியாக அடைகிறது. ஆண் என்னும் சக்தி அன்பின் பெருவெளியைத் தியானத்தின் வழியாக அடைகிறது.

புத்தரைப் பேரன்பாளராக மாற்றியது தியானம். பன்னிரண்டாண்டுகள் கழித்து வீடு திரும்பும் புத்தரைக் கண்டதும் அவருடைய மனைவி யசோதரா ஆத்திரம் அடைகிறார். அவளிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்கொள்ளாமல் நடுநிசியில் மாயமாகிப்போனவர் புத்தர். அவள் உறங்கிக்கொண்டிருக்கும்போது தப்பிச் சென்ற கோழை.

புத்தர் ஏன் சொல்லாமல் போனார்

யசோதராவிடம் அனுமதி கோரியிருந்தால் அவரே புத்தரைப் போக அனுமதித்திருப்பார். அத்தனை உறுதிபடைத்த பெண் அவர். ஆனால், எங்கே யசோதரா அழுதுவிடுவாரோ மனமுடைந்துபோவாரோ என்ற அச்சத்தில் புத்தர் அவரிடம் அனுமதி கோரவில்லை.

இங்கு உண்மையான அச்சம் யசோதரா பற்றியது அல்ல. தன்னைப் பற்றியதுதான். புத்தரின் ஆழ்மனத்தில்தான் அந்த அச்சம் குடிகொண்டிருந்தது. தன்னுடைய மனைவி மனமுடைவதைப் பார்த்தபின்பும் அவரைவிட்டு ஓடுவது குரூரமான செயல் என்பதால், அவர் உறங்கும்போதே புத்தர் தப்பிச்சென்றார். பின்னர், பன்னிரண்டாண்டுகள் கழித்துத் திரும்பிவந்தார்.

அன்று யசோதரா எழுப்பிய கேள்விகள் அநேகம். அவற்றில் ஒன்று: எங்கேயோ சென்று நீங்கள் அடைந்தவற்றை இங்கேயே, என்னுடனேயே வாழ்ந்து அடைந்திருக்க முடியாதா? நீங்கள் நினைத்ததை அடைந்துவிட்ட நிலையில், இப்போது இதற்குப் பதில் சொல்லுங்கள்.

அத்தருணத்தில் புத்தர் மவுனம் சாதித்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், யசோதராவின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியும். யசோதராவுடன் வாழ்ந்து புத்தரால் விடுதலை அடைந்திருக்க முடியாது. காரணம், அவர் யசோதராவை ஆழமாகக் காதலித்தார். அவர்களுடைய உறவு இணக்கமானது. ஒருவேளை காதல் அற்ற உறவை அவர்கள் கொண்டிருந்தால், புத்தர் யசோதராவுடன் வாழ்ந்துகொண்டே உள்ளொளியை அடைந்திருக்க முடியும். அதில் சிக்கல் இருந்திருக்காது. மற்றொருவர் கரையோரத்தில் நிற்கும்போது உறவுகொள்வதில் சிக்கல் இல்லை. அங்கு இருப்பது இன்னொரு உடல் மட்டுமே தவிர மனம் இல்லை.

ஆனால், புத்தர் ஆழமாகக் காதல் வயப்பட்டவர். காதலிக்கும் ஆண் தியான நிலையை அடைவது கடினம். அவர் தனிமையை நாடும்போதெல்லாம் அன்பு கொண்ட மற்றொருவரை மனம் சுற்றிவரும். இந்த அச்சத்தின் காரணமாகத்தான் புத்தர் தப்பியோடினார். இது குறித்து இதுவரை எவரும் பேசியதில்லை.

பெண் ஆற்றல் வேறுபட்டது

ஆனால், உண்மையாகக் காதல் கொண்டதாலேதான் தனது வீட்டையும் தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் விட்டுச்சென்றார் புத்தர். காதல் வயப்பட்ட நீங்கள் உங்களுடைய வேலையில் ஆழ்ந்துபோகும்போது உங்களுடைய காதலியை மறந்துவிடுகிறீர்கள். ஆனால், வேலை இன்றி சாவகாசமாக இருக்கும்போதெல்லாம் காதலி நினைவுக்குவந்துவிடுகிறார்.

இப்படித்தான் புத்தர் மனதை யசோதரா ஆக்கிரமித்திருந்தார். யசோதரா மட்டுமே புத்தரின் மனத்தில் குடிகொண்டிருந்தபோது, அவரால் தெய்வீகத்தைக் கண்டறிய முடியவில்லை. வெற்றிடத்தை யசோதரா நிரப்பிய பிறகு தெய்வீகத்தன்மை நுழைய அங்கு இடம் ஏது!

ஆக, காதல் / அன்பு வழியாக ஆண் ஆன்ம விடுதலை அடைய முடியாது. பெண் ஆற்றலிலிருந்து ஆண் ஆற்றல் முற்றிலுமாக வேறுபட்டது. தியானத்தின் வழியாகத்தான் ஆணால் அன்பு கொள்ள முடியும். முதலில் அவன் தியான நிலையை அடைய வேண்டும். பிறகு, அவனால் தன்னுடைய காதலியிடம் உள்ள தெய்வீகத்தையும் தரிசிக்க முடியும்.

ஆனால், இதற்கு நேர்மாறான அனுபவம் பெண்ணுக்கு நிகழ்கிறது. பெண்ணால் தனிமையில் தெய்வீகத்தை அடைய முடியாது. அவளைத் தனிமை வாட்டும். தனிமை, பேரானந்தம் கொள்ளச்செய்யும் என்று நீங்கள் நினைத்தால் அது பெண்ணுக்குப் பொருந்தாது.

தனிமையின் மகத்துவம் காலங்காலமாகப் பறைசாற்றப்பட்டதற்குக் காரணம் அதை நாடியவர்கள் புத்தர், மகாவீரர், இயேசு, முகமது நபி போன்ற ஆண்களே. ஆண்களாகிய அவர்கள்தாம் தனிமையை நாடினார்கள். அதன் வழியாக ஆன்ம விடுதலை அடைந்தார்கள். சரித்திரமும் படைத்தார்கள்.

ஆனால், தனிமையில் விடப்படும் பெண் வேதனையுறுகிறாள். காதலன் இருக்கும்பட்சத்தில் அவனுடைய நினைவிலேயேகூட அவள் மகிழ்ச்சியில் திளைக்கிறாள். காதலிப்பது, காதலிக்கப்படுவது அவளைச் செழிப்பூட்டுகிறது. அது அவளுக்கு நுண் உணவு. அன்பு இல்லாதபோது பெண் வறட்சி அடைகிறாள், மூச்சுத்திணறிப்போகிறாள், அடையாளம் தெரியாமல் சுருங்கிப்போகிறாள். பெண் ஒருபோதும் தனிமையை இனிமையாகக் கருத முடியாது.

அன்பின் வழி பக்தி கொள்ளும் நிலையைப் படைத்தது பெண் மட்டுமே. அவளுக்கு ஆத்மார்த்தமான கற்பனைக் காதலனே போதுமானது. நிஜக் காதலன்கூட அவசியமில்லை. மீராவுக்கு கிருஷ்ணன் போதும். அவனுடைய நினைப்பே போதுமானது. அந்த ஏகாந்தத்திலேயே அவள் ஆடுவாள்; பாடுவாள்; உயிரோட்டமாக வாழ்ந்துவிடுவாள்.

தமிழில்: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x