Published : 15 Mar 2018 10:23 AM
Last Updated : 15 Mar 2018 10:23 AM
மனம் என்பது ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது தனியாக மனமென்று ஒரு பொருளில்லை. ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து, ஜகம் என்று ஒரு பொருள் அந்நியமாயில்லை. தூக்கத்தில் நினைவுகளில்லை, ஜகமுமில்லை; பகல் கனவுகளில் நினைவுகளும் ஜகமும் உள்ளன. சிலந்திப் பூச்சி எப்படித் தன்னிடமிருந்து, வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்கொள்கிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுங்கிக்கொள்கிறது.
மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும். ஆகையால், ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது. சொரூபம் தோன்றும்போது ஜகம் தோன்றாது. மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும். தான் என்பது ஆத்மசொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும். தனியாக நிற்காது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது.
விசாரித்தறியும் மார்க்கம்
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவது எதுவோ அதுவே மனமாம். நான் என்னும் நினைவு தேகத்தில் முதலில் எந்த இடத்தில் தோன்றுகிறது என்று விசாரித்தால், இருதயத்தில் என்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக்கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மையின்றி முன்னிலை படர்க்கைகள் இருக்காது.
மனம் எப்படி அடங்கும்?
நான் யாரென்னும் விசாரணையாலேயே மனம் அடங்கும்; நான் யாரென்னும் நினைவு, மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து பிணம்சுடும் தடிபோல் முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாகும்.
உபாயம் என்ன?
பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்திசெய்வதற்கு எத்தனிக்காமல் அவை “யாருக்கு உண்டாயின?” என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழுந்தால் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோர் எண்ணமும் கிளம்பும்போதே “இது யாருக்கு உண்டாயிற்று?” என்று விசாரித்தால் “எனக்கு” என்று தோன்றும். “நான் யார்” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்துக்குத் திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படிப் பழகப் பழக மனதுக்குத் தன் பிறப்பிடத்தில் இறங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கிறது. சூட்சுமமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாக வெளிப்படும்போது ஸ்தூலமான நாம ரூபங்கள் தோன்றுகின்றன. இருதயத்தில் தங்கும்போது நாம ரூபங்கள் மறைகின்றன.
மனத்தை வெளிவிடாமல் இருதயத்தில் வைத்துக்கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது அந்தர்முகம் என்று பெயர். இருதயத்திலிருந்து வெளியிடுவதற்குத்தான் பகிர்முகம் என்று பெயர். இவ்விதமாக மனம் இருதயத்தில் இறங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய், எப்பொழுதும் உள்ள தான் மாத்திரம் விளங்கும். எதைச் செய்தாலும் நான் என்னும் அகங்காரமற்றுச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
வேறு உபாயங்கள்
விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களால் அடக்கினால், மனம் அடங்கினால் போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாமத்தாலும் மனம் அடங்கும். ஆனால், பிராணன் அடங்கியிருக்கும் வரையில் மனமும் அடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வசப்பட்டு அலையும்.
மனதுக்கும் பிராணனுக்கும் பிறப்பிடம் ஒன்றே, நினைவே மனதின் சொரூபம்; நான் என்னும் நினைவே முதல் நினைவு; அதுவே அகங்காரம். அகங்காராம் எங்கிருந்து உற்பத்தியாகிறதோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகிறது. ஆகையால், மனம் அடங்கும்போது பிராணனும், பிராணன் அடங்கும்போது மனமும் அடங்கும்.
ஆனால், சுழுத்தியில் (ஆழ்துயில்) மனம் அடங்கியிருந்த போதிலும் பிராணன் அடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும் தேகமானது மரித்து விட்டதோவென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. ஜாக்கிரத்திலும் (விழிப்புநிலை) சமாதியிலும் மனம் அடங்குகிறபோது பிராணன் அடங்குகிறது. பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும். மரண காலம்வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக்கொண்டிருந்து, உடல் மரிக்கும் காலத்தில் அதனைக் கவர்ந்துகொண்டு போகிறது. ஆகையால், பிராணாயாமம் மனத்தை அடக்க சகாயமாகுமே அன்றி மனோநாசம் செய்யாது.
பிராணாயாமத்தைப் போலவே மூர்த்தித் தியானம், மந்திர ஜபம், ஆகார நியமம் என்பவையும் மனத்தை அடக்கும் சகாயங்களே.
மூர்த்தித் தியானத்தாலும் மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை அடைகிறது. மனமானது சதா சலித்துக் கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றாமல் பற்றிக்கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்தில் பழக்கினால் அதையே பற்றிக்கொண்டிருக்கும்.
மனம் அளவற்ற நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகிறது. நினைவுகள் அடங்க அடங்க ஏகாக்கிரத் தன்மை அடைந்து, அதனால் பலத்தை அடைந்த மனதுக்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களினும் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்ம விசாரத்துக்கு சகாயம் உண்டாகிறது.
நல்ல மனம், கெட்ட மனம்
‘முடியுமா, முடியாதா?’ என்னும் சந்தேக நினைவுக்கு இடம் கொடுக்காமல், சொரூபத் தியானத்தை விடாப்பிடியாய்ப் பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாவியாய் இருந்தாலும், ‘நான் பாவியாய் இருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?’ என்று ஏங்கி அழுது கொண்டிராமல், தான் பாவி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூபத் தியானத்தில் ஊக்கமுள்ளவனாக இருந்தால் அவன் நிச்சயமாக உருப்படுவான்.
நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே! வாசனைகளே சுபம் என்றும் அசுபம் என்றும் இரண்டு விதம். மனம் சுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும்.
பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாகயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக்கொருவன் கொடுப்பது எல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான்.
இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடாது ஒழிவான்? தானெழுந்தால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக்கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும் இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT