Published : 08 Mar 2018 10:35 AM
Last Updated : 08 Mar 2018 10:35 AM
நிகழ்கின்ற எல்லாவற்றுக்கும் பொறுப்பு கோள்களின் ஆட்டமும் ஐம்பெரும் பூதத்து இயற்கையுந்தான்; அவற்றின் இயங்கு விதிகளுக்குத் தப்பி ஏதும் நிகழ்ந்துவிட முடியாது என்கிறது ஒரு தரப்பு.
வானம் துளங்கில்என்? மண்கம்பம் ஆகில்என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில்என்? தண்கடலும்
மீனம் படில்என்? விரிசுடர் வீழில்என்? வேலைநஞ்சுஉண்டு
ஊனம்ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே
(அப்பர் தேவாரம், IV:112:8)
-என்று எதிராடுகிறது மற்றொரு தரப்பு. வானமே இடிந்து விழுந்தாலும் என்ன? நிலமே நடுநடுங்கிக் கிடுகிடுத்தாலும் என்ன? மலைகளெல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்ப் போனாலும் என்ன? மீன்கள்கூட வாழத் தகாததாய்க் கடல் தன் குணம் மாறினாலும் என்ன? செஞ்சுடர்க் கதிரும் வண்ண நிலவும் சிதறித் தெறித்தாலுந்தான் என்ன? கடல் கக்கிய நஞ்சை உண்ட பிறகும் ஒரு கோளாறும் இல்லாமல் இருக்கிற ஒருவனுக்கு ஆட்பட்டு நிற்கிற உத்தமர்கள் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்.
மேலை அளவை இயலில் (Western Logic) தருக்கமுறை கற்பிக்கும்போது ஓர் எடுத்துக்காட்டோடு கற்பிப்பார்கள்:
நஞ்சு உண்டவர்கள் எல்லோரும் சாவார்கள்;
இவன் நஞ்சு உண்டிருக்கிறான்;
எனவே இவன் சாவான்.
நஞ்சு சாவைத் தரும் என்றால் நஞ்சுண்டவன் யாராக இருந்தாலும் சாக வேண்டும். இங்கோ ஒருவன் கடலின் நஞ்சும் பாம்பின் நஞ்சுமான ஆலகால நஞ்சை ஒருசேர உண்ட பிறகும் ஊனம் ஒன்றுமில்லாமல் இருக்கிறான். அப்படியென்றால் ‘கோளாறு’ என்று சொல்லப்படுகிற இயற்கையின் இயங்கு விதிகள் பலிக்கவில்லை என்றுதானே பொருள்?
ஊனமில்லாமல் தப்பிப் பிழைத்தவன் இயங்கு விதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்றுதானே பொருள்? இயற்கையின் இயங்குவிதிகளை ஒருவன் தனக்காக வெல்ல முடியுமென்றால், தன்னையே நம்பியிருக்கிற பிறருக்காகவும் அவற்றை வென்றுதர அவனால்முடியுந்தானே ? அத்தகைய தலைவனுடைய ஆட்கள் நாங்கள்; ஆகவே எங்களுக்கு அச்சமில்லை என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர்.
சூழும் அரவத் துகிலும், துகில்கிழி கோவணக் கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச, அஞ்சாது அருவரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரிபொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்.
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
(அப்பர் தேவாரம், IV:2:9)
அரவத்தையே ஆடை மாதிரிப் போர்த்திக்கொண்டவன்; துணியைக் கிழித்துக் கோவணமாக உடுத்திக்கொண்டவன்; மலை போன்றதொரு யானை எதைக் குறித்தும் அஞ்சாமல் வந்து மோதியபோது, அதைக் கொன்று அதன் தோலை உரித்தவன்; கங்கையை அணிந்த கங்காதரன் என்று சொல்கிறீர்களே, அவன் கங்கைக் கரையில்தான் கங்காதரன்; எங்கள் திருவதிகையை ஒட்டி ஓடும் கெடிலக் கரையிலோ கெடிலம் அணிந்த கெடிலாதரன்; நாங்கள் அவனுடைய அடியார்கள்; எனவே, எதைக் கண்டும் நாங்கள் அஞ்சுவதுமில்லை; எங்களை அச்சுறுத்துமாறு வருவதும் ஏதுமில்லை.
ஆசீவகர்களின் அடையாளம் யானை
இங்கே, யானையைக் கொன்று தோலுரித்தார் சிவனார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘கோள்களும் அவற்றின் இயங்குவிதிகளும் வலிமையானவை’ என்று பேசுகிற ஆசீவகர்களின் அடையாளச் சின்னம் யானை; அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து, அதற்குள் தான் புகுந்துகொண்டு, யானைத்தோல் போர்த்த சிவமாகிறார் சிவனார்—என்றால் ஆசீவகத்தின் ‘ஊழ்’ என்ற கருதுகோளைச் சைவம் ‘சிவம்’ என்ற கருதுகோளைக்கொண்டு இடம்பெயர்த்துப் பொருள் மாறாட்டம் செய்கிறது எனலாம்.
இது ஒரு கருத்தியல் அதிகாரப் பெயர்ச்சி. ஒரு கருத்து காலூன்றி அரசாண்டு கொண்டிருக்கும் இடத்தில், அதன் சாயலையே போர்த்திக்கொண்டு மற்றொரு கருத்து அரசாளச் செய்கிற முயற்சி. எளிமையாக இப்படிக் கருதிப் பார்க்கலாம்: மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கொள்கைக் கட்டமைப்பு ஒன்றை முன்வைத்து, ஒரு மாநிலத்தை அரை நூற்றாண்டுக் காலமாக, இடையறாமல் ஆள்கிறது ஓர் இயக்கம் என்று வையுங்கள்; அந்த இயக்கத்தை அகற்றித் தன் ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறது அதற்கு நேர்மாறான மற்றொரு இயக்கம். என்ன செய்யும்?
மக்களிடம் செல்வாக்குப் பூண்ட அந்தக் கொள்கையின் சாயலைத் தானும் தன்மீது அள்ளிப் பூசித் தன் உண்மை நிறத்தை மறைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயலும். சான்றாக, மொழியின்மீது உணர்ச்சிகரமான ஈடுபாடு கொண்டவர்கள் மாநிலத்தின் மக்கள் என்க. ஆட்சியை விரும்பும் மாற்று இயக்கத்துக்காரர்களின் மொழிக்கொள்கையோ முற்றிலும் வேறானதும், முரணானதும் என்க.
இருந்தபோதிலும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக, தங்களுடைய முரண்பாட்டு மொழிக்கொள்கையை மறைத்துக்கொண்டு, மாநில மொழியை விதந்து பேசுவார்கள்; மாநில மக்கள் மொழியின்மேல் கொண்டிருக்கிற அளப்பரிய ஈடுபாட்டைப் பாராட்டுவார்கள். இப்படியாக, மக்கள் விரும்பும் முகமூடியை இட்டுக்கொண்டு அதிகாரம் பெறப் பையவே முயல்வார்கள்.
ஊழை இடம்பெயர்ப்பவர்
யாருக்கும் இரங்காத, எவருக்கும் பின்செல்லாத, முகம் பார்த்து விதி மாற்றிக்கொள்ளாத ஊழை அதிகாரத்திலிருந்து இடம்பெயர்த்து, வேண்டி வந்தவர்க்கு இரங்குகிற, முன்பின் பார்த்துச் செய்கிற, நச்சினார்க்கு இனிய சிவன் வந்து அதிகாரத்தில் உட்கார்ந்துகொள்கிறார். தேவையென்றால் கோள்களின் ஆட்டத்தை நிறுத்திவைப்பார்; விலக்கிவிடுவார்; பிழைபடவும் வைப்பார்.
வேய்உறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன்,
மிகநல்ல வீணைதடவி,
மாசறு திங்கள், கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,
சனி, பாம்புஇரண்டும்உடனே,
ஆசுஅறு நல்லநல்ல, அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
(சம்பந்தர் தேவாரம் II:85:1)
-என்று வெளிப்படப் பாடுகிறார் திருஞான சம்பந்தர். மூங்கிலைப் போன்ற தோளுடையவளைத் தன் பாகமாகக்கொண்டவன், நஞ்சுண்டவன், வீணை தடவுகிறவன், நிலவையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன், அவன் என் உள்ளத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய இந்தக் கோள்கள் என்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்பது கோள்களும் அட்டூழிய, அராஜகங்கள் செய்யக்கூடியவைதாம் என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால் இந்த அட்டூழியம், அராஜகமெல்லாம் நடுநின்ற நாயகனாகிய தலைவனை நம்பாதவர்களுக்கு மட்டுந்தான்; நம்புகின்றவர்களுக்கு அவை செய்வது அட்டூழியமன்று; தொண்டூழியம்.
‘சட்டம் தன்போக்கில் செயல்படும்’ என்பது நம் நாட்டில் அரசியலார் அடிக்கடி உதிர்க்கும் திருவாசகம். தன்போக்கில் இயங்க வேண்டிய சட்டம், குற்றவாளிகள் அனைவரையும் சமமாகக் கருதிக் கொட்டடியில் அடைத்து வைக்க வேண்டிய சட்டம், அதிகாரத் தரப்பினர் அடைபடும்போது மட்டும் கொட்டடிக் கம்பிகளை நெளித்துக்கொடுத்து அவர்களைத் தப்புவிப்பதில்லையா?
காட்டாற்று வெள்ளம்போலத் தன்போக்கில் அடித்துக்கொண்டு போகும் ஊழுக்கு இறைவனைக்கொண்டு அணைகட்டி, அப்பருக்கும் சம்பந்தருக்கும் அடியெடுத்துக் கொடுத்தவர் திருமூலர்.
ஆனை துரத்தில்என்? அம்புஊடு அறுக்கில்என்?
கானத்து உழுவை கலந்து வளைக்கில்என்?
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே.
(திருமந்திரம் 2851)
யானை என்னை அச்சுறுத்தித் துரத்தினாலும் என்ன? அம்பு என்னைத் துளைத்து அறுத்தாலும் என்ன? காட்டுப்புலி என்னை வழிமறித்தாலுந்தான் என்ன? கவலையில்லை. நீ மட்டும் எந்த வகையில் வேறானவன் என்று கேட்பீர்களேயானால், ஐயன்மீர்! நானும் உங்களைப் போல ஊரில்தான் வாழ்கிறேன்; ஆனால், நான் வாழும் ஊர் நீங்கள் வாழும் ஊரன்று. நானும் உங்களைப் போல உழுதுதான் பிழைக்கிறேன்; ஆனால், நான் உழும் உழவு நீங்கள் உழும் உழவன்று. எந்த ஊர் என்பவரே, என் ஊர் மெய்யூர்; அங்கேதான் இறைவனும் இருக்கிறான். எவ்வுழவு என்பவரே, என் உழவு அறிவுழவு; அதில் என்னைக் கைபழக்குகிறான் இறைவன்.
தன் வினையை, தன் முயற்சியைக் கைவிட்டுவிடாமல், இறைவனையும் உள்ளே இழுத்துக்கொண்டு, வினைக்கும் ஊழுக்கும் இடைநிலை காண முயல்கிறாரா திருமூலர்?
(அறிவோம் இன்னும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT