Published : 21 Mar 2018 06:15 PM
Last Updated : 21 Mar 2018 06:15 PM
ஆ
ண்டவன் சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ பரமபடி ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்சார்ய பரம்பரையில் 11-வது பட்டமாகப் பொறுப்பேற்றிருந்தவர். ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ பரமபரி ஸ்ரீமத் மைசூர் ஆண்டவன் பரமபதித்த பிறகு 1989-ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் தலத்தில் துரீய ஆஸ்ரமத்தை அலங்கரித்தார். 1935-ம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமிக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார். ஏழாம் வகுப்புவரை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேதபாடசாலையில் சேர்ந்தார்.
1948-ல் மதுராந்தகம் அஹோபில மடம் பாடசாலையில் சேர்ந்து ஓராண்டு வாசித்து வந்தார். பின்னர் அரசு நடத்திய நுழைவுத் தேர்வில் சிறப்பாகத் தேறி ஸ்ரீபெரும்புதூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் சிரோமணி படித்தார். அங்கேயே தமிழ் வித்வான் படிப்பையும் முடித்து, ஆந்திர மாநிலத்தில் ஜீடிகல், ஆல்வால் முதலிய இடங்களில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பள்ளிகளில் பணியாற்றினார்.
பின்னர், செங்கல்பட்டு ஜில்லா போர்டு பள்ளியில் தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார். நியாய, தர்க்க, அலங்கார சாஸ்திரங்களில் மட்டுமல்லாது, ஜோதிடம், இசை, இலக்கியம், நாடகம், ஆயுர்வேதம், தளிகை, ஹடயோகம், தையல், ஸாமுத்ரிகா லட்சணம், விஞ்ஞானம், அபிநயம், சிலம்பம், விவசாயம், வாஸ்து சாஸ்திரங்களில் வல்லவரான இவர், தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் பேசுவதிலும் எழுவதிலும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
இல்லறத்துக்குப் பின்னர் துறவறம்
1960-ல் மனைவி, ஏழு குழந்தைகளைப் பிரிந்து, துறவறம் மேற்கொண்டார். பல தர்ம செயல்களைச் செய்து சமுதாயத்துக்குப் பெரும் தொண்டு புரிந்தார். ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமத்தையும் அது சார்ந்த பிருந்தாவனங்களையும் புதுப்பித்தல், ஸ்ரீரங்கம் ஜெயநகர் ஆஸ்ரமத்தின் புனருத்தாரணம், மும்பை புறநகர் பகுதியில் பல்வேறு கோயில் திருப்பணிகள், ஸ்ரீரங்கத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு சன்னிதி உற்சவங்கள் நடத்த தேர், வாகனங்கள் முதலிய ஏற்பாடு, ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தைப் புதுப்பித்தல், காஞ்சிபுரம் சன்னிதித் தெருவில் உள்ள ராமானுஜ தயாபாத்ரம் திருமாளிகையைப் புதுப்பித்தல், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ ஆதிவராஹன் கோயில் யாகசாலையைப் புதுப்பித்தல், கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயில் வசந்த மண்டபத்தைப் புதுப்பித்தல், நாச்சியார் கோயில் தேர் புதுப்பித்தல், திருவஹீந்திரபுரம் ஆஸ்ரமம் மட்டும் பாடசாலை அமைக்கும் பணி என்று இவர் நலப் பணிகள் பலவற்றை ஒருங்கிணைத்தவர்.
ஸ்ரீமத் ஆண்டவன், ஜூன் 1989-ல் பீடத்துக்கு எழுந்தருளிய நாளிலிருந்து ஸ்ரீ ரங்கநாத பாதுகா மாதாந்திர இதழை நடத்திவந்தார். வறுமைக்கோட்டில் வாழும் பிராமணச் சிறுவர்களுக்கு சமஷ்டி உபநயனத்தைத் தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வந்தார். தனது ஆச்சார்யன் ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் நினைவாக இலவசமாக ஆண்டுதோறும் பலருக்குக் கண் சிகிச்சைக்கு உதவிவந்தார். ஸ்ரீரங்கநாத பாதுகா வித்யாலயா ட்ரஸ்ட் (1968), ஸ்ரீபாதுகா சாரிடீஸ் (1972), எஸ்.எஸ்.ஏ.பி. பாலாஜி மந்திர் (1983), ஸ்ரீமத் ஆண்டவன் ட்ரஸ்ட் (1983), ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி (1996), ஸ்ரீமத் பகவத் பாஷ்யகார ததீயாராதனம் ட்ரஸ்ட் மூலம் பல உதவிகளைச் செய்துவந்தார்.
தொலைவழி உபன்யாசங்கள்
ஏழைப் பெண்களுக்குத் திருமாங்கல்யம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு இலவசக் கல்வி, மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள், திருமலை ஆஸ்ரமத்தில் அனைவருக்கும் அன்னதானம், திருவையாறு அம்மாள் அக்ரஹார பாடசாலைக்கு நிதியுதவி என்று அவர் செய்த நற்பணிகள் ஏராளம்.
அமெரிக்காவில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் அமைத்து ஸ்ரீ ராமானுஜ மிஷனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் சீடர்களுக்கு ஸ்ரீ வேணுகோபால பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ பாஷ்யகாரர் ஆகியோரின் உத்ஸவ மூர்த்திகளையும் சாளக்கிராமங்களையும் அளித்து அருளினார். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சீடர்களுக்காகத் திருப்பாவை, சதுஸ்லோகீ, ஸ்தோத்ரரத்நம் முதலிய டெலி உபன்யாசங்களை நிகழ்த்தினார்.
ஸ்ரீமத் ஆண்டவன் நூலகம்
சென்னையிலுள்ள ஆஸ்ரமத்தில் 15,000-க்கு மேலும் 1,800-ம் வருடத்தில் இருந்து பதிப்பித்த சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மணிப்பிரவாள மொழிகளில் உள்ள புத்தகங்கள் அடங்கிய நூலகத்தைத் தொடங்கினார். 28 பிரிவுகள், 110 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டதாக இந்நூலகம் அமைக்கப்பட்டது. அத்வைதம், ஆழ்வார்கள், பாகவதம், தர்ம சாஸ்திரங்கள், எம்பெருமானார், மகாபாரதம், மருந்து, மீமாம்ஸா, நியாய வைஸேஷிகம், புராணங்கள், தூப்புல் தேசிகன், வேதாந்தங்கள் உட்படப் பல தலைப்புகள் கொண்ட புத்தகங்களை உள்ளடக்கியது இந்நூலகம்.
சாதனையாளர்களுக்கு விருதுகள்
சமுதாயத்துக்காகப் பிரதி பலன் கருதாது உழைக்கும் மாபெரும் சாதனையாளர்களுக்கு ஸேவா ரத்னா விருது மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவித்தார். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘உயிர் வாழ உண்டி அளிப்போன்’ விருது, டாக்டர் வி.சாந்தாவுக்கு ‘மன்பதை வாழ வைக்கும் மாதரசி’ விருது, டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்துக்கு ‘கண்ணொளி வழங்கும் கனவான்’ விருது மற்றும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் எச். ராமகிருஷ்ணனுக்கு ‘ஊனமுற்றோரை வாழ வைக்கும் உண்மையாளன்’ விருது வழங்கி சிறப்பித்தார்.
ஸ்ரீமத் ஆண்டவன் வேதபாடசாலைகள் மூலம் சிறுவர்களுக்கு வேதங்கள் இலவசமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. வேதங்களும் அதன் சாரங்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேர வேண்டும். அப்படி நடந்தால்தான் இந்தியா வலுவான தேசமாகும் என்று பாடசாலை ஆச்சார்யர்களுக்கு சுவாமிகள் அறிவுறுத்துவார்.
ஏழை, எளிய மக்களுக்காக இவர் நடத்திவரும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்குக் கல்வி, தங்குமிடம், உணவு முதலானவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT