Published : 29 Mar 2018 11:04 AM
Last Updated : 29 Mar 2018 11:04 AM
எ
ல்லாமே திட்டமிட்டபடி இனிமையாக வாழ்வில் நடந்தால், சாமானியனால் எப்படி ஞானியாக முடியும்?
அன்று அந்த மனிதர் வழக்கம்போல் காலையில் தன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மனிதன், “சந்தையில் கடைகள் எல்லாம் தீயில் பொசுங்கிக்கொண்டிருக்கின்றன. சாவகாசமாக நடந்து செல்லாமல், ஓடிச்சென்று கடையைக் காப்பாற்ற முயலுங்கள்” என்று சொன்னான். ஏதோ நினைத்தவராக அவனிடம், “ஒரு வழியாக நான் விடுதலை அடைந்துவிட்டேன்” என்று சொல்லியவாறு தன்னை விநோதமாகப் பார்த்த அந்த மனிதனைக் கடந்து சென்றார்.
வணிகத்தில் நேர்மை
அவ்வாறு கடந்து சென்றவர் பழைய பொருட்களை வாங்கி விற்கும் ஒரு வணிகர். அவரது பெயர் ஸரி அஸ்ஸகதி. அவரது கடை பாக்தாத்தில் இருந்த பெரிய சந்தையில் இருந்தது. அவர் கடையின் முன்புறம் எப்போதும் ஒரு திரை தொங்கும். தொழுகை நேரங்களில் அத்திரையை இழுத்து விட்டுத் தொழுகையில் ஈடுபடுவார். பேராசை இல்லாததால் தன் தொழிலை நேர்மையாகச் செய்தார். அந்தக் கடையில் விற்கும் பொருட்களால் அவருக்குக் கிடைக்கும் லாபம் ஐந்து சதவீதத்துக்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லை.
ஒரு முறை பாதாம் பருப்புக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. வியாபாரிகளும் மக்களும் அதை எந்த விலைக்கும் வாங்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னிடம் இருந்த பாதாம் பருப்பை ஐந்து சதவீத லாபத்துக்குத்தான் விற்றார். இவருடைய நேர்மை மற்ற வியாபாரிகளுக்குத் தலைவலியைக் கொடுத்தது. சிலர் புத்திமதி என்ற பெயரில் அவருக்குச் சிறிது பேராசையை ஊட்ட முயன்றனர். ஆனால், அவர்களின் சொற்களால் அந்த மனிதருடைய செவிகளின் விளிம்பைக்கூட எட்ட முடியவில்லை.
இவ்வாறு, இனிதாகச் சென்று கொண்டிருந்த அந்தச் சாமானிய வியாபாரியிடம்தான் அவர் கடையை நெருப்பின் கோர நாக்குகள் பொசுக்குகின்றன என அந்த மனிதர் சொன்னார். ஆனால், சந்தையை அடைந்தவரின் கண்களுக்கு அங்கே பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு இவருடைய கடையைத் தவிர எல்லாக் கடைகளும் எரிந்து நாசமாகியிருந்தன. தன் கடை எரியாமல் இருப்பது குறித்து ஒரே ஒரு நொடிதான், அதுவும் உள்ளூரதான் மகிழ்ந்தார். அந்த ஒரு நொடிதான் சாமானியரான அவரை ஞானியாக மாற்றியது.
பரதேசி ஆனார்
கடைகளைத் தீயின் கோர நாக்குகளுக்குப் பலி கொடுத்தவர்கள் துன்பத்தில் உழலும்போது தன்னால் எப்படித் தன் கடையின் நிலையை எண்ணி மகிழ முடிந்தது என்ற எண்ணம் அவரைக் குற்றவுணர்வில் மூழ்கடித்தது. அப்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும்படி எதிரில் வந்த மனிதன் “உங்களுடைய நேர்மையே உங்களுடைய கடையைக் காப்பாற்றியுள்ளது” என்றார்.
பிறரின் வலியை உணராமல் தன் மகிழ்ச்சியை உணர முடிந்த தன்னிடம் நேர்மை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? முதலில் தான் எப்படி மனிதாக இருக்க முடியும் என்று அழுதபடி, தன் கடையையும் சொத்துகளையும் உடைமைகளையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்துப் பரதேசி ஆனார். அதன் பின் துறவறம் பூண்டு தீவிர ஆன்ம விசாரணையில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் குற்றவுணர்வில் குறுகி, துன்பத்தில் உழன்று, வேதனையில் வாடியவர் மஃரூபுல் கர்கீயிடம் சென்று சரணடைந்தார். இவரின் செயல்களைக் கேள்விப்பட்ட மஃப்ரூல், “இவ்வுலக வாழ்வை வெறுப்பானதாக மாற்றிய இறைவனுக்கு முதலில் நீ நன்றி சொல். விரைவில் அவன் உன் கவலைகளைக் களைந்து உன்னைத் துன்பங்களிலிருந்து மீட்டெடுப்பான்” என்று அஸ்ஸகத்தை நோக்கிச் சொன்னார். அந்த வார்த்தைகள் அக்கணத்தில் அவருக்குத் தேவைப்பட்ட தெளிவை வழங்கின.
அதன்பின் சிறிது நாட்களிலேயே மஃரூபுல் கர்கீயின் முதன்மையான சீடராக மாறினார். தன் தாகம் தீரும்வரை அவரிடமிருந்து ஆன்மிக ஞானத்தை அள்ளிப் பருகினார். தன் தாகத்தின் அளவு தீர்க்க முடியாத அளவு பெருகியதும் அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார். ஆன்மிகத் தாகத்தைத் தணிப்பதற்காக உலகெங்கும் பயணப்பட்டார். பின் தனிமையில் அமர்ந்து கடின நோன்புகளையும் இடைவெளியற்ற தொழுகைகளையும் தன் வாழ்வாக்கினார்.
தனது 98-ம் வயதில் 867-ம் வருடம் மறைந்த அஸ்ஸகதி, பாக்தாத்தில் புகழ்பெற்று விளங்கிய சூபி ஞானிகளின் வட்டத்தினுள் ஒளிர்ந்தவர்களில் முக்கியமானவராக இன்றும் திகழ்கிறார். அஸ்ஸகதியின் மருமகன்தான் பின் நாட்களில் பெரிதும் மதிக்கப்பட்ட சூபி ஞானியான ஜூனைதுல் ஆவார். அஸ்ஸகதியின் எழுத்துக்கள் மட்டுமல்லாமல், ஜூனைதுல்லின் எழுத்துக்களும் வாழ்வும் கூட அஸ்ஸகதியின் மேன்மைக்குச் சான்றாக நம்மிடையே இன்றும் உள்ளன.
“இறைவன் படைத்த அனைத்து உலகங்களில் வாழும் ஜீவராசிகளிலும் மனிதனைவிட பலம் குன்றியது எதுவும் இல்லை. இருப்பினும், அவை எல்லாம் கேள்விகள் ஏதுவுமின்றி கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றன. மனிதன் மட்டும் நல்லவனாக இருப்பானாயின் தேவ தூதர்கள்கூட அவனைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். ஆனால், அவன் சைத்தான்கள்கூட வெட்கப்படும் அளவுக்குத் தீயவனாக உள்ளான். கடவுளின் படைப்புகளில் உன்னதமானவனாகவும் வலிமையுடையவனாகவும் இருந்துகொண்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் எப்படி மனிதனால் இருக்க முடிகிறது?” என்ற அவரது கேள்விதான் அன்று பலருடைய வாழ்வை மாற்றியமைத்தது. இன்றும் மாற்றியமைக்கும் வல்லமையுடன் திகழ்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT