Published : 08 Mar 2018 09:38 AM
Last Updated : 08 Mar 2018 09:38 AM
திருப்பதி வேங்கடவனுக்கும் மதுரை கள்ளழகருக்கும் ஆண்டாளின் மாலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்கின்றன என்பது தெரியும்தானே!
ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் அதை ஏற்று இங்கே எழுந்தருளினார். வைணவர்களின் முக்கிய க்ஷேத்திரமாக, இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது.
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலி, சூரியன், தும்புருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் ஆகீயோரின் உருவங்கள் இருக்கின்றன.
விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிராகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று எல்லோரும் வந்து தரிசிக்க திறந்து வைக்கப்படுகின்றன.
திருப்பதியில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை பிரம்மோற்ஸவத்தின் போது, ஆண்டாள் மாலைதிருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணத்துக்கான பட்டுப் புடவை வருகிறது.
மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிந்துகொள்கிறார் என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT