Published : 21 Mar 2018 06:14 PM
Last Updated : 21 Mar 2018 06:14 PM
பாக்தாத்தில் இருந்த கர்க் எனும் பகுதியில் அதன் ஆளுநர் நகர்வலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கண்ட காட்சி ஒன்று அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவரது குதிரை வண்டியை நிறுத்தச் செய்தது. அங்கு மெத்தப் படித்த தோற்றம் கொண்டிருந்த மிடுக்கான மனிதர் ஒருவர் சாலையில் அமர்ந்து தன் கையிலிருந்த ரொட்டியைத் தெரு நாயுடன் பகிர்ந்து உண்டுகொண்டிருந்தார்.
அதுவும் பிய்த்த ரொட்டியின் முதல் துண்டை நாய்க்கும் மறு துண்டை அவரும் சாப்பிட்டது அவரை அருவருப்படைய வைத்தது. எரிச்சலும் கோபமும் தொனிக்கும் குரலில், அந்த மனிதரிடம், ‘என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இந்த மாதிரியான அருவருப்பான செயல்களில் ஈடுபடலாமா? உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?’ என்று சற்று அதட்டலுடன் கேட்டுள்ளார்.
அந்த மனிதர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ஆளுநரை நிமிர்ந்து பார்த்து,
“பசியில் ஏது ஏற்றத் தாழ்வு? பசியுடன் வாடும் உயிருடன் உணவைப் பகிர்வதில் என்ன அருவருப்பு? படைப்புகளை, உயர்வென்றும் தாழ்வென்றும் பிரித்துப் பார்க்கிறாயா? சரி, உன் பார்வையில் நாய் இகழ்ச்சியானது என்றால், அதன் பார்வையில் நீ யார்? கடவுளின் ஆளுமையையே உன் அகங்காரத் திமிரால் கேள்விக்கு உள்ளாக்குவது உனக்குப் புரியவில்லையா? எது அருவருப்பு? எனது செயலா? உனது கேள்வியா? நான் இங்கேயே இருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்.
ஆனால், நன்கு யோசித்து பதில் சொல்”என்றார். ஆளுநர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். ஆளுநரின் ஆன்மாவைத் துளைத்த அந்தக் கேள்விகளுக்குச் சொந்தக்காரரே மஃரூபுல் கர்கீ.
அபிலாஷைகள் அற்ற வாழ்க்கை
அவர் 750-ம் வருடம் பாக்தாத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்த சூபி ஞானி. சிறு வயதில் முதலில் அலி மூஸாவிடம் மெய்ஞானப் பாடங்களைக் கற்றார். அதன்பின் தாவூத் தாயியைச் சந்தித்து அவருடைய நிழலில் இருந்தார். அவருடைய ஆன்மிகத் தேடலின் ஆழம் யாரும் அறிய முடியாத ஒன்றாக இருந்தது.
அவருடைய இறை நம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டது அவருடைய கடவுளின் மீதான காதல் மனித அறிவுக்கு எட்டாதது. அவருடைய நேர்மையின் வலிமை அசைக்க முடியாதது. மஃரூபுலின் உலகம் மிகவும் எளிதான ஒன்று.
அது ஆரவாரம் ஏதுமற்று சமதளத்தில் நிசப்தமாகப் பரந்து விரிந்து செல்லும் ஆழமும் அகலமும் கொண்ட நதியைப் போன்று ஒருவித பரவச மயக்கத்தில் தவழ்ந்து சென்றது. அபிலாஷைகள் ஏதுமற்று ஒரு நாளைக் கடப்பதே நமக்கு இயலாத ஒன்று. ஆனால், அவர் வாழ்நாள் முழுவதும் அப்படித்தான் வாழ்ந்தார். வாழ்ந்தார் என்பதைவிடக் கடவுளின் மீதான காதலில் தன்னையிழந்து ஆன்மிகக் கடலில் சிலாகித்துக் கரைந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் தன்னுள் செல்லும் ஆழத்தின் அளவுக்கு ஏற்ப அவரிடமிருந்து எழுந்த ஆன்மிக ஒளிச் சுடரின் பிரகாசமும் அதிகரித்தது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அவருடைய உரையைக் கேட்பதற்கு மக்கள் அலை மோதினர். அவரிடம் ஞானத்தைக் கற்பதற்குச் சீடர்கள் பெருகினர். இறைவனை வணங்குவதற்கும் ஆன்ம விசாரணையில் ஈடுபடுவதற்கும் நேரம் போதாமல் சிரமப்பட்ட மஃரூபுல்-க்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
ஆனால், போதிப்பதைத் தன்னுடைய கடமை என்று எண்ணியதால் அவர் அந்தச் சுமையைத் தவிர்க்க முயலவில்லை. இகழ்ச்சியைக்கூட மஃரூபுல் தாங்கிக்கொள்வார். ஆனால், புகழ்ச்சியை ஒருபோதும் அவர் தாங்கிக்கொள்ளமாட்டார். அதனால்தான், ‘முகத்துக்கு நேரான புகழ்ச்சியை முதுகுக்குப் பின்னான இகழ்ச்சியைவிட மோசமானது’ என்று சொன்னார்.
மகிழ்ச்சியும் திருப்தியும் கடவுள்
“ஆசைகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்து இவ்வளவு கடினமாக ஏன் உங்களை வருத்திக்கொண்டு இறை வழிபாட்டில் ஈடுபடுகிறீர்கள்? மரண பயமா? மரணத்துக்குப்பின் என்ன நடக்கும் என்ற பயமா? நரக பயமா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “நான் எதையும் எனக்காகவோ பிறருக்காகவோ செய்யவில்லை. நான் எல்லாவற்றையும் கடவுளின் மீதான காதலாலேயே செய்கிறேன். நான் இப்போது பேசுவதுகூடக் கடவுளிடம்தான்.
ஆனால், நீங்கள் அதை உங்களுடன் பேசுவதாக நினைக்கிறீர்கள். என்னுடைய மகிழ்ச்சியும் திருப்தியும் எப்போதும் கடவுளைச் சார்ந்தது. அத்தகைய பேரானந்தத்தைச் சுவைத்த எவருக்கும் நீங்கள் கேட்ட கேள்விகளோ கற்பித்த காரணங்களோ ஒரு போதும் தோன்றாது. சுவாசிப்பதை நீங்கள் எப்போதும் உணர்ந்து கொண்டிருப்பதில்லையே?” என்று பதில் அளித்தார்.
ஒருமுறை உரையாற்றிவிட்டுத் தொழுகைக்குச் செல்லும்போது அவருடைய குரானையும் தொழுகை விரிப்பையும் ஒரு முதிய பெண்மணி திருடிக்கொண்டு ஓடினார். அதைக் கண்டு முதலில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவர், பின்பு சுதாரித்துக்கொண்டு அந்தப் பெண்மணியை விரட்டி மடக்கினார். “உங்கள் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று அந்தப் பெண்மணி கெஞ்சினார். மஃரூபுல் ஒன்றும் பதில் சொல்லாமல், சிறிது நேரம் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார்.
பின்பு அந்தப் பெண்ணிடம் “குரானை ஓதுவதற்கு உங்களுக்கு மகன் இருக்கிறாரா?” என்று கேட்டார். அந்தப் பெண் இல்லை என்று பதிலளித்தார். உடனே அந்தப் பெண் கையில் இருந்த விரிப்பை வாங்கி விரித்து அதில் அவரை அமரச் செய்து, தானும் அதில் அமர்ந்தார். பின்பு அவருக்காக குரானை ஓதியதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதை விளக்கவும் செய்தார். மனம் நெகிழ்ந்து கண்கள் பனித்திருந்த அந்தப் பெண்ணிடமிருந்து குரானை மட்டும் வாங்கிக்கொண்டு எதுவும் சொல்லாமல் மஃரூபுல் கடந்து சென்றார். அவர் செல்லும் இடமெல்லாம், காணும் மனிதர்களிடம் ஞானத்தை விதைகளாகத் தூவிக்கொண்டே செல்வார்.
வாழ்நாள் முழுவதும் மெய்ஞ்ஞானக் கடலில் அவர் மெய்மறந்து நீந்தினார், கரையைக் கடந்தார், 815-ம் வருடமே மறைந்தபோதும் இருளில் மூழ்கியுள்ள நம் மனங்களுக்குள் இன்றும் ஆன்மிக ஒளியைப் பாய்ச்சுகிறார். அவருடைய பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் இவர் சிறு வயதிலேயே சூபி ஞானத்தில் மூழ்கிவிட்டார். வீட்டில் யாரும் போதிக்கவில்லை. பள்ளியிலும் யாரும் ஊக்குவிக்கவில்லை.
சொல்லப்போனால் இதற்காகப் பள்ளியில் ஆசிரியரால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அந்த வயதில் அவருக்கு யாருடைய தாக்கமும் பெரிதாக இருந்ததாகத் தெரியவில்லை. இதை எல்லாம் மீறியும் அவர் சிறு வயதிலேயே மெய்ஞானத்தில் மூழ்கி இருந்துள்ளார்.
எது அவரை இவ்வாறு மாற்றியிருக்க கூடும்? ஒருவேளைத் தானாகவே மாறியிருப்பாரோ? அவ்வாறும் இருக்கலாம். ஆனால், காரணம் ஏதுவாக இருந்தால் என்ன? அவரின் வார்த்தைகளில் சொல்வது என்றால், “காரணம் தேடும் எவராலும் வாழ்வில் எதையும் சுவைக்க முடியாது?”. அதற்கு அவருடைய எழுத்துகளும் புகழும் சான்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT