Published : 12 Mar 2018 11:18 AM
Last Updated : 12 Mar 2018 11:18 AM
வயதான தன் குருவுக்கு தினமும் பணிவிடை செய்தான் அவன். மூன்று வேளையும் உணவு, கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து தருதல், கைகால்களைப் பிடித்து விடுதல் முதலான சேவைகளைச் செய்துவந்தான். குரு அவனிடம், ‘‘உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறாய்’’ என்று கடிந்துகொள்வார். அப்படி அவர் சொல்வதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த சேவைக்குப் பின்னே ஏதோ ஆசை இருப்பதாகப் புரிந்து வைத்திருந்தார்.
ஒருநாள்... அவனும் வெளிப்படையாகவே பேசிவிட்டான். ‘‘குருவே. ஏதேனும் ஒரு அதிசயமானதை எனக்குக் கற்றுக் கொடுங்கள்!’‘ என்றான். உடனே குரு, ‘‘அடடா... எனக்கு எந்த அதிசயமும் தெரியாதுப்பா. இப்படி காலநேரத்தை வீணடித்துவிட்டாயே. வேறு யாராவது அதிசயம் அறிந்தவர்கள் இருப்பார்கள். அவர்களைப் போய்ப் பார்’’ என்றார்.
இதைக் கேட்டு முகம் வாடிப்போனான் அவன். ‘‘எந்த அதிசயமும் தெரியாது என்று ஏன் மறுக்கிறீர்கள். பல அதிசயங்களை நிகழ்த்தியவர் நீங்கள் என்பதை அறிவேன். உங்களைப் பற்றி பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு சேவை செய்துகொண்டே இரு. ஒருநாள் உனக்கு அதிசயம் செய்யக் கற்றுத் தருவார். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள் என்றெல்லாம் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அந்த நேரம் வரவில்லையோ’’ என்று அலுத்துக் கொண்டே சொன்னான்
‘என்னடா இது. யாரோ நம்மைப் பற்றி தவறாக இவன் மனதுள் விதைத்திருக்கிறார்கள். அதிசயம் என்பவை தாமாக நடப்பவை. இது புரியவில்லையே இவனுக்கு’ என்று நினைத்துக் கொண்டார் குரு.
நாட்கள் ஓடின.
ஒருநாள் அவனை அழைத்தார் குரு. ‘‘நான் ஏதேனும் சொல்லித் தந்தால்தான் என்னை விடுவாய் போலிருக்கிறது. சரி... உனக்கொரு மந்திரம் சொல்கிறேன். இது திபெத்திய மந்திரம். “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம் என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும்.
இது முக்தி நிலை என்பதன் அர்த்தம். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர் என்றவர் தொடர்ந்தார்.
“இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. முன்னதாக, முதலில் குளி. புத்தாடையை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றார் குரு.
அவ்வளவுதான். உடனே அவன் விறுவிறுவெனக் கிளம்பிச் சென்றான். நன்றியைக் கூடச் சொல்லவில்லை. அவனைக் கூப்பிட்டார் குரு. ‘‘ஒன்றைச் சொல்ல மறந்துட்டேம்பா. இந்த மந்திரம் சொல்லும்போது, குரங்கைப் பற்றி மட்டும் நினைக்கக் கூடாதுப்பா’’ என்றார். திரும்பிப் பார்த்தவன், ‘‘நான் ஏன் குரங்கை நினைக்கப் போறேன். குரங்கைப் போய் எவனாவது நினைப்பானா?’’ என்றான். ‘‘நல்லது. ஒருவேளை, குரங்கை நினைத்தால், இன்னொரு ஐந்து முறை மந்திரம் சொல்லவேண்டும். மறக்காதே’’ என்றார் குரு.
‘‘சரி குருவே’’ என்று சென்றவன்... அந்த நிமிடமே குரங்கை நினைக்கத் துவங்கினான். குளித்தான். குரங்கின் நினைவு. புத்தாடை உடுத்தினான். குரங்கின் ஞாபகம். சம்மணமிட்டு உட்கார்ந்தான். மனதுக்குள் குரங்கு. எங்கு பார்த்தாலும் குரங்கு.
‘அட என்னடா இது. இந்த குரு மந்திரம் மட்டும் சொல்லியிருக்கலாம். குரங்கைச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம். யானையோ குதிரையோ, ஒட்டகமோ திமிங்கலமோ வரவில்லை. அவர் சொன்ன குரங்கு மட்டும் வந்தபடியே இருக்கிறதே’ என்று புலம்பினான்.
குரங்கு அவன் எதிரில் நின்றது. அருகில் வந்தது. தலையில் ஏறி அமர்ந்தது. இடுப்பில் உட்கார்ந்துகொண்டது. மனைவி குரங்காகத் தெரிந்தாள். அப்பாவும் அப்படித்தான் தெரிந்தார். அவனுக்கு தலை கிறுகிறுத்தது. அவனால் மந்திரம் சொல்லமுடியவில்லை. தப்பும் தவறுமாகச் சொன்னான். திக்கித்திணறி தவித்துக் குழறிச் சொன்னான். ‘சின்ன மந்திரத்தைக் கூடச் சொல்லமுடியலை. அந்தக் கிழட்டு குரு தந்திரக்காரன்’ என கோபம் கொண்டான்.
குருவிடம் சென்றான். விஷயத்தைக் கூறினான். ‘‘அந்த மந்திரத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றான். ‘‘இதுவரை குரங்கை நினைத்தது கூட இல்லை. உங்களால், இப்போது குரங்கைத் தவிர வேறு எதையும் நினைக்கவே முடியவில்லை’’ என்று புலம்பினான்.
குரு வாய்விட்டுச் சிரித்தார். ‘‘குரங்கு இல்லையேல் இந்த மந்திரமில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரிந்தால், நீயே பல அதிசயங்களைப் பண்ணுவாய். குரங்கு என்பது துர்சிந்தனை. குரங்கு என்பது தாழ்வு மனப்பான்மை. குரங்கு என்பதுதான் மனம். மனதில் தெளிவு வந்துவிட்டால், குரங்கு வரவேவராது’‘ என்றார். அவர் குருவை வணங்கி நன்றி தெரிவித்தார்.
அர்த்தத்துடன் புன்னகைத்தார் குரு. இப்போது அங்கிருந்த கிளம்பிய அந்த சிஷ்யரின் நடையில் நம்பிக்கையும் தெளிவும் தெரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT