Published : 29 Mar 2018 09:51 AM
Last Updated : 29 Mar 2018 09:51 AM
வர்த்தமான மகாவீரர் துறவு ஏற்றப் பின்பு, பனிரெண்டு ஆண்டுகள் அடர்ந்த காடுகளிலும் பரந்து விரிந்த மலைகளின் மீது திரிந்தும் பயங்கரமானக் குகைகளில் தங்கியும் கடும் தவம் மேற்கொண்டிருந்தார்.
முக்காலத்தும் மூவுலகில் நிகழும் நிகழ்ச்சிகளை அறியும் முழுதுணர் ஞானம் பெற அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.
மகாவீரர் ஒரு நாள் சுரும்பிகாக் எனும் கிராமத்தில் ரஜூ பாலிக்கா என்ற ஆற்றின் வடகரையில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அங்கு அவர் மேற்கொண்ட பெரும் தவத்தின் பயனாக முழுதுணர் ஞானம் பெற்றார்.
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினையை வென்ற மகாவீரர், தனது பத்தாவது மழைக்காலத் தங்குதலை சிராவஸ்தி எனும் இடத்தில் மேற்கொண்டார். அங்கு அவர் சங்கமகன் எனும் தெய்வத்தின் கோயிலில் தங்கியிருந்தார். அப்போது அவர் வேள்விகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான தனது கருத்துக்களை மக்களுக்குப் போதித்தார். அதனால் தெய்வம் சங்கமகன் மகாவீரரின் சீடன் போல் வடிவம் ஏற்று அவரிடம் வந்தார்.
சீடன் சங்கமகன் அங்கிருந்த கோயிலின் பொருட்களைத் திருடினான்.அதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் சீடன் திருடுவதை கவனித்துவிட்டனர். உடனே அவனைப் பிடித்து அடி அடி என தர்ம அடி போட்டனர். உடனே சீடன் அவர்களிடம்,” தனது குருவான மகாவீரர்தான் திருடச் சொன்னார்” என்று கூறினான். அதனால் ஊர் மக்கள் மகாவீரரை நன்றாக தாக்கினர். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல மகாவீர்ரும் ஊரார் செயலைப் பொறுத்துக் கொண்டார்.
அதன் பிறகு, சங்கமகன் ஒற்றனைப் போல் வேடமேற்று கோசலநாட்டு அரசு அதிகாரிகளிடம் மகாவீரர் மகத நாட்டு ஒற்றன் என்று நம்பும்படி கூறிவிட்டான். அதனால் கோசலநாட்டுப் படைவீர்ர்கள் மகாவீரரைப் பிடித்துச் சென்று கடுமையாக சித்ரவதை செய்தனர். அப்போதும் மகாவீர்ர் அனைத்தையும் பொருத்துக்கொண்டு அமைதியாய் இருந்தார். அவரின் அமைதியைக்கண்டு அதிகாரிகள் அவர் ஒற்றன் அல்ல என்ற முடிவுக்கு வந்தனர். மகாவீரரையும் விடுவித்தனர்.
மகாவீரருக்கு, சங்கமகன் தொடர்ந்து ஆறு மாதங்கள் பல்வேறு இன்னல்களைத் தந்துவந்தான். எவ்வளவுத் தர முடியுமோ அவ்வளவு துன்பங்களைத் தந்தான். அனைத்து இன்னல்களையும் பொறுத்துக்கொண்ட மகாவீர்ர், ஒரு காளயைப்போல வலிமையுடனும் மலையைப் போல நிலையாகவும் சூரியனைப் போல ஒளிர்ந்தும் காணப் பட்டார். சங்கமகன் தான் எவ்வளவோ இன்னல்களை ஏற்படுத்தியும் பகவான் மகாவீரரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று சலிப்படைந்தான். எனவே விரக்தி கொண்டு மகாவீரரின் பக்கமே தலை காட்டாமல் ஓடி விட்டான்.
ஒருவர் தான் எடுக்கும் முடிவில் நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் நிலையாகவும் இருந்தால் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவியலாது என்று சங்கமகன் தெய்வம் உணர்ந்தது.
இப்படி தெய்வ சக்திக்கும் சாந்நித்தியத்துக்கும் வலியையும் பொறுமையையும் உணர்த்திய அற்புத மகானின் அவதார தினம் இன்று. இந்த நாளில் (29.3.18) மகாவீர் மகானைத் தொழுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT