Published : 21 Mar 2018 06:16 PM
Last Updated : 21 Mar 2018 06:16 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 24: எவ்வினையை இறைவன் ஒழிப்பான்

ரு செயல் நிகழும்போது, அந்தச் செயலில் நான்கு கூறுகள் இணைந்திருக்கின்றன என்கிறது சைவம். அவற்றைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார் சேக்கிழார்:

செய்வினையும், செய்வானும்,

அதன் பயனும், சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும்

விதித்த பொருள்...

(பெரிய புராணம், 7:35:5)

செய்வினையாகிய செயல் முதலாவது கூறு; அந்தச் செயலைச் செய்தவன் இரண்டாவது கூறு; அந்தச் செயலால் விளையும் பயன் மூன்றாவது கூறு; அந்தப் பயனைச் செயல் செய்தவனிடமே கொண்டுவந்து சேர்ப்பவனாக வேறொருவன் இருப்பது நான்காவது கூறு என்று இவற்றை விளங்கிக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவரை அடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடம் அடிவாங்கியவர் நம்மை உடனடியாகத் திருப்பித் தாக்கும் வலிமை அற்ற எளியவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அவர் சும்மா இருந்துவிடுவாரா? மனத்துக்குள் கறுவிக்கொண்டே சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பார். வாய்ப்புக் கிடைக்கும்போது நம்மை எக்குத்தப்பாக எதிலாவது சிக்கவைப்பதில் தானும் ஒரு கருவியாகச் செயல்படுவார். எப்போதோ நாம் செய்த செயலுக்கான தண்டனை, எதிர்பார்த்திராத ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு வந்துசேரும், செய்த செயலுக்கான பயனைச் செய்தவரிடமே கொண்டு வந்து சேர்த்தவர் யார்? கடவுள்.

கடவுள் ஆற்றும் பங்கு

இதென்ன வம்பு? அடித்தவன் நான்; சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்து, வாய்ப்பு வந்தபோது எனக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்தவர், என்னிடம் அடி வாங்கியவர். இதில் கடவுள் எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்ன பங்கு? என்றால், நீங்கள் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பைக் கனியச் செய்ததுதான் கடவுள் ஆற்றிய பங்கு.

நடக்கிற எல்லாவற்றிலும் கடவுளுக்குப் பங்கு வைப்பது பக்தி மரபின் பாங்கு. ஒருவேளை உங்களால் பாதிக்கப்பட்டவர் உங்களைப் பழி வாங்க எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்திருந்தாலும், போனால் போகிறது என்று உங்களை மன்னித்து விட்டிருந்தாலும், உங்களது செயலுக்கான பயன் உங்களை வந்துசேரவே செய்திருக்கும். கடவுள் உங்களிடம் அதைக் கொண்டுவந்து சேர்த்திருப்பார் என்கிறது சைவம். ‘எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்’ என்று சொல்வதில்லையா?

செய்வினையின் பயனைச் செய்தவனிடம் சேர்ப்பது கடவுள்தான் என்ற இந்தச் சைவக் கருத்தைப் பவுத்தம்போன்ற கொள்கைகள் ஒப்புக்கொள்வதில்லை. இதற்கு எதற்கு ஒரு கடவுள்? வினைகளின் பயன்கள் தாமாகவே செய்தவனைச் சென்று சேரும் என்று சொல்லி, ஓர் எடுத்துக்காட்டும் வழங்குகிறது பவுத்தம்: நிறையப் பசு மாடுகளைக் கட்டி வைத்திருக்கிற ஒரு தொழுவம். கன்றுகள் தனியாகப் பிரித்துக் கட்டப்பட்டிருக்கின்றன.

பால் குடிக்கும் நேரம் கன்றுகளை அவிழ்த்துவிட்டால், கன்றுகள் ஒவ்வொன்றும் தத்தம் தாய்ப் பசுக்களைச் சரியாக அடையாளம் கண்டு, மடி சேர்ந்து, முட்டி முட்டிப் பால் குடிப்பதில்லையா? அதைப் போல, வினையின் பயன்களும் தங்களுக்கு உரியவரைச் சரியாக அடையாளம் கண்டு, தாங்களாகவே அவரைச் சேரும்; சேர்த்து வைப்பதற்குக் கடவுள் தேவையில்லை என்கிறது பவுத்தம்.

பவுத்தம் சொல்கிற அமைப்பு யார் துணையும் இன்றித் தானாகவே இயங்குகின்ற அமைப்பு; சைவம் சொல்கிற அமைப்போ கடவுள் துணையால் இயங்குகின்ற அமைப்பு.

அதிகாரி இல்லையா?

தானாகவே இயங்கும் அமைப்புகள் எப்போதும் அருளற்றவை. மிகவும் கெடுபிடியாக, விதிமுறைகளின்படித் தடம் புரளாமல் செயல்படுகின்றவை. அவற்றிடம் மன்றாடிப் பயனில்லை. பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டும் வழங்க வேண்டியதை வழங்கிக்கொண்டும் தம்போக்கில் இயங்குகிறவை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று மருண்டு கிடக்கிற மனிதர்களை இவை மேலும் மருட்டுகின்றன.

அடித்துக்கொண்டு போகிற ஆற்று வெள்ளத்தில் எதையேனும் பற்றிக்கொண்டு கரையேறிவிட மாட்டோமா, பிடிமானமாக ஒரு துரும்பாவது கிடைத்துவிடாதா என்று பரிதவித்துத் துழாவுகிறார்கள் மனிதர்கள். பிடிகொடுக்க மறுக்கிறது பவுத்தம் பேசுகிற அமைப்பு. ‘மன்றாடுவதை விட்டுவிட்டு உங்கள் நடவடிக்கைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்’ என்று பேசுகிறது. நீங்கள் நல்வினைகள் செய்தால், உங்களுடைய நல்வினைகளின் பயன்களை நீங்கள் அடையவிடாமல் தடுக்கும் ஆற்றல் ஏதும் இல்லை;

அவ்வாறே, நீங்கள் தீவினைகள் செய்தால், உங்களுடைய தீவினைகளின் பயன்களை, அதாவது தண்டனைகளை, உங்களுக்கு வழங்காமல் மன்னித்து அருள வேண்டும் என்று நீங்கள் மன்றாடினாலும், உங்களை மன்னித்து அருளக்கூடிய அதிகாரியும் ஒருவரும் இல்லை என்கிறது பவுத்தம்.

இதில் சைவத்துக்கு ஒப்புதல் இல்லை. கடவுள் என்று ஒருவரை முன்வைத்து, அவர் அளவற்ற அருளாளர் என்று அவருக்கு வரையறையும் செய்துவைத்திருக்கும் நிலையில், ‘செய்தது பிழைதான்; மன்னித்து ஆட்கொள்ளுங்கள்’ என்று மன்றாடுகிறவர்களிடம், பவுத்தத்தைப் போலப் பாராமுகமாக இருக்கச் சைவத்தால் முடியாது.

ஆவியிலே தாழ்மை உள்ளவர்களும், மனம் நைந்து மன்றாடுகிறவர்களும் இறைவனால் மன்னிக்கப் பெறுவார்கள் என்றது சைவம். பவுத்தம், அமைப்பிடம் விட்டுவைத்திருந்த அதிகாரத்தைப் பிடுங்கித் தலைவரிடம் கொடுத்தது சைவம். சைவம் என்றில்லை; எல்லா இறை வழிபாட்டுச் சமயங்களும் இதையே செய்தன.

வசப்படக் கூடியவர் கடவுள்

கெடுபிடியாக இருக்கிற அமைப்பை முன்னிலைப்படுத்தாமல், மன்னிக்கும் இயல்புடைய கடவுளை முன்னிலைப்படுத்துவதைக் குற்றம் சொல்ல முடியாது. கெடுபிடியான அமைப்பென்பது அறிவின் வழியாக அறிந்துகொள்ளக்கூடியது. எனவே, விளங்கிக்கொள்ளவும் உள்வாங்கிக்கொள்ளவும் கடினமானது.

எல்லோருக்கும் இயலக்கூடியது என்று சொல்ல முடியாது. விட்டுப் பிடிக்கும் கடவுளோ நம்பிக்கை சார்ந்த உணர்வின் வழியாகப் பொசுக்கென்று உள்ளே வந்துவிடக் கூடியவர். நம்ப முடிகிற எல்லோருக்கும் எளிதாக வசப்படக் கூடியவர்.

‘சுமை சேர்ந்து சோர்ந்து போயிருக்கிறவர்களே! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடைய நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். என் நுகம் மெலியது; என் சுமை எளியது’ என்று ஏசுவின் கூற்றாக விவிலியம் சொல்கிறது. வழிபாட்டுச் சமயங்களில் கடவுள் ஒரு சுமைதாங்கி. தங்களை அழுத்தும் சுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கடவுளின்மேல் இறக்கி வைத்துவிடலாம். பதிலுக்குக் கடவுளைச் சுமந்துகொள்ளலாம். இரண்டு சுமைகளில் எந்தச் சுமை எளிய சுமை என்பதையும் தங்களுக்குள்ளேயே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.

பவுத்தத்தின் கெடுபிடிகளை வைத்து, அது வாழ்வையே மறுப்பதாகச் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். துன்பத்தை நீக்கும் வகையில் வாழ்வை எளிதாக்கவும் முறைப்படுத்தவுமே முனைகிறது பவுத்தம். ‘நடக்கின்றவற்றைத் திருத்தச் சொல்லாதீர்கள்; உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்’ என்கிறது.

‘இப்போது நீங்கள் அனுபவித்து வருகின்ற துன்பத்தை யாரும் நீக்க முடியாது; ஏனென்றால் இது உங்களது பாவக் காவடி; நீங்கள்தான் சுமந்தாகவேண்டும். துணைக்காவடிகளின் தோளுக்கு அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆனால், இனி நீங்கள் சுமக்க வேண்டியது இன்பமா, துன்பமா என்று தீர்மானிக்கும் உரிமை உங்களிடம் உள்ளது. ஆகவே நல்லறம் புரிக’ என்கிறது பவுத்தம்.

அதற்கு எதிர் பேசுகிறார் திருமூலர்:

தன்னை அறிந்திடும்

தத்துவ ஞானிகள்,

முன்னை வினையின்

முடிச்சை அவிழ்ப்பர்கள்;

பின்னை வினையைப்

பிடித்துப் பிசைவர்கள்,

சென்னியில் வைத்த

சிவன்அருளாலே.

வினைகளில் மூன்று வகை. முந்தைய பிறப்புகளில் செய்து, சேகரித்து வைத்திருக்கிற முன்வினை; இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிற நிகழ்வினை; இப்போது செய்து இனிமேல் அனுபவிக்க இருக்கிற பின்வினை. இவற்றில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிற வினையை ஒன்றும் செய்ய இயலாது; அதை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆனால், முன்வினையையும் பின்வினையையும் நம் தலையில் சுமந்துகொண்டிருக்கிற இறைவனின் அருளால் ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிறார் திருமூலர்.

பவுத்தம் சொல்வதும் ஏறத்தாழ இதைத்தான். பவுத்தம் கடவுளை மறுத்துச் சொல்கிறது; திருமூலர் கடவுளை வைத்துச் சொல்கிறார்.

(திருமூலரைத் தொடர்வோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x