Published : 24 Mar 2018 10:13 AM
Last Updated : 24 Mar 2018 10:13 AM
ராமநவமி நன்னாளில், ஸ்ரீராமரை மனதாரப் பிரார்த்திப்போம். நம் வாழ்க்கையையே வளமாக்கித் தந்தருள்வார். கருத்தொருமித்த தம்பதியாக நம்மை வாழச் செய்வார் ராமர்.
ஸ்ரீராமரின் திரு அவதார தினம், ராமநவமியாக நாளைய தினம் 25.3.18 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ராமர் கோயில்களில், ஸ்ரீராமநவமி விழா விமரிசையாக நடந்தேறும்.
இந்த நன்னாளில், ராமயாணம் வாசிப்பதும் ராமகாதையைப் படித்துச் சிலாகிப்பதும், மிகுந்த பலம் சேர்க்கும். ‘ராம் ராம் ஜெயராம்’ கோஷம் முழங்க, ஸ்ரீராமரை வழிபடுங்கள். நம் இந்த ஜென்மத்தையே நிம்மதியும் நிறைவுமாக வாழச் செய்து அருள்வார் சீதையின் மணாளன்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான ஸ்ரீராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் ஆலயம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். தஞ்சாவூர் & மன்னார்குடி சாலையில், 24 கி.மீ. தொலைவில் உள்ளது வடுவூர்.
இந்தக் கோயிலின் உத்ஸவர்... ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம்.
அது வனவாச காலம். ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே ஆஸ்ரமத்தில் தங்கினர். அவருடன் இருக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டனர். ‘இதுவே மனித தர்மம். ஒரு மனிதன், இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் நீங்கள்’ என்று சிலாகித்து வணங்கினர். வணங்கிப் போற்றினர். ஆனால் வந்திருப்பது இறைவன், இவர் எடுத்திருப்பது அவதாரம் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களுக்கு இறைவனை அடைவதற்கான வழியை, இறைவனே சொல்லித் தந்து அருளினார். அந்த உபதேசம் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தார்கள்.
அங்கிருந்து அவர் புறப்படும் தருணம்... பதறிப் போனார்கள் ரிஷிகள். ‘’உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே, எங்களுடனேயே இருங்கள். இந்த வனத்தில், இந்த ஆஸ்ரமத்திலேயே இருங்கள். உங்கள் வழிகாட்டுதலுடன் பகவானை அடைவோம்‘’ என்று சொல்லிக் கண்ணீர் விட்டார்கள். வேண்டினார்கள்.
விடிந்தது. அங்கே அந்தக் காட்சியைக் கண்டு ரிஷிகள் வியந்து போனார்கள். பிரமித்துப் பார்த்தார்கள். பார்த்து பரவசமானார்கள். அங்கே... அழகும் கம்பீரமும் கொண்டு ராமரைப் போலவே நின்றது சிலை ஒன்று! தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். விரலை நீவிவிட்டார்கள். பாதங்களை வருடினார்கள். கன்னம் கொஞ்சினார்கள். அப்படியே தத்ரூபமாக இருந்தது சிலை.
‘’உங்களுக்காக என்னுடைய உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். இந்தச் சிலை உங்களுக்காக! பிரிவுத் துயர் இனி இல்லை. இந்தச் சிலையிலும் நான் வாசம் செய்கிறேன். இதோ... அயோத்திக்குச் செல்லும் வேளை நெருங்கிவிட்டது. இந்தச் சிலை உங்களுக்குத்தான். இது இந்த அகிலத்து மக்களின் சொத்து. தங்களது பணியைத் தொடருங்கள்’’ என அருளினார். அனைவரும் விழுந்து நமஸ்கரித்தனர். அவர்களுக்கு ஆசிகூறி, அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீராமர்!
அந்த விக்கிரகத்தை, அவரே உருவாக்கித் தந்த அவரின் திருவுருவச் சிலையை இன்றைக்கும் வடுவூர் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.
பங்குனி புனர்பூச நாளில் துவங்கி, 10 நாள் விழாவாக சீரும் சிறப்புமாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது பிரம்மோற்ஸவத் திருவிழா. 9-ஆம் நாளன்று தேரோட்டம். திருத்தேரில்... ராமாயணக் காட்சிகளை சின்னஞ்சிறிய சிற்பங்களாக வடித்திருப்பது கொள்ளை அழகு!
ராமநவமி நாளில், காலை முதலே ஸ்ரீராமருக்கு பட்டு வஸ்திரங்கள் சார்த்தி, சிறப்பு பூஜைகள் செய்யப்படும். வடுவூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ராமபிரானைத் தரிசிப்பார்கள். மாலையில், பட்டாச்சார்யர்கள், ராமகதையை, ராமாயணத்தை வாசிப்பார்கள்.
இங்கே, ஸ்ரீகோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள காரியம் யாவும் கைகூடும் என்பது உறுதி. ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுங்கள். இழந்த பதவியையும் கெளரவத்தையும் செல்வத்தையும் மீண்டும் பெறுவீர்கள். திருமண பாக்கியம் கைகூடும் . நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நம்மிடம் உள்ள சின்னச் சின்ன துர்குணங்களையெல்லாம் மாற்றி, நற்குணங்களையே மனதுக்குள் விதைத்து, அன்பொழுக வாழச் செய்வார் ராமச்சந்திர மூர்த்தி என்பது சத்தியம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT