Published : 24 Mar 2018 03:05 PM
Last Updated : 24 Mar 2018 03:05 PM
கும்பகோணத்துக்கு நிகரான தலங்கள் வேறு எங்குமில்லை என்பார்கள். கோயில் நகரம் என்றே கும்பகோணம் அழைக்கப்படுகிறது. அப்பேர்ப்பட்ட ஊரில் முக்கியமான கோயில்கள் ஏராளம். அப்படி முக்கியமான க்ஷேத்திரமாகப் போற்றப்படுகிறது ராமசுவாமி கோயில்.
ராமபிரான் அவதரித்த அயோத்திக்கு இணையான திருத்தலம் என்று ராமசுவாமியைச் சொல்லிச் சிலாகிக்கிறது ஸ்தல புராணம். மாதந்தோறும் புனர்பூச நட்சத்திர நாளிலும் நவமி திதியிலும் இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து பிரார்த்தித்துச் செல்கின்றனர். இந்த நாட்களில் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.
புரட்டாசி மாதத்திலும் மார்கழியிலும் விழாக்கள் அமர்க்களப்படும். முக்கியமாக பங்குனி புனர்பூச நட்சத்திர நாளையொட்டி, ராமநவமித் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. பத்துநாள் விழாவாக தினமும் உத்ஸவம் சிறப்பு பூஜைகள் என கோலாகலமாக நடைபெறும், ராமநவமிப் பெருவிழா.
கோயில் நகரம் கும்பகோணத்தில் முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் முதன்மையானது என்று ராமசுவாமி கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். கோயிலின் மதிலும் கோபுரம் மிகப் பிரமாண்டமாகக் காட்சி தந்து, நம்மை பிரமிக்கச் செய்கிறது. மண்டபங்களும் தூண்களும் தூண்களில் சிற்பங்களும் சிற்பங்களின் நுட்பங்களும் ரசனையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரகுநாத நாயக்க மன்னரின் ஆட்சிக்காலத்தில், கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து, விரிவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்த கல்வெட்டுகள் இருக்கின்றன.
ராமரும் கிருஷ்ணரும் எப்போதுமே கொள்ளை அழகு. அதிலும் இங்கே உள்ள கருவறையின் ராமர்பெருமான் அத்தனை அழகு மிளிர, மிகுந்த சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார். சத்ருக்னன் சாமரம் வீசிக் கொண்டிருக்க, லட்சுமணன் ராமரின் வில்லையும் தன்னுடைய வில்லையும் ஏந்திக் கொண்டிருக்க, பரதன் குடைப்பிடித்தபடி இருக்க, அனுமன் ஒரு கையில் வீணையையும் இன்னொருகையில் ஓலைச்சுவடியையும் ஏந்தியபடி காட்சி தரும் நேர்த்தி, சிலிர்க்க வைக்கிறது. இவர்களுக்கு நடுநாயகமாக, பட்டாபிஷேக திருக்கோலத்தில், பட்டாபிஷேக ராமராக, மனைவி சீதையுடன் சேவை சாதிக்கிறார்.
வாழ்வில் ஒருமுறையேனும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலுக்கு வந்து அவரைக் கண்ணாரத் தரிசித்தாலே, குடும்பத்தில் ஒற்றுமை தவழும். அன்பான, அனுசரணையான வாழ்க்கைத் துணை அமையும். துன்பங்களையெல்லாம் துடைத்தருள்வார் ராமபிரான். இழந்த பதவியையும் மீட்டெடுத்துத் தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள்.
நாளை, 25.3.18 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம நவமி. இந்த நாளில், ஜகம் புகழும் ராமபிரானை மனதார வேண்டுவோம். இல்லத்தில் சுபிட்சம் பொங்க இனிதே வாழ்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT