Published : 03 May 2019 10:28 AM
Last Updated : 03 May 2019 10:28 AM
தான் முழுமுதற்பொருளின் அவதாரம் என்று வெளிப்படையாக அறிவித்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் ஒன்றுதான். கிருஷ்ணனின் லீலைகள் என்று நாம் படிக்கும் கதைகளின் உட்பொருள் என்ன?
முதலில் ராஸலீலை. கோகுலத்தில் கோபிகைகளுடன் கண்ணன் விளையாடிய விளையாட்டுகள். கண்ணன் தன்னுடன் மட்டுமே நடனமாடிக் கொண்டிருப்பதாகவும் மற்ற கோபிகைகள் தனியாக நடனமாடிக் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோபிகையும் நினைக்கிறாள்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ‘நான்’ என்னும் உணர்வு இருக்கிறது. அந்த ‘நான்’ உணர்வு மூலமாகத்தான் நாம் இருப்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அந்த உணர்வு தரும் ஒளியால்தான் நாம் உலகம் இருப்பதை அறிகிறோம். பரம்பொருள் நமக்குள் ‘நான்’ என்னும் உணர்வாகப் பிரதிபலிக்கிறது.
பக்தி மார்க்கம் மூலமாகவோ ஞான மார்க்கம் மூலமாகவோ, பரம்பொருளை அறிந்துணர்ந்து ஐக்கியமாகிவிட நாம் மேற்கொள்ளும் மார்க்கம் எதுவாகிலும் சரி, கடைசியாக நாம் இந்த ‘நான்’ என்னும் அறிவுணர்வின் ஒளியைத்தான் வந்தடைகிறோம். இந்த ‘நான்’ உணர்வு நாம் பொதுவாக நம் மனத்தில் நினைத்துக்கொள்ளும் நான் (Ego) அல்ல. மனத்தின், பிரக்ஞையின் ஆதாரம் அந்த உணர்வு.
உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒளிவிடுவது ஒரே ‘நான்’ உணர்வுதானே? மற்றவர்களின் உடலை நாம் பார்க்கிறோம். அவர்களுக்குள் ஒளிரும் ‘நானை’ நாம் உணர்வதில்லையே?
இந்த உண்மையைத்தான் ராஸலீலை நமக்கு உணர்த்த முற்படுகிறது. நமக்குள் எப்போதும் ‘நான்-நான்’ என்று துடித்துக் கொண்டிருக்கும் பிரக்ஞையின் உயிர்நாடிதான் கிருஷ்ணன். மனத்தின் ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விலகி, நமக்குள் சுடர்விடும் அந்த உணர்வொளியில் தோய்ந்து லயிப்பதால் மட்டுமே நாம் பரம்பொருளை ஆத்மார்த்தமாக உணர்ந்துகொள்ள முடியும். அந்த இடத்தில்தான் பரம்பொருளின் எல்லையற்ற அமைதியின் விரிவும், பளிங்கைத் தோற்கடிக்கும் உன்னதத் தெளிவும், மனத்தை உருக்கிக் கண்ணீர் மல்க வைக்கும் பிரியமும் நமக்குள் பிரசன்னமாக முடியும். இந்தக் காரணத்தினால்தான், ஆணோ பெண்ணோ, நாம் எல்லோரும் கோபிகைகள் என்றும், ஆண்டவன் மட்டுமே நம் நாதன் என்றும் நாயக-நாயகி பாவத்தில் பரம்பொருளை நாம் அறிந்துணர முயல்கிறோம்.
யசோதையின் கோரிக்கை
கண்ணன் மண்ணைத் தின்று கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைத்த யசோதை, அவனை வாயைத் திறந்து காட்டச் சொல்கிறாள். அங்கே அண்ட சராசரங்களின் பிரம்மாண்ட விரிவைக் காண்கிறாள் அவள். யசோதை தன் ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்துகொண்ட கணம் அது. ஆனால், தனக்கு அது ஞாபகம் இல்லாமல் போகட்டும் என்று கண்ணனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறாள் அவள். ஆச்சரியப்பட்டுப் போன கண்ணன், விசித்திரமான அவளது வேண்டுதலின் காரணத்தைக் கேட்கிறான்.
‘கண்ணா, உன்னை என் மகனென நினைத்து, உன்னைக் கண்டித்து உரலில் கட்டித் தண்டித்து, சுபாவமாக நான் இப்போது இருந்துகொண்டிருக்கிறேன். நீ பரம்பொருளின் அவதாரம் என்ற அறிவு எனக்கு இருக்குமானால் உன்னுடன் சுபாவமாக எப்படி என்னால் இருக்க முடியும்? வேண்டாம். நீ எப்போதும் என் குழந்தையாக இருந்துவிடு. உனக்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும் உன் விஸ்வரூப தரிசனம் எனக்கு வேண்டாம். எனக்குள் உன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும் தாய்மை உணர்வுடன் நான் இருந்துகொண்டு விடுகிறேன்.
தயவுசெய்து உன் உண்மையான ஸ்வரூபத்தின் தரிசனத்தின் நினைவு எனக்கு இல்லாமல் போகச் செய்துவிடு,’ என்று கண்ணீர் மல்க வேண்டுகிறாள். அவளது தாய்மையின் அணைப்புக்குள் தன் அகண்டாகாரத்தை ஒடுக்கிக் கொண்டுவிட இணங்கிய அந்தப் பரம்பொருள் அவளது வேண்டுதலின்படி அவளுக்கு அந்த ஞாபகம் இல்லாமல் செய்துவிடுகிறான்.
எல்லையற்று எங்கும் விரிந்திருக்கும் பரம்பொருள்தான் இங்கே எல்லாமாகவும் எல்லாராகவும் பிரசன்னமாகி இருக்கிறது என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறோம். நாம் அதன் எல்லையற்ற விரிவுக்குள்தான் எப்போதும் இருக்கிறோம் என்பதையும், அதே நேரத்தில் அந்த அகண்டாகாரம் முழுவதும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒடுங்கி நிற்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த சமயம். மகரிஷி துர்வாசர் தன் சீடர்கள் பத்துப் பதினைந்து பேருடன் திடீரென்று ஒரு நாள் மாலை நேரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். திரௌபதியிடம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் இருக்கும் விஷயமும், கானகத்தின் அந்தப் பகுதிக்கு வரும் முனிபுங்கவர்களுக்கும் அவர்களின் சீடர்களுக்கும் அவள் அன்னமளித்து உபசரிப்பது அவர் அறிந்துதான்.
அதனால் அருகில் இருக்கும் நதியில் குளித்துவிட்டு வந்துவிடுவதாகவும் அவர்கள் அனைவரும் பசியாற உணவு படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போகிறார் துர்வாசர். திரௌபதி திடுக்கிட்டுப் போகிறாள். அவளிடத்தில் இருக்கும் அட்சயபாத்திரத்தில் அன்றைய நாள் உணவு முடிந்து கழுவி வைத்ததும் உணவு ஏதும் வராது. மறுநாள் சூரியோதயத்துக்குப் பிறகுதான் மறுபடியும் அதிலிருந்து உணவு வரும்.
துர்வாசர் வந்த அன்று அப்போதுதான் அவள் அன்றைய உணவை முடித்துவிட்டு, பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருக்கிறாள். அதிலிருந்து உணவு கிடைக்காது. துர்வாசரின் முன்கோபம் அனைவரும் அறிந்ததுதானே? உணவு ஏதும் இல்லையென்றால் துர்வாசர் சாபம் கொடுப்பது நிச்சயம். பாண்டவர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
ஒரேயொரு சோற்றுப் பருக்கை
அந்த நேரத்தில் எப்படியோ கிருஷ்ணன் அங்கு வந்து சேர்கிறான். தன் வழக்கமான கள்ளச் சிரிப்பு இதழ்க்கடையோரம் கசிய, ‘பாஞ்சாலி’ எனக்கு ஒரே பசி. முதலில் உன் பாத்திரத்தை எடுத்து உணவு கொண்டு வா. பிறகு எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்’, என்கிறான் கிருஷ்ணன். கன்னத்தில் கண்ணீர் வழிய, ‘அண்ணா, எனக்கு சோதனை இப்படி ஒன்றன்மேல் ஒன்றாக வரவேண்டுமா? இப்போதுதான் மகரிஷி துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து உணவு படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போயிருக்கிறார். நான் பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்து வைத்தாகிவிட்டது. என்ன செய்வேன்?’ என்று கேட்கிறாள் திரௌபதி.
கிருஷ்ணன் தன் புன்னகை மாறாமல், ‘பரவாயில்லை. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வா. பார்ப்போம்’ என்கிறான். ஒன்றும் புரியாமல் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வருகிறாள் திரௌபதி. அவசரத்தில் சரியாகக் கழுவப்படாமல் இருந்த அந்தப் பாத்திரத்தின் ஓரத்திலிருந்த ஒரு சோற்றுப் பருக்கையையும் ஒரு கீரைத் துண்டையும் எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொள்கிறான் கிருஷ்ணன். ‘அப்பாடா, வயிறு நிரம்பிவிட்டது. இதுபோதும்,’ என்கிறான் கிருஷ்ணன்.
சிறிது நேரத்தில், துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து சேர்கிறார். ‘அம்மா திரௌபதி, எங்களால் இப்போது ஒன்றும் சாப்பிட முடியாது. இப்போதுதான் பெரிய விருந்து சாப்பிட்டதுபோல் வயிறு நிறைந்து இருக்கிறது. எப்படி என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு, பாண்டவர்களையும் திரௌபதியையும் ஆசீர்வதித்துவிட்டுப் போய்விடுகிறார். அப்போதுதான் உண்மை புரிகிறது, கிருஷ்ணன் சாப்பிட்ட ஒரு சோற்றுப் பருக்கையும் கீரைத்துண்டும் எல்லோருடைய வயிற்றையும் நிறைத்து பசியைப் போக்கிவிட்டது என்று!
என்ன அர்த்தம் இந்தக் கதைக்கு? நமக்குத் தனித்தனி உடல் இருக்கிறதே ஒழிய அதில் ஊடாடும் உயிர் ஒன்றுதான். அந்த உயிர்தான் கணக்கற்ற உடல்களை உருவாக்கி அவற்றின் மூலமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பார்ப்பது அதுதான். பார்க்கப்படுவதும் அதுதான். நாம் உட்கொள்ளும் உணவை உண்மையில் உட்கொள்வது அந்த உயிர்தான். அழிவற்று எங்கும் நிறைந்திருக்கும் அந்த உயிரின் குறியீடுதான் கிருஷ்ணன்.
(அழிவற்றதைத் தேடுவோம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT