Last Updated : 30 May, 2019 11:14 AM

 

Published : 30 May 2019 11:14 AM
Last Updated : 30 May 2019 11:14 AM

81 ரத்தினங்கள்: அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

அக்ரூரர் கம்சனின் அரசவை அமைச்சர். ஆனால், கிருஷ்ண பக்தர். கிருஷ்ணனைக் காண வேண்டும் என்று மாறாத அன்பு கொண்டு தினமும் நாம ஜெபம் பண்ணுவார். கண்ணா உன்னை நான் எப்பொழுது காண்பேனோ என்று வேண்டும் அவர், கண்ணனின் பரம எதிரியான கம்சனிடம் இருப்பவர்.

கண்ணனின் எதிரியிடம் இருந்தாலும், கண்ணனைக் காண்பேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. தெய்வத்தை அடைவதற்குச் சிறந்த கல்வி அறிவோ, வளமையான செல்வமா அல்ல. உண்மை அன்பு, மிகுதியான பக்தி மாறாத காதலால் மட்டுமே பகவானை அடைய முடியும்.

அக்ரூரர் அப்படியே பக்தி செலுத்தினார். 11 ஆண்டு காலம் கண்ணனின் திருவடியை எண்ணி எண்ணி நாம ஜெபம் பண்ணினார். அவர் விரும்பிய கண்ணன் திருவடியை, சேவிக்கும் நாள் வந்தது. கம்சன் மதுராவில் இருந்து கிருஷ்ணனைக் கொல்ல பல அரக்கர்களை அனுப்பினான்.

பூதனை, சகடாசூரன், போன்ற அசுரர்களை வதம் செய்து கண்ணன் அவர்களுக்கு மோட்சமும் தந்தார். இனி கண்ணன் இருக்குமிடத்துக்கு அரக்கர்களை ஏவிக் கொல்ல முடியாது என்று கம்சன் முடிவெடுத்தான்.

அமைச்சரான அக்ரூரரை அழைத்து, கண்ணனை அழைத்துவர ஆணையிட்டார். அதற்காகவே தநுர் யாகம் என்ற நிகழ்ச்சியையும் திட்டமிட்டு, அதற்கு கிருஷ்ணரையும் பலராமரையும் அழைப்பதுபோல அழைத்துக் கொல்ல நினைத்தான்.

அக்ரூரர் இந்த வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்ததாக நினைத்தார். கம்சனின் ஆணையை ஏற்று அழைத்து வருகிறேன் என்று அக்ரூரர் புறப்பட்டாலும் அவருக்கு கண்ணனைப் பார்க்கப் போகிறோம் என்ற அளவு கடந்த ஆனந்தத்தோடு, கண்ணனைக் கொல்வதற்குத் துணைபோகிறோம் என்றும் வேதனைப்படுகிறார்.

ஆனாலும், அரசனின் ஆணையை மறுக்க முடியாத அக்ரூரர், கண்ணனை அழைத்துவர ஆயர்பாடிக்குப் பயணித்தார். தந்தை நந்தகோபரிடமும் தாயார் யசோதையிடமும் ஆயர்பாடி மக்களிடமும் தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். ஆயர்பாடி மொத்தமும் கண்ணனைப் பிரிவதை எண்ணி அழுதது.

அக்ரூரர், கிருஷ்ணரின் ஆசிர்வாதத்தையும் பெற்று, மதுராவுக்கு அண்ணன் பலராமனோடு சேர்த்து அழைத்துச் சென்றார். அப்படி வரும்வழியில் தான் யமுனை நதியில் தன் கடமைகளை முடிக்க இறங்கிய சமயத்தில், ஆதிசேஷனாக கிருஷ்ண பலராமர்கள் அக்ரூரருக்குக் காட்சியளித்தனர்.

அக்ரூரரின் கதையைச் சொல்லி, அவரைப் போன்ற நம்பிக்கை தன்னுடையது அல்ல என்று திருக்கோளூர் பெண்பிள்ளை வருத்தமுறுகிறாள். கண்ணனை அழைத்து வருகிறேன் என்று சொல்லும் நம்பிக்கை அடியாளுக்குக் கிடையாது. நானோ மிகச் சிறியவள் என்கிறாள்.

(அடுத்து ஒரு ரகசியம்) கட்டுரையாளர்,

தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x