Published : 02 May 2019 11:35 AM
Last Updated : 02 May 2019 11:35 AM
‘திரு’ என்றால் மகாலட்சுமி. அவள் நின்ற - தங்கிய ஊர் இது. என்னைப் பெற்ற தாயார்’ என்பது, தாயாரின் திவ்யத் திருநாமம். திவ்ய தேசங்களுள் 58-வது திவ்ய தேசமான இத்தலம் திருவள்ளூர் அருகில் திருநின்றவூரில் உள்ளது.
ஒருமுறை சமுத்திரராஜன் தொடர்பாகப் பெருமாள் மீது உண்டான ஊடலில், தாயார் பெருமாளைப் பிரிந்து வந்து இந்த ஊரில் தங்கி விட்டாள். ‘திரு’வாகிய மகாலட்சுமி வந்து நின்ற இடம் என்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருநின்றவூர்’ எனப் பெயர் அமைந்தது.
சமுத்திரராஜன் ஓடோடி வந்து தாயாரைப் பிரார்த்தித்தான். கோபம் தணிய வேண்டுமெனக் கெஞ்சினான். தாயாரின் மனம் இரங்கவில்லை. எனவே, திரும்பிப் பெருமாளிடம் போனான். தாயார் தன்னை மன்னிப்பதற்குக் கோரிக்கை வைத்தான்.
அப்போது பிரம்மா வந்தார். ‘‘சமுத்திரராஜனே, மீண்டும் தாயாரிடம் செல். நானும் உடன் வருகிறேன். பெருமாளும் உனக்காகப் பரிந்துரைப்பார். தாயார் நிச்சயம் மனம் இரங்குவாள்’’ என்று சொன்னார். மீண்டும் சமுத்திரராஜன் போய் தாயாரைப் பிரார்த்தித்துக் கெஞ்சினான். நொந்து போய் அவன் கதறி அழ, தாயார் மனம் இரங்கினாள். மன்னித்து ஏற்றுக்கொள்பவள்தானே தாய்? அது முதலாக, இத்தலத்தில் உறையும் தாயாருக்கு ‘என்னைப் பெற்ற தாயார்’ என்ற திருநாமம் அதுமுதல் வழங்கலாயிற்று.
கூடவே, பெருமாள், ‘‘உன்னிடமிருக்கும் கனிவு வெளிப்பட்டது. நாம் இங்கேயே தங்கி வாசம் செய்வோம்’’ என்று சொல்லி, இத்திருத்தலத்தில்
ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளாக எழுந்தருளி, தாயாரோடு இணைந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ‘வாத்ஸல்யம்’ என்றால் தோஷத்தைக் களைந்து அன்பு பாராட்டுபவன் என்று பொருள். பக்தர்களுக்கு வாத்ஸல்யம் அருளுவதால் ‘பக்த வத்சலப் பெருமாள்’ என்ற பெயரில் இங்கு திகழ்கிறார்.
குபேரனுக்குத் தரிசனம்
இந்த ஆலயம் எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்றாலும் ராஜகோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் எழுப்பப்பட்டது. பின்னர் சோழ மன்னர்கள் பல இணைப்புக் கட்டிடங்களை நிறுவினார்கள். பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் கைகளில் ஐந்து ஆயுதங்களுடன் 11 அடி உயரத்தில் நின்று அருள்புரிகிறார். வலப்பக்கம் தனியாக ‘என்னைப் பெற்ற தாயார்’ சன்னிதி அமைந்துள்ளது.
ஆலயத்தில் ஆண்டாள், அனுமன், ஆழ்வார்கள், ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், மணவாள மாமுனிகள், சேனை முதல்வன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. சற்றுத் தள்ளி ஏரிக்கரையில் ஏரி காத்த ராமர் கோயில் தனியாக இருக்கிறது. இதன் அர்த்த மண்டபத்தில் ராம லட்சுமணர்களைத் தன் இரு தோள் மீதும் தூக்கிய கோலத்தில் அனுமன் காட்சியருள்கிறார்.
குபேரனிடம் நிதி குறைந்ததால், இத்தலப் பெருமாளைப் பிரார்த்தித்துத் தன் குறையை நிவர்த்தி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, குபேரன் மற்றும் வருணனுக்கு (சமுத்திரராஜன்) பிரத்யட்சக் காட்சி அருளிய பெருமாள் இவர்.
மனத்தைக் கனியவைத்த பெருமாள்
திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம் இது. ஆழ்வார் திருநின்றவூருக்கு வந்தார். பெருமாளைச் சேவித்துப் பாடல் பாடலாம் என நினைத்தபோது, பெருமாள் அவர் பாடலில் ஆர்வம் காட்டாமல், தாயாரையே நோக்கிக் கொண்டிருந்தாராம். இதனால், திருமங்கையாழ்வார் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளைப் பாடாமல், அங்கிருந்து புறப்பட்டு அடுத்த தலமான கடல் மல்லையில் உள்ள ஸ்தலசயனப் பெருமாளைத் தரிசிக்கவும் பாடல் பாடவும் சென்றுவிட்டாராம்.
தாயார் விழித்துக் கொண்டு விட்டார். ஆழ்வார் பாடல் பெறாவிடில், நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற முடியாது. திவ்ய தேச வரிசையிலும் இடம் பிடிக்க முடியாதே என நாச்சியார் வருந்தினாராம். பெருமாள், தாயாரின் கட்டளையை ஏற்று திருமங்கையாழ்வாரைத் தேடிப் போனார்.
அப்போது கடல் மல்லையில் (மாமல்லபுரத்தில்) ஸ்ரீஸ்தலசயனப் பெருமாள் முன் ஆழ்வார் நின்றிருக்க, பக்தவத்சலப் பெருமாள் பாடல் கோரி, அவர் முன் போய் நிற்க, அந்தத் தலத்தில் இருந்தபடியே ஒரு பாடலைப் பாடிப் பெருமாளிடம் கொடுத்தார் திருமங்கை ஆழ்வார்.
மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு பெருமாள் திரும்பி வந்து தாயாரிடம் கொடுக்க, இது போதாது என்று வருத்தம் கொண்டார். மீண்டும் பெருமாள் திருமங்கையாழ்வாரைத் தேடிப்போய் சோழ நாட்டில் இருக்கும் திருக்கண்ணமங்கை ஆலயத்திலிருந்த அவரிடம் இன்னொரு பாசுரம் கோரிப் பெற்றுத் திரும்பியதாக அந்தக் கதை கூறப்படுகிறது.
தாயாரின் மனங்கனிந்த தலத்தின் மகத்துவம் இங்கு வரும் பக்தர்களையும் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எப்படிச் செல்லலாம்? சென்னையிலிருந்து திருமழிசை சென்று வலதுபுறம் திரும்பி நான்கு கிலோமீட்டர் போனால் திருநின்றவூர் வரும். ரயிலில் சென்னையிலிருந்து அரக்கோணம் பாதையில் பட்டாபிராமை அடுத்து திருநின்றவூர் ரயில் நிலையம் உள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT