Published : 11 Oct 2018 10:10 AM
Last Updated : 11 Oct 2018 10:10 AM
மதுரை மணி அய்யர் போன்ற இசை மேதைகளால் கற்பனைச் செறிவுடன் மேடைகளில் பாடப்பட்ட பாடல் தியாகராஜரின் `ஒர ஜுபு’. இறைவனின் மீதான பக்தியையும் அன்பையும் ஒருங்கே சொல்லும் இந்தப் பாடலில் உருக்கமும் கருணையும் போட்டி போடும். இந்த கீர்த்தனையை அதன் உருக்கமும் தெய்வாம்சமும் மாறாமல் தன்னுடைய வயலினில் ஒலிக்கவைத்திருக்கிறார் கார்த்திக். அவரு டைய `இண்டோ சோல்’, கர்னாடக இசைப் பாணியை யும் மேற்கத்திய இசை பாணியையும் ஒருங்கே கொண்டு, பரீட்சார்த்த முறையில் புதிய இசை அனுபவத்தை கேட்பதற்கு நம்முடைய காதுகளை தயார்ப்படுத்துகிறது.
கேள்விக்கென்ன பதில்
“நல்ல இசை என்பது எதுவாக இருக்க முடியும்? கர்னாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல பாணிகளை அடிப்படையாகக் கொண்டதா, குறிப்பிட்ட வாத்தியங்களை, அதிலிருந்து வெளிப்படும் ஒலிகளில் இருந்து வெளிப்படுவதா இப்படிப் பலவற்றையும் அந்தக் கேள்விக்குப் பதிலாய்ப் பொருத்திப் பார்த்ததில், மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் இசையே நல்ல இசையாக இருக்க முடியும் என்னும் முடிவுக்கு வந்தோம்” என்கிறார் கார்த்திக்.
ஐக்கிய நாடுகளின் கிளாஸ்டன்பரி, அமெரிக்காவின் கென்னடி சென்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ், ஸ்பெயினின் வுமேட், பெர்த்தின் ஒன் மூவ்மென்ட் போன்ற உலகின் முக்கிய இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசைப் பங்களிப்பைத் தந்திருப்பவர் கார்த்திக்.
கார்த்திக்கின் குழுவில் இருக்கும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணிகளில் இசையைக் கற்றிருந்தாலும், அவர்களுடைய இசை ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகவே இண்டோசோல் (Indosoul) என்னும் தலைப்பின் கீழ் தங்களின் இசைப் பங்களிப்பை அவர்கள் செய்துவருகின்றனர். மேற்கத்திய பாணி, நாட்டுப்புற இசை, கர்னாடக இசை எனப் பல பாணி இசை வடிவங்களில் இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இவர்களுடைய இசையின் சிறப்பாக அமைந்திருக்கிறது.
கர்மாவின் இரண்டு பக்கங்கள்
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல், எதிரெதிர் துருவங்களைப் போல் இரண்டு விதமான உணர்ச்சி அலைகளை நம்முள் உண்டாக்குகிறது இந்த இசை. சிறு தூறலாகத் தொடங்கி கனமழை பொழிந்து முடித்தவுடன் மீண்டும் தூவானம்போல் அமைதியாகிறது நம்முடைய மனம்.
பித்துக்குளி முருகதாஸின் `செங்கதிர் வானும்.. தன் கதிர் மதியும்’ பாடலுடன் போர்ச்சுகல் நாட்டில் பிறந்த ஃபெர்னான்டோ பெஸோ (Fernando Pessoa) என்ற புகழ்பெற்ற கவிஞரின் வரிகளும் சாரமதி என்ற ராகத்தில் ஒன்றிணையும் ரசவாதமும் கார்த்திக்கின் இசையில் நிகழ்வதைக் கேட்க முடிகிறது.
’ஓர ஜுபு’ இசையில் லயிக்க https://www.youtube.com/watch?v=KXTEHLCjRAU
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT