Published : 19 Apr 2019 09:56 AM
Last Updated : 19 Apr 2019 09:56 AM
சித்ரா பெளர்ணமியான இன்றைய நாளில், (19.4.19) சித்ரகுப்தனை வழிபடுவோம். அவரை தரிசித்து அவரருளைப் பெறுவோம். எம பயம் விலக்குவோம்.
சித்ரகுப்தனா... எப்படித் தரிசிப்பது, எங்கே தரிசிப்பது என்கிறீர்களா?
புராணக் கதையொன்றை முதலில் அறிவோம்.
திருக்கயிலையில் பார்வதிதேவி, தோழியருடன் இருந்த போது - பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது எல்லோருக்கும். அதன்படி - உமையாள், தான் வரைந்த சித்திரத்திற்கு உயிரூட்டினாள்.
அந்த சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டவனுக்கு, சித்ரகுப்தன் எனத் திருப்பெயர் சூட்டினாள். அதன்பின் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற அன்னை -நடந்தவற்றை விளக்கினாள். சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டிக்கொண்டாள். இப்படி - சித்ரகுப்தன் தோன்றிய நாள் -சித்ரா பௌர்ணமி.
அதேசமயம் - தனியொரு நபராக கோடானுகோடி மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கிறது. தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று இந்திரனிடம் யமதர்மராஜன் முறையிட்டான். இருவரும் இறைவனிடம் வந்தனர்.
சிவனாரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று - சித்ரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள்.
இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியில் - சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது சிவனார் தோன்றி, ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான - நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்து - சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார்.
தன் மனைவியருடன் யமபுரிக்குப் புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை எந்தத் தவறும் வராதபடி இன்றும் இன்றைக்கு வரை கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே - சொர்க்கமா நரகமா என்பது தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கின்றன சாஸ்திர நூல்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று ஆங்காங்கே பந்தல் அமைத்து இரவு நேரத்தில் பெரியோர்கள் சித்ரகுப்த நாயனார் கதையைப் படிப்பார்கள். மக்கள் கூட்டமாக அமர்ந்து விடிய விடிய சித்ரகுப்தர் கதையைக் கேட்பார்கள். அப்போது சித்ர குப்தனுக்கு - சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பணியாரம் -நைவேத்தியமாகப் படைத்து அனைவருக்கும் வழங்கப்படும்.
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து - பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி - விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தொலையும் என்கின்றனர்.
காலையில் விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். மாலையில் நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றுங்கள். பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயத்தம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயிலே அமைந்திருக்கிறது. முடிந்தால், காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ள சித்ரகுப்தனுக்கு உரிய ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம்!
ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்யுங்கள். அன்னதானம் செய்வது பாவங்களையெல்லாம் போக்கிவிடும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம். பேனா முதலான பொருட்களை கொடுக்கலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதுதான் நம் பாவங்களையெல்லாம் போக்குவதற்கான முதல்வழி. உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து, நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி சொர்க்கத்தில் வாழலாம் !
இன்னும் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, தான தருமங்கள் செய்தால், வாழும்போதே சொர்க்கம் போல் நிம்மதியைத் தந்தருள்வார் சித்ரகுப்தன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT