Published : 25 Apr 2019 10:53 AM
Last Updated : 25 Apr 2019 10:53 AM
ஓநாய்போல் நடிப்பதைத் தவிர்த்திடு
ஆட்டிடையனின் பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு
- ஜலாலுதீன் ரூமி
சிறு வயதில் மஃரூபுல் கர்கீ இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார். பள்ளியில் ஒரு நாள் அவருடைய ஆசிரியர் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைக்கு எதிராகப் பேசும்போது, கர்கீ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
அவருக்குக் கடுமையான தண்டனைகளை ஆசிரியர் அளித்தபோதும், கர்கீ ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, இஸ்லாம் மார்க்கத்துக்கு ஆதரவாகப் பேசினார். கைகளின் வலு தீரும்வரை அடித்த ஆசிரியர், இறுதியில் மர்கீயை பள்ளியை விட்டு வெளியேற்றினார். இந்த நிகழ்வே ஒரு சாதாரண பள்ளி மாணவனை மஃரூபுல் கர்கீ எனும் சூபி ஞானியாக மாற்றியது.
மனம் போன போக்கில்
பள்ளியை விட்டு வெளிவந்த கர்கீக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. மனம் போன போக்கில் நடந்த அவர், இறுதியில் மூஸா அல் ரஸாவின் வீட்டை அடைந்தார். அன்பும் சாந்தமும் நிறைந்த அவரது முகத்தைப் பார்த்ததும், கர்கீ வாய்விட்டு அழத் தொடங்கினார். காரணத்தை மூஸா கேட்டதும், பள்ளியில் நடந்த அனைத்தையும் கர்கீ ஒன்று விடாமல் தெரிவித்தார்.
மேலும், தான் இங்கேயே தங்க விரும்புவதாகவும், வீட்டுக்குச் சென்றால் தன்னைப் பெற்றோர் அடிப்பார்கள் என்றும் அழுதபடியே சொன்னார். பதில் ஏதும் சொல்லாமல், கர்கீக்கு ஆன்மிகப் பாடத்தை மூஸா போதிக்கத் தொடங்கினார், அன்றிலிருந்து சூபி ஞானம் அவருடைய சுவாசமானது.
மூஸாவின் காலடியில் சூபி ஞானத்தை முழு ஈடுபாட்டுடன் கர்கீ கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில், கற்றலும் இறை வணக்கமும் மட்டுமே கர்கீயின் வாழ்வாக இருந்தது. பல ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. மூஸாவிடம் கற்க வேண்டியது எல்லாம் கற்று முடித்ததும், தன்னுடைய இல்லத்துக்கு கர்கீ சென்றார். வீட்டின் கதவைத் தட்டியதும் அவருடைய அன்னை ஓடிவந்து கதவைத் திறந்தார்.
வாசலில் கர்கீயைக் கண்டதும், அவருடைய அன்னை வாய் விட்டுக் கதறி அழத் தொடங்கினார். அழுகுரல் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த கர்கீயின் தந்தையும் அழத் தொடங்கினார். கர்கீ அழவில்லை. அமைதியாக நின்றார். பின் தனது சாந்தக் குரலில் அவர்களை நோக்கி நடந்ததைச் சொன்னார்.
அதிர்ச்சியில் உறைந்து போன அவர்கள், “வயதான காலத்தில் இனியாவது எங்களைத் தனியே தவிக்கவிட்டு எங்கும் செல்லாதே. உனது மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் ஞானத்துக்கும் இடையூறாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம்” என்று கூறினர்.
பெற்றோர் காட்டிய வழி
பெற்றோரை விட்டு அதன்பின் கர்கீ எங்கும் செல்லவில்லை. அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைக் கண்ணும் கருத்துமாய் நிறைவேற்றினார். பெற்றோருக்கு ஒரு சிறு மனச் சுணக்கம்கூட நேராமல் பார்த்துக்கொண்டார். கர்கீயின் ஒழுக்கத்தையும் இறை பக்தியையும் பார்த்து, மெய்சிலிர்த்துப் போன அவருடைய பெற்றோர், “உடலில் வலு உள்ளவரை எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
எங்களுக்காக உனது வாழ்வைச் சுருக்கிக்கொள்ளாமல், வெளியே சென்று உனது மெய்ஞான வேட்கையைத் தணித்துக்கொள்” என்று கூறினர். பெற்றோரின் உடல்நலத்தை உறுதி செய்தபின், கர்கீ தனது ஆன்மிகப் பயணத்தை மீண்டும் மேற்கொண்டார்.
அலீ இப்னு அல்ரஸா எனும் சூபி ஞானியைச் சந்தித்த கர்கீ, தனது வாழ்வின் நீண்ட காலத்தை அவருடன் செலவிட்டார். சொல்லப்போனால், மெய்ஞானத்தின் ரகசியப் பக்கங்கள் அனைத்தையும் அங்கே அவரிடம் கர்கீ கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த இப்னு ஸம்மாக்கின் உரையை ஒரு நாள் கேட்க நேர்ந்தது.
அந்த உரையின்போது, “கடவுளை விட்டு முகம் திருப்பிக்கொள்பவரிடம் கடவுளும் முகம் திருப்பிக்கொள்கிறார். கடவுளை நெருங்க முயல்பவரிடம் கடவுளும் நெருங்குகிறார். கடவுளை விரும்புபவரைக் கடவுளும் விரும்புகிறார்” என்று அவர் கூறினார். அதைக் கேட்ட கர்கீயின் மெய் சிலிர்த்தது.
அவருடைய மனத்தின் முடிச்சுகள் முற்றிலுமாக அவிழ்ந்துகொண்டன. ஓர் உன்னத பரவச நிலையை கர்கீ அடைந்தார். அந்தப் பரவச நிலை தனது வாழ்நாள் முழுவதும் நீடித்தது என கர்கீ பின்னாளில் தன்னுடைய சீடரிடம் தெரிவித்தார்.
இறுதிக் காலம்
“ஒரு ஞானியை அவர்களின் மூன்று குணாதிசயங்களால் அறியலாம். அவர்களுடைய கவலையெல்லாம் இறைவனுக்காகவே இருக்கும். அவர்களின் கடமைகள் அனைத்தும் இறைவனுக்காகவே இருக்கும். அவர்கள் பயங்கொள்வதும் இறைவனிடம் மட்டுமே” என்று தன்னுடைய சீடர்களிடம் அடிக்கடி கூறுவார். இந்தக் கூற்றின் படித்தான் அவரது வாழ்வும் இருந்தது. அதனால்தான், “இறை வணக்கத்திலிருந்து ஓய்வு பெறும்போதுதான் ஒரு துறவிக்குப் பிறரைத் திருத்தும் உரிமை கிடைக்கும்.
நானும் ஒரு துறவியே. ஆனால், எனக்கு இறை வணக்கமே வாழ்வாக இருக்கும்போது, மற்றவர்களின் ஆன்மிக விஷயங்களிலோ லௌகீக விஷயங்களிலோ தலையிட எனக்கு உரிமை ஏது? நேரம் ஏது? என்னுடைய வாழ்வே உங்களுக்கான போதனை” என்று தன்னுடைய சீடர்களிடம் அவரால் கூற முடிந்தது.
ஒருநாள், சூபி மார்க்கத்துக்கு எதிரானவர்கள், இவருடைய ஆன்மிக வழிகாட்டியான மூஸாவின் இல்லத்தில் கூடி கலகம் செய்தனர். மூஸாவைக் காப்பாற்றுவதற்காக அங்கே சென்ற கர்கீ, கலகக்காரர்களின் கோரத் தாக்குதலில் சிக்குண்டு படுகாயமடைந்தார். “நான் எனது வாழ்நாள் முழுவதும் என்னை ஆட்டுவிக்கும், எனது சித்தம் முழுவதும் நிரம்பி வழியும் கடவுளிடம் மட்டுமே உரையாடிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், மக்களோ நான் அவர்களிடம் உரையாடுவதாக எண்ணுகின்றனர்” என்று தன்னுடைய முதன்மை சீடரான ஸர்ரீ அஸ்ஸகதீயிடம் தனது மரணப் படுக்கையில் கூறியவர், 815-ம் ஆண்டில் இவ்வுலகை விட்டு நீங்கி, தனது உயிருக்கும் மேலாக நேசித்த கடவுளிடம் சென்றார்.
(நேசம் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT