Published : 20 Mar 2019 06:56 PM
Last Updated : 20 Mar 2019 06:56 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 70: சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்

நாள் ஒன்றுக்குச் சராசரியாக நாம் விடத்தக்க மூச்சுகளின் எண்ணிக்கை 21,600 என்று ஒரு கணக்கு. என்ன சான்று?

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்

தளம்கொள் இரட்டியது ஆறு நடந்தால்

வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து

விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே

(திருமந்திரம் 2177)

- என்று திருமூலரே கணக்குச் சொல்வதுதான் சான்று. மேற்சொன்ன பாட்டில் முந்நூறு என்பதில் குழப்ப மில்லை. முப்பதோடு ஒருபான் என்பது முப்பதையும் பத்தையும் பெருக்க வரும் முந்நூறு. முன் முந்நூறையும் பின் முந்நூறையும் கூட்ட வருவது அறுநூறு. ஆறை இரட்டுதல் என்பது ஆறையும் ஆறையும் பெருக்குதல்.

பெருக்கினால் முப்பத்தாறு. இனி, அறுநூற்றையும் முப்பத்தாறையும் பெருக்கினால் இருபத்தோராயிரத்து அறுநூறு. அதாவது, 300 + (30X10 = 300) X (6X6 = 36) = 21,600. இந்தக் கணக்கில் மூச்சு விட்டால், உடல் இயக்கம் இயல்பாக இருக்கும்; உடல் இயக்கம் இயல்பாக இருந்தால் மட்டுமே அறிவை அடைதல் தெளிவாக நடக்கும்;

அறிவை அடைதல் தெளிவாக நடந்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும்; எனவே விடுதலையை வழங்கும் அறிவும், அறிவையே வழங்கும் மூச்சும் ஒன்றுக்கொன்று நேர்த் தொடர்பு உடையன என்பது திருமூலர் கணக்கு.

இந்தக் கணக்குச் சரிதானா? இயல்பான நிலையில் ஒரு மனிதனின் மூச்சு எண்ணிக்கை மணித்துளிக்கு 12 முதல் 18 வரை என்கிறார்கள் மருத்துவ அறிவியலாளர்கள். மூச்சின் அளவை மணித்துளி ஒன்றுக்குச் சராசரியாக 15 என்று வைத்துக்கொண்டால் மணி ஒன்றுக்கு 900; நாள் ஒன்றுக்கு 21,600. திருமூலரின் கணக்கு சற்று ஏறக்குறையச் சரிதான்.

யாக்கைக்கு அழிவில்லை

இவ்வளவு குறிப்பாக மூச்சைக் கணக்கெடுக்க வேண்டிய கட்டாயம் என்ன என்றால், மூச்சு நம் உடலை உறுதிப்படுத்தி, நம்மைப் புதிய உயிராக்கி, நமக்கு ஏதும் கவலை அறச் செய்து, மதி தன்னை மிகத் தெளிவு செய்து, என்றும் மகிழ்ச்சி கொண்டிருக்கச் செய்கிறது என்பதும், நம் தளைகளிலிருந்து நம்மை விடுதலைப்படுத்துகிறது என்பதுதான்.

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே;

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவுஇல்லை;

அங்கே பிடித்து, அது விட்டுஅள வும்செல்லச்

சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே. (திருமந்திரம் 570)

என்று திருமூலர் மூச்சைத் திரும்பத் திரும்ப முதன்மைப் படுத்துகிறார். எங்கே இருந்தாலும் சரி. இடது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுத்து மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். செய்தால் உடம்புக்கு அழிவில்லை. மூச்சை அளவாகப் பிடித்து விட்டால் சங்குதான். இந்தச் சங்கு வெற்றிச் சங்கு. தளைப்படுத்துகிறவற்றில் இருந்து மீண்டு ஒருவன் தலைவனாகும்போது முழங்கும் மங்கலச் சங்கு.

சங்கைச் சாவோடு மட்டுமே தொடர்புபடுத்தி இழவுப் பொருள் ஆக்கிவிட்டார்கள் நம் ஆட்கள். காற்றோடு தொடர்புடையது சங்கு. காற்றை உள்ளே ஊதினால் உயிர் பெற்று ஒலி தரும்; காற்றை ஊதாதபோது வெற்றுக்கூடாக, வெறும் காட்சிப் பொருளாக நிற்கும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்கின்றன தந்திர நூல்கள். அண்டம் என்பது உலகு; பிண்டம் என்பது உடல். உலகில் என்ன இருக்கின்றனவோ அவைதாம் உடலிலும் இருக்கின்றன; உடலில் என்ன இருக்கின்றனவோ அவைதாம் உலகிலும் இருக்கின்றன.

பிண்டமாகப் பிறக்கும் உடலுக்குள் உயிர் இருக்கிறது; அண்டமாக இருக்கும் உலகத்தில் காற்று இருக்கிறது. பிண்டம் பிறந்ததும் அதனுள் ஊதப்படும் காற்று உயிரைத் தழைக்க வைத்து, அதனோடு உயிர்த் தோழமை ஆகிறது. காற்றும் உயிரும் தோழமை கொண்டிருக்கும்வரை உயிரை அண்ட முடியாத சாவு, காற்றின் தோழமை தளரும்போது உயிரை அண்டுகிறது; உருவி எடுத்து அள்ளிப் போகிறது.

ஞான சர நூல்

மூச்சுக் காற்றுக்குச் சரம் என்று பெயர். உயிர்த் தோழமையான சரத்தை உயிரோடு இணை பிரியாது வைத்திருக்கும் முறைமையைக் கற்பிக்கத் தந்திர மரபில் சிவ சர உதயம், பவன விசயம் போன்ற சரநூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதற்காக எழுதப்பட்ட தலைநூல் திருமந்திரமே. பின்னாளில் சிவ சர உதயத்தையும் திருமந்திரத்தையும் தழுவிக்கொண்டு ‘சங்கரனார் உமாமகேசுவரிக்கு அருளிச் செய்த, ஞானச் சர நூல்’ என்ற பெயரில் ஒரு நூல் ஆக்கப்பட்டது.

சரங்கள் மொத்தம் மூன்று: இடகலை, பிங்கலை, சுழி முனை ஆகியன. இடகலை அல்லது இடநாடி என்பது மூக்கின் இடது துளை; பிங்கலை அல்லது வலநாடி என்பது மூக்கின் வலது துளை; சுழிமுனை அல்லது நடுநாடி என்பது இரண்டும் ஒருங்கியைந்த நிலை.

மனிதச் செயல்கள் மொத்தம் மூன்று: உடல் சார்ந்தவை; உளம் சார்ந்தவை; உயிர் சார்ந்தவை. நீங்கள் தண்ணீர் இறைக்கிறீர்கள், சிறுநீர் கழிக்கிறீர்கள், உண்கிறீர்கள், விளையாடுகிறீர்கள்; இவை உடல் சார்ந்த செயல்கள். நீங்கள் கவலைப்படுகிறீர்கள், எதையோ படித்து உள்வாங்க முயல்கிறீர்கள், எதற்காகவோ திட்டமிடுகிறீர்கள்; இவை உளம் சார்ந்த செயல்கள்.

பல திசைக் கவனங்களில் சிதறுண்டு கிடக்கும் நீங்கள் உங்களைத் தொகுத்துக்கொள்ள முயல்கிறீர்கள், உடல் ஓர் இயக்கமும் மனம் ஓர் இயக்கமுமாக இரட்டித்துப் போகாமல் ஒற்றையாக முயல்கிறீர்கள்; இது உயிர் சார்ந்த இயக்கம்.

மூன்று சரமாக இயங்கும் மூச்சுக்கும் மூன்று தளமாக நிகழும் செயல்களுக்கும் நேரடித் தொடர்புண்டு. இடகலையாகிய மூக்கின் இடது துளையில் சரம் ஓடும்போது உளம் சார்ந்த செயல்கள் ஊக்கம் பெறுகின்றன; பிங்கலையாகிய மூக்கின் வலது துளையில் ஓடும்போது உடல் சார்ந்த செயல்கள் துடித்தெழுகின்றன; இடகலை, பிங்கலை ஆகிய இரண்டிலும் ஓடும்போது உயிர் சார்ந்த செயல்கள் உயிர்ப்படைகின்றன.

ஒருவர் தன்னைத் தொகுத்துக் கொள்வதற்குத் ‘தேனிப்பு’ என்று பெயர். வடமொழியில் தியானம் என்பார்கள். தேன் என்பது இனிப்பு, மகிழ்வு; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான். தேன் என்பது தேறல், தெளிவு; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான். தேன் என்பது துளித்துளியாகச் சேகரிக்கப்படுவது; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான்.

‘தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை’ (திருமந்திரம் 1900) என்று ஓரிடத்தில் திருமூலர் தேனிப்பைக் குறிக்க, இறைவன் திருப்பெயரைச் சொல்லிச் ‘சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 9) என்று மாணிக்கவாசகரும், உங்கள் பிள்ளைகளுக்குக் ‘கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ’ என்று பெரியாழ்வாரும் (திவ்வியப் பிரபந்தம், 381) தேனிப்பை நம் மனத்தில் பதிக்கிறார்கள்.

சரம் பார்க்கப் பழகு

தேனித்து, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கிணைத்துத் தன்னைத் தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறவர்கள் சரம் நடுநாடியில் அதாவது சுழிமுனையில் ஓடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேனிக்கும்போது சரம் வலநாடியில் ஓடுமானால் உடல் அலைவுறும். தேனிக்கும்போது சரம் இடநாடியில் ஓடுமானால் உள்ளம் அலைவுறும்.

தேனிக்கும்போது சரம் நடுநாடியில் ஓடினால் உடலும் உள்ளமும் ஒருங்கியைகின்றன. எனவே தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ள விரும்புகிற ஒவ்வொருவரும், விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்கும் ஒவ்வொருவரும் சரம் பார்க்கப் பழக வேண்டும்.

வருந்துகிறேன்

சென்ற வார ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ தொடரில், அறியாமல் ஒரு பிழை நேர்ந்து விட்டமைக்கு வருந்துகிறேன். குன்றக் குடி பெரிய அடிகளாரான தவத்திரு தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக அடிகளார் பற்றிக் குறிப்பிட வேண்டிய இடத்தில், இன்றைய அடிகளாரைக் குறிப்பிட்டுவிட்டேன். தவத்திரு பொன்னம்பல அடிகளார், குன்றக்குடி ஆதீனத் தலைவராக தனது முன்னவர் போலவே மிகச் சிறப்பான அருள்தொண்டு ஆற்றி வருகிறார். அவருக்கு பல்லாண்டு பல்லாண்டு..! பிழை பொறுக்க வேண்டுவல்.

- கரு. ஆறுமுகத் தமிழன்


(உயிர் பழகுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x