Published : 18 Apr 2019 03:22 PM
Last Updated : 18 Apr 2019 03:22 PM
சித்ரா பெளர்ணமி நாளில், மா, பலா, வாழை வைத்து, பூஜிப்பதால், சகல ஐஸ்வர்யத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதந்தோறும் பெளர்ணமி நாளில், வழிபாடுகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி ரொம்பவே விசேஷம். சித்திரை நட்சத்திரமும் பெளர்ணமியும் கூடிய இந்தநாள், சித்ரா பெளர்ணமி என்று போற்றப்படுகிறது.
சித்ரா பெளர்ணமி நாளில், கடல் நீராடுவது சிறப்பு. இந்தநாளில், கடலில், ஆற்றில் என நீர்நிலைகளில் நீராடினால், மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மேலும் நீர்நிலைகளில் நீராடினால், பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
முக்கியமாக, சித்ரா பெளர்ணமி நாளில், முக்கனிகள் கொண்டு நைவேத்தியம் செய்து, குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவது மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சித்ரா பெளர்ணமி நாளைய தினம் (19.4.19). சுக்கிர வாரம் என்கிற வெள்ளிக்கிழமையில், சித்ரா பெளர்ணமி நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி, கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றுங்கள். மா, பலா, வாழை என வைத்து, மற்ற நைவேத்தியங்களுடன் சேர்த்து இவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறலாம்.
சித்ரா பெளர்ணமியில், எமதருமனையும் சித்ர குப்தனையும் மனதார வழிபடுங்கள். அவர்களை மனதார வேண்டிக்கொண்டால், நோய்வாய்ப்பட்டவர்கள் பூரண குணமாகிவிடுவார்கள். தீராத நோயும் தீர்ந்துவிடும். நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கை அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் மேலோங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT