Published : 10 Apr 2019 09:25 AM
Last Updated : 10 Apr 2019 09:25 AM
பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். நமக்கு வந்திருக்கிற எதிர்ப்புகளெல்லாம் எகிறிகுதித்து காணாமற்போகும். கவலைகளையும் தடைகளையும் விரட்டியடித்து அருள்புரிவாள் அன்னை. இன்று பஞ்சமி திதி (10.4.19).
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், இந்த ஏழுபேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹிதேவி.
பஞ்சமி திதியில் வாராஹிதேவியை தரிசித்து மனதார வழிபடுவது மகோன்னதமான பலன்களையெல்லாம் தந்தருளும். எதிர்ப்புகளையெல்லாம் எதிரிகளையும் துவம்சம் செய்து அருளுவாள். துஷ்ட சக்திகளை அடித்து விரட்டுவாள். எல்லாச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்து வடை நைவேத்தியம் படைப்பது ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர் கலந்த தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், அதில் குளிர்ந்து போவாள் வாராஹி. அந்த மகிழ்வில், நமக்கு வரங்களைத் தந்தருள்வாள்!
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு என இவற்றில் ஏதேனும் ஒன்றையும் நைவேத்தியமாக படைத்து வாராஹியை வணங்குங்கள்.
வீட்டின் தரித்திரம் விலகி ஓடும். சுபிட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். கடன் தொல்லையில் இருந்தும் எதிரிகளின் தொல்லையில் இருந்தும் விடுபடுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT