Last Updated : 18 Apr, 2019 12:41 PM

 

Published : 18 Apr 2019 12:41 PM
Last Updated : 18 Apr 2019 12:41 PM

சூபி வழி 12: அன்பு கடலை குவளைக்குள் அடக்கும்

அன்பால் இருள் வெளிச்சம் ஆகும்

அன்பால் கசப்பு இனிமை ஆகும்

அன்பால் வேதனை சுகமாகும்

அன்பு கடலை குவளைக்குள் அடக்கும்

அன்பு மலையை மணல் ஆக்கும்

அன்பே இந்தப் பூமியை ஆட்டி படைக்கும்

- ஜலாலுதீன் ரூமி

ஆன்மிகத் தேடலைக்கொண்டு தனது வாழ்வைத் தகவமைத்துக்கொண்ட ஞானியே அபூ உதுமான் அல் கைரி. வற்றாத அன்பும் முடிவற்ற நம்பிக்கையும் அவருடைய அடையாளங்கள். சூபி உலகின் மும்மூர்த்திகளில் ஒருவர். பாக்த்தாதில் ஜூனைத்தும் சிரியாவில் அபூ அப்துல்லா இலாஜ்ஜும் மெய்ஞானத்தைப் பரப்பிய காலகட்டத்தில், நிஷாப்பூரில் மெய்ஞானத்தை ஆழ்ந்து விதைத்த மிகப்பெரும் ஞானி இவர். இறை நம்பிக்கையிலும் இறை பக்தியிலும் மற்ற இருவரையும்விட இவர் ஒரு படி மேல் என்பதே நிதர்சனம்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த இவரது குழந்தைப்பருவ வாழ்வு பிரியத்தாலும் வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. மிகச் சிறந்த கல்வி அவருக்கு வழங்கப்பட்டது, சொல்லப் போனால், அவருக்கு வழங்கப்பட்டவை அனைத்தும் உலகின் சிறந்தவையாகவே இருந்தன. இன்பமும் மகிழ்வும் அவருடைய வாழ்வில் நிறைந்திருந்தாலும், ஏனோ அவருடைய மனம் அவற்றில் ஒட்டாமல் தனித்து இருந்தது. அவருடைய தேவை எதுவென்று அவருக்குத் தெரியாமல் இருந்ததால், ’உனக்குத் தேவை’ எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்.

ஒரு நாள் பள்ளிக்குச் செல்வதற்காக, ஊருக்கு வெளிப்புறம் இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தைக் கடக்கும்போது அந்தக் காட்சி அவர் கண்ணில் பட்டது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் ஒரு கழுதை நின்றுகொண்டு இருந்தது. அதன் முதுகில் மேல் ஒரு பெரிய கழுகு அமர்ந்து இருந்தது. அந்தக் கழுதையின் முதுகின் மேலிருந்து புண்ணை அந்தக் கழுகு பொறுமையாகக் கொத்திச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அந்தக் கழுகைத் துரத்தும் வலுவும் திறனும் இல்லாததால், அந்தக் கழுகின் கொத்தலையும் வேதனையையும் அந்தக் கழுதை சகித்தவாறு நின்றுகொண்டு இருந்தது.

அந்தக் கழுகு தனது மார்பில் குத்தி துளையிடுவது போன்ற வலியை அபூ உதுமான் உணர்ந்தார், இத்தகைய வேதனையை அவர் அதற்குமுன் அனுபவித்தது இல்லை. சற்றும் யோசிக்காமல், தனது மேலாடையைக் கழற்றி அந்தக் கழுதையின் மீது போர்த்திவிட்டார். அதன் பின்னர், தனது தலைப்பாகையைக் கழற்றி அதன் புண்ணின் மீது கட்டினார். அந்தக் கழுதை கண்ணில் தென்பட்ட நிம்மதியும் ஆசுவாசமும் அபூ உதுமானுக்கு, தனது வாழ்வில் பயணிக்க வேண்டிய பாதையைக் காட்டின. பேரன்பின் ருசியைச் சிறிதளவு பருகிய அவருடைய மனதுக்குள் ஆன்மிகத் தாபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

கண்ணீர் மல்கக் குருவைத் தேடி

மேலாடையின்றி நின்ற அவர் பள்ளிக்கும் செல்லவில்லை, வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் வசித்த ரை நகரில், ஆன்மிக ஞானியாகத் திகழ்ந்த ’யஹ்யா இப்னு முஆத்’தின் வீட்டுக்கு நேரடியாகச் சென்றார். தன்னை ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்லும்படி, கண்ணீர் மல்க அவரிடம் கெஞ்சினார். யஹ்யா எதுவும் பேசவில்லை. அமைதியாக அபூ உதுமானின் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். சிறிதுநேரம் கழித்து ’சரி’ என்று மட்டும் சொன்னார்.

பெற்றோரை மறந்து, வீட்டை மறந்து, செல்வ செழிப்பு மிக்க வாழ்வை மறந்து அபூ உதுமான் அங்கேயே தங்கிவிட்டார். நாட்கள் மாதங்கள் ஆயின. மாதங்கள் வருடங்கள் ஆயின. ஆன்மிக ஒளியில் அபூ உதுமானின் வாழ்வு ஜொலித்தது. அவருடைய ஆன்மிக வாழ்வுக்கான அடித்தளம் வலுவாக அமைக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், கர்மான் நகரில் வாழ்ந்த மிகப்பெரும் சூபி ஞானியான ‘ஷா இப்னு ஹூஜா’வைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். கேள்விப்பட்ட மறுகணமே எதைப் பற்றியும் யோசிக்காமல், கர்மான் நகருக்குச் சென்று ஷா இப்னுவின் சீடராகி விட்டார். சில ஆண்டுகளுக்குப் பின்பு அங்கிருந்து நிஷாப்பூருக்குச் சென்று ’அபூஹப்ஸ்’ எனும் ஞானியிடம் சீடராகி விட்டார். அபூஹப்ஸ் தன்னுடைய மகளை அபூ உதுமானுக்குத் மணமுடித்து வைத்தார். அவர்களது அன்பான இல்லற வாழ்வுக்குச் சான்றாக அவர்களுடைய ஒரே மகன் இருந்தான்.’அபூஹப்ஸ்’ உடன் கழித்த நாட்கள், அபூ உதுமானின் ஆன்மீக வாழ்வின் உச்சம்.

அபூவின் அமைதி

ஒருமுறை செல்வந்தர் ஒருவர் அபூ உதுமானைத் தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். இவரும் அவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால், வீட்டு வாசலில் நின்ற அந்தச் செல்வந்தர் 'சாப்பாட்டுக்கு அலையும் உன்னைப் போன்ற ஒரு ஞானியைப் பார்த்ததே இல்லை' என்று சொல்லி அவரை விரட்டிவிட்டார். இவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தவழியே திரும்பிச் சென்றார். சிறிது தூரம்தான் அவர் சென்றிருப்பார், அதற்குள் மீண்டும் அந்தச் செல்வந்தர் இவரை அழைத்தார்.

இவர் மீண்டும் திரும்பிச் சென்றார். வீட்டுக்குச் சென்றவுடன் மீண்டும் அவர் தகாத வார்த்தைகளால் திட்டி விரட்டிவிட்டார். இவ்வாறு சுமார் முப்பது முறை அவர் அழைப்பதும் இகழ்வதுமாக இருந்தார். ஒருமுறைகூட அபூ கோபப்படவில்லை. 'நீங்கள் மனிதர்தானா? எப்படி உங்களால் கோபம்கொள்ளாமல் இருக்க முடிகிறது?" என்று வியப்புடன் கேட்டார். "கூப்பிட்ட உடன் ஓடிவருவதும், விரட்டிய உடன் ஓடுவதுமாகவும் இருக்க ஒரு நாயால் முடியும்போது, என்னால் மட்டும் முடியாதா என்ன?" என்று அபூ அமைதியாகத் திருப்பிக் கேட்டார்.

சாமானியர்கள், ஆன்மிக வாழ்வின் சாரத்தை அறிவதற்கு அவரது பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது. வாழ்நாளில் எண்ணற்ற மனிதர்களின் ஆழ்மனத்தில் மெய்ஞானத் தேடலைக் கிளறிவிட்டு ஞானிகளாக மாற்றி உள்ளார். சூபி ஞானத்தின் பெரும் ஆலமரமாகத் திகழ்ந்த அவர் 911-ல் மறைந்தார். அதன்பின், அவருடைய சீடர்கள் உலகெங்கும் விரவி, சூபி ஞானத்தின் மகத்துவப் பேரொளியால் உலக மாந்தர்களின் மனங்களை ஒளிரச் செய்தனர். இன்றும் ஒளிரச் செய்கின்றனர்.

(மனம் ஒளிரட்டும்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு : mohamed.hushain@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x