Published : 18 Apr 2019 12:10 PM
Last Updated : 18 Apr 2019 12:10 PM
‘உலகைப் படைத்த கடவுளின் மகனாகிய இயேசு பூமியில் மனிதராகப் பிறந்தார். உலகத்தின் பாவங்களுக்காகத் தன்னையே பலியாகக் கொடுக்க வேண்டி துன்பங்களை அனுபவித்தார்.
ரோமானியர்களின் மிகக் கொடிய மரணதண்டனையான சிலுவை சாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அவரது உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, தாம் முன்பாகவே கூறியபடி சாவை வென்று, மூன்றாம் நாள் உயிர் பெற்றெழுந்தார்.
உயிர்த்தெழுதலுக்குப் பின் தன் சீடர்களுக்குத் தரிசனம் தந்து, அவர்களைத் தனது தூய ஆவியால் நிரப்பி, உலகம் முழுவதும் ‘சமாதானத்தின் செய்தியை எடுத்துச் செல்லும்படி’ பணித்தார். பின்னர் இயேசு விண்ணேற்றம் பெற்றார். இறுதித் தீர்ப்பு நாளில், உலகின் முடிவின்போது இயேசு மீண்டும் பூமிக்கு வருவார்’ என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
இயேசு உயிர் பெற்று எழுந்த நிகழ்வை அவருடைய சீடர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு அப்போஸ்தலர்கள் நற்செய்தியாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இயேசு உலகுக்கு வழங்கிய ‘நற்செய்தி’யை, மக்களிடம் எடுத்துச்சென்ற இவர்கள், அவரது உயிர்ப்புக்கு மறைசாட்சிகளாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால், இயேசுவின் சீடர்களையும் அவர்களது நற்செய்தி ஊழியத்தால் மனமாற்றம் அடைந்து ‘திருமுழுக்கு’ பெற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்குத் தங்களை மடைமாற்றிக் கொண்டவர்களையும் தேடித் தேடி கொன்றொழித்த யூதப் பரிசேயரான சவுல், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக மாறினார்! கிறிஸ்தவர்களின் பரம எதிரியாக இருந்த ஒருவரை, இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படித் தலைகீழாகப் புரட்டிப்போட்டது!
800 கிலோ மீட்டர் பயணம்
இயேசுவின் சம காலத்தில், ரோமானியப் பேரரசின் கீழ் இருந்த சிலிசியாவின் தலைநகரான தர்சு பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் தென்பகுதியில் இந்த நகரம் இருக்கிறது. அன்று கிரேக்கக் கலாச்சாரத்தின் மையம்.
செல்வம் கொழித்த ஒரு வாணிப நகரம். சவுலின் தந்தை, உணவுக்காகக் கொல்லப்படும் கால்நடைகளின் தோலைப் பதப்படுத்தி, தோலால் ஆன கூடாரங்களைத் தயாரிக்கும் தொழில் செய்து வந்தவர். அந்தக் கூடாரங்களை ரோமானிய ராணுவத்துக்கு மொத்தமாக விற்றுவிடுவார்.
அதனால் சவுலின் தந்தைக்கு ரோமானியக் குடியுரிமை கொடுத்திருந்தார்கள் (அப். 22:25-28). கிரேக்கர்கள் அதிகமாக வாழ்ந்த தர்சுவில், இஸ்ரவேல் வம்சத்தில் வந்த யென்மீன் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்களும் திரளாக வசித்துவந்தார்கள்.
சவுல் யூதப் பள்ளியில் படித்தாலும் தர்சுவில் வளர்ந்ததால் கிரேக்க மொழியைக் கற்றுக்கொண்டார். யூத மதத் திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் சவுலின் குடும்பம் தீவிரமாக இருந்தது. அதனால் சவுலின் குடும்பத்துக்குத் தனி மதிப்பு இருந்தது. ரோமானியக் கலாச்சாரத்தையும் சவுல் நன்கு அறிந்திருந்தார்.
அப்பாவிடமிருந்து கூடாரத் தொழிலைக் கற்றுக்கொண்ட சவுல் தனது 13 வயதில், சுமார் 800 கிலோமிட்டர் பயணம் செய்து யூதமத இறையியலைக் கற்றுத் தேர்வதற்காக எருசலேம் நகரத்துக்கு சென்றார். அங்கே யூத குருக்களில் ஒரு பிரிவினராகிய பரிசேயர்களின் பாரம்பரியத்தைப் போதிப்பதில் பெயர்பெற்று விளங்கிய கமாலியேல் என்ற பரிசேய குருவிடம் மாணவனாகச் சேர்ந்து கல்வி கற்றார்.
யூதத் திருச்சட்டங்களையும் அவற்றின் ஆன்மிக அர்த்தங்களையும் கற்றுத் தேர்ந்தார். கமாலியேலின் மிகச் சிறந்த மாணவன் சவுல் எனப் பெயர் பெற்றார். எருசலேம் தேவாலயத்தின் தலைமை ஆச்சாரியார்வரை சவுலின் புகழ் சென்றடைந்தது.
இயேசுவின் இறப்புக்குப்பின்
ஒரு பரிசேயராக சவுல் எருசலேமில் பிரபலமான ஒருவராக இருந்த கி.பி. 30-ல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். பின்னர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதையும் அவர் கடவுளின் மகன் என்ற பரப்புரையையும் சவுல் நம்பத் தயாராக இல்லை.
இயேசுவின் இறப்புக்குப்பின் அவருடைய சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் முதல் திருச்சபையைத் தொடங்கினார்கள். இயேசுவின் நற்செய்தியை எருசலலேமில் பரப்பத் தொடங்கினார்கள். நற்செய்திப் பணிக்குப் புதிதாக ஏழு பேரை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
அவர்களில் ஒருவர் ஸ்தோவான். அவர் பல அற்புதங்களைச் செய்ததால் யூதர்கள் மனம் மாறி கிறிஸ்தவத்தை ஏற்கத் தொடங்கினார்கள். இதை ஏற்கவும் சகிக்கவும் முடியாத யூத மதவாதிகளில் ஒருவராக சவுல் இருந்தார்.
கிறிஸ்தவ மதத்தை சவுல் அடியோடு வெறுத்து ஒதுக்க முக்கியக் காரணம், அந்தப் புதிய மதம் யூத மதத்துக்கே உரிய புனிதங்களைக் கெடுத்து கறைபடுத்திவிடும் என்று எண்ணிய தனது மதத்தின் மீதான தீவிர பற்றுதான்.
யாருக்கும் மரண தண்டனை அளிக்க அதிகாரம் இல்லாதவர்களாக இருந்த எருசலேமின் யூத மத சங்கத்தினர், மக்களைத் தூண்டி, ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றபோது அதை சவுல் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
தமஸ்கு செல்லும் வழியில்
ஸ்தோவான் கொல்லப்பட்டபின் இயேசுவின் பெயரைச் சொல்லவே அஞ்சுவார்கள் என எதிர்பார்த்தார் சவுல். ஆனால், முன்பைவிடவும் அதிகமாக இயேசுவைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை எருசலேமில் அதிகரிக்க, சவுலுக்குக் கொலைவெறி உண்டானது. எருசலேம் தலைமை குருவிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை வீடுபுகுந்து தாக்கினார்.
அவர்களைச் சித்திரவதை செய்தார். சிறையிலும் அடைத்தார். எருசலேமில் கிறிஸ்தவர் என்று யாருமில்லை என்று அவர் இறுமாப்பு கொண்டபோது அருகிலிருந்த தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவர்கள் பெருகிக்கொண்டிருப்பதையும் அங்கே அப்போஸ்தலர்கள் பணி செய்துகொண்டிருப்பதையும் அறிந்து அவர்களை அழிக்கக் குதிரை வீரர்களுடன் தனது குதிரையில் புறப்பட்டார்.
இதற்காக எருசலேம் தலைமை ஆச்சாரியாரிடம் அனுமதி பத்திரம் வாங்கிக்கொண்டார். அவர் தமஸ்கு பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது பெரும் வெளிச்சம் அவரைச் சூழ்ந்தது. தொடர்ந்து குதிரையைச் செலுத்த முடியாமல் கீழே விழுந்தார்… அப்போது அந்த ஒளியிலிருந்து ‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ?’ என்று கேட்ட ஒரு குரல் ஒலித்தது.
பயந்துபோன சவுல், ‘ஆண்டவரே நீர் யார்... நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்?’ என்று கேட்டார். ‘நீ துன்புறுத்தும் இயேசுவே நான்தான்’ என்றபோது சவுல் கொஞ்சமும் இதை எதிர்பார்க்காமல் அந்தக் குரலுக்குரியவரை அந்தப் பேரொளியில் தேடினார்.
ஆனால், சவுல் தனது கண்ணொளி இழந்திருந்தார். ‘ நீ எழுந்து தமஸ்கு நகரத்துக்குப் போ... நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ என்றது இயேசுவின்குரல்.
அவ்வாறே தனது குதிரை வீரர்களின் உதவியுடன் தமஸ்கு பட்டணத்துக்குப் போய் அங்கே யூதா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். மூன்று நாட்கள் தண்ணீர்கூடக் குடிக்காமல் இருந்த சவுல், ‘நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வையை எனக்குத் திரும்பத் தாரும்’ என்று மன்றாடினார்.
அப்போது ‘அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ என்ற குரல் தனது மனதுக்குள் ஒலிப்பதைக் கேட்ட சவுல், அனனியாவின் வருகைக்காகக் காத்திருந்தார். மூன்றாம் நாள் மாலை தமஸ்குவில் இயேசுவை அறிவித்துக்கொண்டிருந்த அனனியா வந்தார். சவுலின் கண்களைத் தொட்டார்.
சவுல் மீண்டும் பார்வை பெற்றார். அடுத்த கனமே தனது உடைவாளை வீசியெறிந்துவிட்டு ரத்தக் கறைபடிந்த வாழ்விலிருந்து மீண்டு ஞானஸ்நானம் பெற்றார்.
புறவினங்களின் அப்போஸ்தலர்!
சவுல் அத்துடன் நின்றுவிடவில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு மறைசாட்சியாக மாறி அவரை அறிவிக்கத் தொடங்கினார். யூதர்கள் அல்லாத புறவினங்களின் அப்போஸ்தலனாக அவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.
புரட்டிப்போடப்பட்ட தனது வாழ்க்கையின் மாற்றத்தை உலகுக்குக் காட்டுவதற்காக சவுல் என்ற பெயரை அவர் பவுல் என மாற்றிக்கொண்டார். யூதேயாவிலிருந்து கிளம்பி உலகின் பல நாடுகளுக்கும் இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சென்றார்.
தான் செல்கிற நாடுகளிலிருந்து, எங்கெல்லாம் திருச்சபை கட்டி எழுப்பப்பட்டதோ அங்குள்ள தேசத்தாரை அன்புடன் விளித்து இயேசுவின் வாழ்க்கை எடுத்துக்காட்டி கடிதங்கள் எழுதினார். அவை ஆன்மிக வாழ்வின் அவசியத்தைப் பேசும் மிகச் சிறந்த கடித இலக்கியமாக விவிலியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. “ நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்..
பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, சகோதரத்துவம் ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்” என்று அன்பையும் சகோதரத்துவத்தையும் போதித்தார் புனித பவுல். பல நாடுகளுக்குப் பயணம் செய்து கிறிஸ்தவ வரலாற்றின் தனிப்பெரும் நற்செய்தியாளராக வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.
தொடர்புக்கு:
jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT