Published : 14 Mar 2019 10:31 AM
Last Updated : 14 Mar 2019 10:31 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 69: பிறவார் அடைவது பேரின்பம்

‘என்றும் வேண்டும் இன்ப அன்பு’ என்றெழுதிக் கையொப்பம் இடுவார் குன்றக்குடி அடிகளார். எங்கிருந்து பிடித்தார் இந்த இன்ப அன்புக் கையொப்பச் சொற்றொடரை? பெரிய புராணத்திலிருந்து.

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார்:

‘பிறவாமை வேண்டும்; மீண்டும்

பிறப்புஉண்டேல், உன்னை என்றும்

மறவாமை வேண்டும்; இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி,

அறவா! நீ ஆடும் போதுஉன்

அடியின்கீழ் இருக்க!’ என்றார்.

(பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம், 60)

காரைக்கால் வணிகன் தனதத்தன் மகள் புனிதவதி. பரமதத்தனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளைத் ‘தெய்வம் வந்து இறங்கியவள்’ என நினைத்த பரமதத்தன் மிரட்சியுற்று அவளைப் பிரிந்து போனான். துர்க்கைக்குத் துணை செய்யும் சூர் மகள் என்று நினைத்தானோ என்னவோ? மற்றொருத்தியை மணந்து விலகினான்.

கணவனைச் சாகக் கொடுத்து விட்டதால் தன் மணவாழ்வை இழந்த கண்ணகி, இனி இன்புறவும் அன்பு ஊறவும் வழியில்லை என்று ஒரு முலை குறைத்துத் ‘திருமாபத்தினி’ ஆனாள். கணவனை மிரளக் கொடுத்துவிட்டதால் தன் மணவாழ்வை இழந்த புனிதவதியோ, எலும்பும் தோலுமாக இளைத்துப் ‘பேய் உருவம்’ கொண்டு காரைக்கால் அம்மை ஆனாள்.

புனிதவதியின் கணவன் மிரண்டு வெளியேறிய காலத்திலெல்லாம் அவளிடம் வந்து இறங்காதிருந்த இறைவன், இப்போது வந்து இறங்கி, ‘என்ன வேண்டும்?’ என்றான். ‘இறவாத இன்ப அன்பு வேண்டும். இனிப் பிறக்காமல் இருக்க வேண்டும்; ஒருவேளை பிறந்தால், உன்னை மறக்காமல் இருக்க வேண்டும்; உன் தூக்கிய திருவடியின் நிழலில் எப்போதும் நான் இருக்க வேண்டும்’ என்று வேண்டினாள் காரைக்கால் அம்மை.

‘இரு’ என்று அவளை ஆலங்காட்டில், ஆடிய பாதத்தின் நிழலில் அமர வைத்துப் போனான் இறைவன்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது,

வேண்டாமை வேண்ட வரும். (குறள் 362)

வேண்டிக்கொள்வது நம் வழக்கம். உலகியல் வாழ்வில் துன்பம் தவிர்ப்பதற்காக ‘மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்; நோய்அற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்’ ‘நசைஅறு மனம் வேண்டும்; நித்தம் நவம்எனச் சுடர்தரும் உயிர் வேண்டும்’ என்றெல்லாம் பலபட வேண்டிக்கொள்வோம். எதை வேண்டிக்கொண்டாலும், பிறப்பு என்று ஒன்று இருக்கிறவரையில் துன்பம் தீருமா?

மூக்கு என்று ஒன்று இருக்கிறவரையில் சளிமட்டும் இல்லாமல் போகுமா? எனவே வேண்டிக்கொள்ள விரும்புகிறவர்கள், இனிப் பிறக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்க. அது எப்படி நடக்கும் என்றால், ஆசையை, பற்றை, மறுத்தால் நடக்கும்; வேண்டும் என்று தவிக்காமல் வேண்டாம் என்று தவிர்த்தால் பிறக்காமல் இருக்கலாம் என்கிறது குறள். உடன்படுகிறது மணிமேகலை:

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்;

பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்;

பற்றின் வருவது முன்னது; பின்னது

அற்றோர் உறுவது! அறிக! ...

(மணிமேகலை, 2:64-67)

பிறந்தவர்கள் எல்லோரும் துன்பத்தில் திளைக்கிறார்கள்; பிறக்காதவர்கள் எல்லோரும் இன்பத்தில் திளைக்கிறார்கள்; வேண்டும் வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் பிறக்கிறார்கள். வேண்டாம் வேண்டாம் என்று விலகிக்கொண்டவர்கள் பிழைக்கிறார்கள். அறிக.

புத்தர் காலத்தில் வாழ்ந்தவள் மெலிந்த (கிசா) கோதமி. மணமாகியும் பிள்ளையில்லாமல் வாழ்ந்தவளை ஊரார் பழிக்கிறார்கள். ஒருவழியாகப் பிள்ளை பிறக்கிறது. மகிழ்கிறாள். ஓடும் பருவத்துக்கு வரும்போது பிள்ளை செத்துப் போகிறது. நாதியற்றுப் போனோம், ஊரார் மீண்டும் பழிப்பார்கள், என்று அஞ்சிய மெலிந்த கோதமி பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போய்ப் பலரிடமும் மருந்து கேட்கிறாள்.

‘மருந்தால் இனி என்ன பயன்? போ போ!’ என்று துரத்துகிறார்கள். இவள் புத்தி கலங்கிப் போனாள் என்று பரிவுகொண்ட ஒருவர் அவளைப் புத்தரிடம் போகச் சொல்கிறார். புத்தரிடம் வரும் மெலிந்த கோதமி பிள்ளைக்கு உயிரூட்ட மருந்து கேட்கிறாள். ‘சாவே நிகழாத வீட்டில் கொஞ்சம் கடுகு வாங்கி வா! அதுதான் மருந்து!’ என்று அனுப்புகிறார் புத்தர். போகிறாள்.

தேடுகிறாள். சாவு நிகழாத வீடு என்று எதுவுமே இல்லை என்று உணர்கிறாள். பிள்ளையின் பிணத்தைப் போட்டுவிட்டுப் புத்தரிடம் வந்து பணிகிறாள். புத்தர் சொல்கிறார்: முன்னறிவிப்பு இல்லாமல் ஊரை வாரிச் செல்லும் வெள்ளம்போலச் சாவு அனைவரையும் வாரிச் செல்லும். பிழைப்பாரே கிடையாது.

பின்தொடரும் நிழல் இறப்பு

அகலமாகப் பார்க்கும்போது, மெய் உணர்ந்து வேண்டுகிறவர்கள் எல்லோரும் பிறவாமையை வேண்டுகிறார்களே தவிர, யாரும் இறவாமையை வேண்டியதாகத் தெரியவில்லை. ஏனென்றால் பிறப்பின் பின்தொடரும் நிழல் இறப்பு.

பிறந்தன இறக்கும்;

இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும்;

மறைந்தன தோன்றும்...

(பட்டினத்தார், கோயில் திருஅகவல், 6-10)

இப்படியிருக்க, சித்தர் வகையறா மட்டும் பிறவாமை கேட்காமல் இறவாமை கேட்கிறார்களே? சாகாக் கல்வியே கல்வி என்கிறார்களே? மரணமிலாப் பெருவாழ்வு என்கிறார்களே? ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேன் என்கிறார்களே? அதென்ன? மரணம் இல்லாமல் இருந்துவிட முடியுமா? மரணமிலாமை பேசியவர்கள் மரணத்தை வென்று இப்போதும் வாழ்கிறார்களா? திருமூலரும் வள்ளலாரும் இருக்கிறார்களா? என்றால், மரணமிலாமை என்பது சாவச்சத்தை வெல்வதுதான்.

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவது இல்லை; நமனும்அங்கு இல்லை;

இடும்பையும் இல்லை;

இராப்பகல் இல்லை;

படும்பயன் இல்லை; பற்றுவிட் டோர்க்கே.

(திருமந்திரம் 1624)

தனக்குள் கண்டுகொண்டு, தனக்குள் ஒடுங்கித் தனக்குள்ளே நிலை பெற்றுவிட்ட ஒருவனது உள்ளம் இனி நடுங்குமா? அவனுக்கு எமன் உண்டா? கண்ணாடிப் பெட்டகத்துக்குள் நடுங்காமல் எரிகின்ற விளக்குபோல அவன். அவனது வெளி தனி வெளி. அதில் அவன் உண்டே தவிரப் பிற இல்லை. துன்பம் இல்லை; இரவில்லை; பகல் இல்லை; அவன் அடையப் போகிற பயனும் எதுவும் இல்லை. இதென்ன அநியாயம்? பயன் ஏதும் இல்லாமல் ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்றால், ஐயன்மீர், பற்றை விட்டுவிட்டவனுக்கு, படப்போகிற பயன் எதுவானால்தான் என்ன? ‘பால்துளி பெய்தால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன?’

விட்டுவைக்காத சாவு

மகன் செத்துப்போனதால் ஏழு நாள் உண்ணாமல் இருந்த ஒருவனுக்குப் புத்தர் உரைத்தவை ‘சல்ல சுத்தம்’ (அம்புச் சூத்திரம் / Salla Sutta) என்ற பெயரில் வகுக்கப்பட்டிருக்கின்றன:

பழுத்த பழங்கள் விழத்தான் செய்யும்; பிறந்தவர் அனைவரும் இறக்கவே செய்வர்; சிறியது பெரியது, சுட்டது சுடாதது, எத்தகையதாயினும் மண்பாண்டம் எல்லாம் என்றேனும் ஒரு நாள் உடையவே செய்யும். இளையவர் முதியவர், அறிவினர் மடையர், பணக்காரர் ஏழையர், எவரையும் சாவு விட்டு வைப்பதில்லை.

மகன் சாவதைத் தந்தை தடுக்க முடியாது; உற்றவன் சாவதைச் சுற்றத்தார் தடுக்க முடியாது. ஆட்டைப் பலிக்கு இழுத்துச் செல்வதைப்போலச் சாவு பிறந்தவர்களை இழுத்துச் செல்லும். உலகத்தின் தன்மை இது என்று அறிந்தவர்கள் அஞ்ச மாட்டார்கள். அம்பு குத்தியிருப்பதால்தானே வலிக்கிறது? அம்பைப் பிடுங்கிப் போடு. அமைதியாய் இரு. (சுத்த நிபாதம், சல்ல சுத்தம்)

அருட்ஜோதி ஆனேன்என்று

அறையப்பா முரசு!

அருள்ஆட்சி பெற்றேன்என்று

அறையப்பா முரசு!

மருள்சார்பு தீர்ந்தேன்என்று

அறையப்பா முரசு!

மரணம்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு!

(திருவருட்பா, 6, பிரபஞ்ச வெற்றி)

-என்று வள்ளலார் கொண்டாடியது இந்த அடிப்படையில் ஆகலாம். மருள் தீர்ந்தது; அருள் சேர்ந்தது; மரணம் சோர்ந்தது.

புத்தர் தம்ம்பதத்தில் சொல்கிறார்.

அமுத பதத்தை (மரணம் இல்லாமையை) அறியாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதிலும், அதனை அறிந்து ஒரு நாள் வாழ்வதே உயர்வுடையது.

(ஞான அமுதம் பகிர்வோம்)
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x