Published : 17 Apr 2019 03:08 PM
Last Updated : 17 Apr 2019 03:08 PM
தென்னாடுடைய சிவன், மனிதர்களுக்கு மட்டுமா ஆபத்பாந்தவன். மனிதர்களை மட்டும் உய்வித்துக்கொண்டிருகிறானா இறைவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன் அவன். நாரை, பன்றி, கருங்குருவி எனப் பல உயிர்களுக்கும் அருளினார் சிவபெருமான். இப்படி உயிர்கள் அனைத்தையும் அருளி அரவணைத்த ஸ்தலம் மதுரையம்பதி என்கிறது புராணம்.
குடும்பத்துக்குத் தலைவன் என்று ஆண்மகன் இருந்தாலும், பெண்ணின் ஆளுமைக்கு உட்பட்ட இல்லமே சிறந்து விளங்கும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், சிவனார் தன்னை தாழ்த்தி, அம்பிகையை உயர்த்தி, உமையவளை மலையத்துவஜ மன்னனுக்கு மகளாக, மீனாட்சியாகப் பிறக்கச் செய்து, அவளை மணம் புரிவதற்காக மதுரைக்கு வந்தார். அப்போது நடந்ததே மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணத்தைத் தரிசிக்க, திருக்கயிலாயத்தில் இருந்தும் இந்திரலோகத்தில் இருந்தும் எல்லோரும் இங்கே மதுரைக்கு வருகிறார்கள் என்கிறது புராணம்.
சித்திரைத் திருவிழா என்பது இன்றைக்கு உலகப் பிரசித்தியாகிவிட்டது. இன்றைக்கு இந்த வைபவம் சித்திரையில்தான் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த விழா, ஒருகாலத்தில் மாசி மாதத்தில் நடைபெற்றுள்ளதாக சரித்திரம் தெரிவிக்கிறது. பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், திருவீதியுலா, திக்விஜயம், தேரோட்டம் என அனைத்துமே மாசி மாதத்தில்தான் நடந்திருக்கிறது. எனவேதான் இங்கே வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி என தெருப்பெயர்களில் மாசி இணைந்திருக்கிறது என்கிறாகள் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஒருமுறை, ‘என்ன... தேரோட்டத்துக்கு கூட்டத்தையே காணோம். தேர்க்கூட்டம், திருவிழாக்கூட்டம் என்பார்கள். ஆனால், தேர் இழுக்கக்கூட ஆட்கள் குறைவாக இருக்கிறார்களே!’ என்று வேதனையுடன் கேட்டாராம் திருமலை நாயக்க மன்னர்.
தை மாதமும் மாசி மாதமும் அறுவடையெல்லாம் முடிந்து, விளைந்ததை விற்பனை செய்யும் காலம். எனவே, விற்று முடித்து காசாக்கிக்கொண்டு வரும் முனைப்பில் மக்கள் இருப்பதால், பலரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று மந்திரிகள் தெரிவித்தார்கள். மக்களும் இதையே சொல்லி புலம்பினார்கள். அந்தணர்களும் இதை உறுதி செய்தார்கள். அதையடுத்து, ‘மாசியில் நடைபெறும் இந்த விழாவானது, அடுத்த வருடத்தில் இருந்து சித்திரையில் நடைபெறட்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார் திருமலை நாயக்கர்.
அதுமட்டுமா? சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் வகையில், மீனாட்சியம்மையின் திருக்கல்யாண வைபவத்தையும் அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்தையும் ஒன்றாக்கி, ஒரே விழாவாக, சித்திரைப் பெரு விழாவாக நடத்தினாராம் திருமலை நாயக்கர்.
முக்கியமாக, நெருங்கிய, பெண் கொடுத்து பெண் எடுத்த, ஒன்று விட்ட உறவுக்காரர்களைச் சந்திப்பதும், ‘எங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள்’ என்பதை அறிவிக்கவுமான கூட்டமாக, ஒரு நிகழ்வாக, இந்த சித்திரைத் திருவிழாவை மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த உறவுகளும் தோழமைகளும்கூட, அழகருக்கு முன்னே, மீனாட்சியம்மையின் திருவுருவத்துக்கு முன்பாக, ‘இனி ஒருபோதும் பிரியமாட்டோம்’ என்று சத்தியம் செய்து, அணைத்து, கைகுலுக்கி, தோள் உரசிக் கொள்கிற நெகிழ்வான நிகழ்வுகளும் நிறையவே நடந்திருக்கின்றன.
சித்திரைத் திருவிழா தருணத்தில், மதுரை மண்ணில் நம் பாதம் படுவதே மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT