Published : 11 Apr 2019 09:47 AM
Last Updated : 11 Apr 2019 09:47 AM
மங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019-ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.
விகாரி வருடத்திய பலன் வெண்பா
“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்”
என்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடலின்படி இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும். திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு. நாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.
இந்த வருடத்தின் ராஜாவாக, அர்க்காதிபதியாக, மேகாதிபதியாக, சேனாதிபதியாகவும் சனிபகவான் வருவதால் உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். மதக்கலவரங்கள் ஏற்படும். இளைஞர்கள், மாணவர்கள் மொழி, இன அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவர்.
ராஜாவாக சனி வருவதால் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை அரசியல் குழப்பங்கள், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள், மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி உண்டாகும். தங்கத்துக்குரிய கிரகம் குரு, சனியுடன் சேர்ந்திருப்பதால் தங்கக்கடத்தல் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி விலை உயரும். பங்குச் சந்தையும் நிலையில்லாமல் இருக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல், இயற்கை உணவு, மருந்து ஆகிய துறைகளில் பங்குகளின் விலை உயரும்.
செல்லப் பறவைகளை வினோத நோய் தாக்கும். மேகாதிபதியாக சனி வருவதால் நீல நிற மேகங்கள் உருவாகும். இரவு, விடியற்காலைப் பொழுதில் மழைப்பொழிவு அதிகமாகும். மலைப்பகுதிகளில் மழை, காற்று கூடுதலாக இருக்கும். புன்செய் பயிர்கள் தழைக்கும். எள், உளுந்து அதிகம் விளையும். சேனாதிபதியாகவும் சனி பகவான் வருவதால் எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி தரப்படும். ராணுவம் நவீனமயமாகும். தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ராசிகள் இணைப்பை க்ளிக் செய்து அந்தந்த ராசிக்கான புத்தாண்டுப் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT