Published : 04 Apr 2019 11:05 AM
Last Updated : 04 Apr 2019 11:05 AM
சிறைக்குள்ளே நீ ஏன்
தங்கியுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது?
பயத்தில் முடங்காது
நீ வெளிச் செல்!
இருளே உனக்கு மெழுகுவர்த்தி!
- ஜலாலுதீன் ரூமி
பெரும்பாலான சூபி ஞானிகளைப் போன்று ஸமனுனுக்கும் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு இருந்தது. அன்பான மனைவி, பாசமான குழந்தை என அவரது தனிப்பட்ட வாழ்வு இன்பத்தின் ஊற்றாக இருந்தது. உலகின் ஒட்டுமொத்த நேசத்தையும் தன்னுடைய மூன்று வயதுக் குழந்தையிடம் அவர் பொழிந்தார். வாழ்வைத் தன்னளவு யாரும் காதலித்தது இல்லை என்ற கர்வம் ஸமனுனுக்கு எப்போதும் உண்டு. ஒரு நாள் தன் மகள் அருகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கனவு கண்டார்.
அந்தக் கனவில் இறைவனை நேசிப்பவர்களின் பட்டியலிலும் இறைவனால் நேசிக்கப் படுவோரின் பட்டியலிலும் அவர் இல்லை என்று ஒரு முதியவர் சொன்னார். இதயத்தின் வேதனையைத் தாங்க முடியாமல் அழுதபடி, தான் விடுபட்டுப் போனதற்கு என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், ' இறைவனை நேசிப்பவர்களின் நேசம் ஒருபோதும் தனிப்பட்ட ஒருவரின் மீது குவிந்து இருக்காது. அப்படிப்பட்ட ஒருவரின் மீது இறைவனும் ஒருபோதும் நேசம் கொள்வதில்லை' என்றுச் சொன்னபடி மறைந்து சென்றார்.
கனவு கலைந்து திடுக்கிட்டு ஸமனுன் விழித்தார். யார் மீது நேசத்தைப் பொழிந்து வளர்த்தாரோ, அந்தப் பாசத்துக்குரிய மகள் அங்கு மூச்சற்றுக் கிடந்தாள். மகளின் இழப்பு அவர் மீது பேரிடியாக இறங்கியது. வாழ்வே முடிந்தது போன்று துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது கனவில் அந்த முதியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
சிறிது நேரம் அழுதவர், பின்பு தனது நேசத்தை, தனக்கு ஆறுதல் சொல்ல வந்த மக்களின் மீது திருப்பினார். அன்று முதல் நேசத்தை நேசிக்கத் தொடங்கியவர், கடவுளுக்கு அடுத்த படியாக, உலகில் உள்ள மனிதர்களை மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்த உலகையும் தனது வாழ்நாளின் இறுதிவரை நேசித்தார்.
வெடித்துச் சிதறிய விளக்குகள்
ஒருமுறை ஃபயித் நகர மக்கள் அவரை உரையாற்ற அழைத்திருந்தனர். இவரும் அங்குள்ள மசூதிக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார். ஏனோ, இறைக்காதலில் ததும்பி வழிந்த அவரது உரைக்கு அங்கு யாரும் செவி சாய்க்கவில்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த ஸமனுன், இறுதியில் தனது பொறுமையை இழந்தார். பின்பு அந்த மசூதியிலிருந்த விளக்குகளை நோக்கி, “மனிதர்கள் செவி சாய்க்காவிட்டால் என்ன, நீங்கள் கேளுங்கள்” என்று சொல்லி, நேசம் குறித்தான தனது உரையைத் தொடர்ந்தார்.
அவ்வளவு தான், காதலில் உருகிய அங்கிருந்த விளக்குகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. குழுமியிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள். ஸமனுன் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். பற்றற்ற நேசத்தின் மகிமையை உணர்ந்த மக்கள், அந்த மாலையில் நேசத்தின் அங்கமாய் மாறினர். ஸமனுன் உரையின் மகத்துவம் அங்கிருந்த மக்களின் கண்களில் வழிந்த கண்ணீரில் ஜொலித்தது.
தலையில் இறங்கிய பறவை
பின்பு ஒருநாள் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, வானில் பறந்த பறவை ஒன்று விரைவாகத் தரையிறங்கி, ஸமனுனின் தலையில் அமர்ந்தது. தலையில் அமர்ந்த பறவையை உணராமல், ஸமனுன் தொடர்ந்து உரையாற்றினார். அந்தப் பறவை சற்று இறங்கி, அவரது கையில் அமர்ந்தது. அதையும் உணரும் நிலையில் அவர் இல்லை. ஆன்மிக நிலையின் உச்சத்தில், இறைக்காதலில் தன்னை முற்றிலும் இழந்து உரையாற்றிக் கொண்டிருந்த ஸமனுனின் மார்பை அந்தப் பறவை கொத்தியது.
ஸமனுனோ எதையும் உணரும் தன்மையற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். ஸமனுனின் உரையால், அன்பின் போதை தலைக்கேறிய அந்தப் பறவை, இறுதியில் தரையிறங்கி, தன் அலகை அங்குள்ள கல்லில் வேகமாக மோதி மோதி, ரத்தம் சிந்தி இறந்து போனது. உரை முடிந்த பின் தன்னிலைக்குத் திரும்பிய பிறகே அந்தப் பறவையைக் கவனித்தார். ஏதும் பேசாமல், சற்று நேரம் ரத்த வெள்ளத்தில் மரித்துக் கிடந்த அந்தப் பறவையை வெறித்துப் பார்த்தவர், மீண்டும் இழப்பின் வலியைக் கடந்து அடுத்த உரைக்குச் சென்றுவிட்டார்.
புகார் அளித்த பெண்
நேசத்தைப் பற்றி வழியெங்கும் உரையாற்றிய ஸமனுன் மீது நேசம் கொள்ளாதவர்கள் யாருமே அந்த காலகட்டத்தில் இல்லை. அவரின் உரையால் மனம் கவரப்பட்ட ஓர் இளம்பெண், தன்னை மணம் முடித்துக் கொள்ளும் படி ஸமனுனிடம் கெஞ்சினார். ஸமனுன் அதை உறுதியாக மறுத்துவிட்டார். பின்பு அந்தப் பெண் ஜுனைதுல் பக்தாதியிடம் சென்று, ஸமனுனை தன்னை மணக்கச் செய்யும் படி கோரினார்.
ஜுனைதுலும் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால், சினங்கொண்ட அந்தப் பெண், மன்னரிடம் சென்று, தனது கண்ணியத்துக்கு ஸமனுன் இழுக்கு ஏற்படுத்தி, ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தார்.
கோபம் கொண்ட மன்னர், ஸமனுனை தனது அவைக்கு இழுத்து வரும்படி செய்தார். ”இந்தப் பெண்ணை நீர் நேசித்தது உண்மையா?” என்று மன்னர் அவரிடம் கேட்டார். சற்றும் யோசிக்காமல், மன்னரிடம் ”ஆமாம்” என்று ஸமனுன் சொன்னார். உடனடியாக இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுங்கள் என்று சொல்ல முயன்ற மன்னரின் உதடுகளும் நாக்கும் அசைய மறுத்தன. மன்னர் பரிதாபமாக ஸமனுனைப் பார்த்தார்.
வார்த்தைகள் மூலம் அன்றி பார்வையின் வழியே ஸமனுனின் நேசம் மன்னரை அடைந்தது. நேசத்தால் தழுவப்பட்ட மன்னரின் கண்களிலிருந்து கண்ணீரும் அன்பும் ஒருங்கே வழிந்தன.
நேசத்தின் வலிமையை உணர்ந்த மன்னர், அரியாசனத்திலிருந்து இறங்கிவந்து, அவரை ஆரத்தழுவி, ஏதும் பேசாமல், அரச மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
நேசம், அளவற்றது; எல்லையற்றது; முடிவற்றது. உயிரற்ற பொருளின் மீதும் உயிருள்ள மனிதரின் மீது நேசத்தைச் சுருக்குவது மனிதரின் இயல்பு. ஆனால், அந்தக் கட்டற்ற நேசத்தின் எல்லை முழுவதும் பரந்து வியாபித்தவர் அபுல் ஹசன் சம்னுன். ஸரீ அஸ்ஸகதியின் உற்ற தோழரான இவர், ஜூனைதுல் பக்தாதி வாழ்ந்த காலத்திலேயே மிகப்பெரும் சூபி ஞானியாகத் திகழ்ந்தவர்.
அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் மெய்ஞான காதலைக் குறிப்பவையாக இருந்தன. நேசம் குறித்த அவருடைய எழுத்துகள் வாசிப்பவரின் ஆன்மாவை நேசத்தில் மூழ்கச் செய்தன. இன்றும் மூழ்கச் செய்கின்றன.
(நேசம் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT