Published : 14 Feb 2019 10:28 AM
Last Updated : 14 Feb 2019 10:28 AM
இந்திரன் கலையாய் என்மருங்கு இருந்தான்;
அக்கினி உதரம்விட்டு அகலான்;
எமன்எனைக் கருதான், அரன்எனக் கருதி;
நிருதிவந்து என்னைஎன் செய்வான்?
அந்தமாம் வருணன் இருகண்விட்டு அகலான்;
அகத்துஉறு மக்களும் யானும்
அனிலம் அதுஆகும் அமுதினைக் கொள்வோம்;
யார்எனை உலகினில் ஒப்பார்?
-என்று காளமேகப் புலவன் எழுதியதாகத் தனிப் பாட்டொன்று உலவுகிறது. ‘என்ன புலவரே! எப்படி இருக்கிறீர்கள்? நலந்தானே?’ என்று காளமேகப் புலவனைத் திருமலைராயன் என்ற சிற்றரசன் நலம் விசாரித்திருப்பான் போலிருக்கிறது. ‘ஆகா, தேவர்கள் எல்லோரும் இணைபிரியாது என்னோடு இருந்து என்னை வாழ்வித்துக்கொண்டிருக்கையில், எனக்கென்ன குறை? உலகத்தில் நிகர் சொல்ல யாரும் இல்லாத அளவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று காளமேகப் புலவன் விடை சொல்லியிருக்கிறான்.
‘அதெப்படித் தேவர்கள் உங்களோடு இணை பிரியாது இருக்க முடியும்?’ என்றபோது, ‘ஆயிரம் கண்கள் உடைய இந்திரன் ஆடையாகி என்னோடு இருக்கிறான்; அவனைப் போலவே என்னுடைய ஆடைக்கும் ஆயிரம் கண்கள். அக்கினியாகிய தீ என்னைவிட்டுப் போவதே இல்லை; நிரந்தரமாக என் வயிற்றில் குடிகொண்டு, பசித் தீயாக என் வயிற்றில் எரிந்துகொண்டே இருக்கிறான்.
செத்துவிடலாம் என்று பார்த்தால் எமன் என்னைத் தூக்குவதற்குப் பதிலாகக் கும்பிட்டுக்கொண்டே நிற்கிறான்; அட இழவெடுத்தவனே, கடமையைச் செய்யாமல் கும்பிட்டு நிற்கிறாயே என்றால், பிச்சைக்காரக் கோலத்தில் நான் பிச்சாண்டிச் சிவன்போலவே இருக்கிறேனாம்; அதனால் என்னைத் தூக்க மாட்டானாம்.
நிருதி என்பவனைப் பற்றி உங்களுக்குத் தெரியும்; பிணத்தை வாகனமாகக் கொண்டவன்; அதுவரையில் அவன் வைத்திருந்த வாகனப் பிணம் பழுதுபட்டுவிட்டது போலிருக்கிறது; ஆகவே, நான் செத்தால், என் பிணத்தை வாகனமாக்கிக் கொண்டுவிடலாம் என்று திட்டம் போட்டு, என் பின்னாலேயே சுற்றி திரிகிறான்; அவன் எண்ணம் நிறைவேறப்போவதில்லை; ஏனென்றால், எமன்தான் என்னைப் பிணமாக்கப் போவதே இல்லையே? இந்த வருணன் இருக்கிறானே, அவன் என் கண்களுக்குள்ளேயே குடியேறிவிட்டான்; கண்ணீராக எப்போதும் கொட்டிக்கொண்டே இருக்கிறான்.
பிறகு இந்தக் காற்று; அது எப்போதும் எங்கள்கூடவே இருப்பதால், நானும் என் வீட்டில் உள்ளவர்களும், காற்றையே அமுதமாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறோம். இப்போது சொல்லுங்கள்: இத்தனை தேவர்கள் கூடவே இருக்கும்போது என்ன குறை எனக்கு?
அமுதத்தால் ஆனவளோ
காளமேகப் புலவன் தன் வறுமை நிலையை அங்கதமாகச் சொன்னாலும் அவன் கடைசியாகச் சொன்ன செய்தியில் சாரம் இருக்கிறது: காற்றைக் குடித்தே வாழ்கிறோம்.
உறுதோறும் உயிர்தளிர்ப்பத்
தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
(குறள் 1106)
-என்று ஒரு வள்ளுவம். இவளைத் தழுவும்போதெல்லாம் என் உயிர் தளிர்க்கிறது; என்னைத் தழுவித் தழுவி என் உயிர் வளர்க்கும் இவள் என்ன, அமுதத்தால் செய்யப்பட்டவளா?
இதில் பயின்று வரும் ‘இவள்’ என்னும் சொல்லைக் ‘காற்று’ என்னும் சொல்லால் பதிலீடு செய்தாலும் பொருள் பொருந்தும். காற்று அமுதம்.
காற்றும் உயிரும் காதலர்கள். ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு, ஒன்றொடு ஒன்று கலந்து வாழ்கின்றன. காற்றே உயிரை வளர்க்கிறது; உயிரே காற்றின் இருப்புக்குப் பொருள் கற்பிக்கிறது. காற்று இருப்பதால் உயிரும் உயிர் இருப்பதால் காற்றும் இருக்கின்றன. காற்றும் உயிரும் எங்கே சந்தித்துக்கொள்கின்றன, எவ்வாறு உரையாடிக்கொள்கின்றன, எப்படிக் கலக்கின்றன?
காலோடு உயிரும் கலக்கும் வகைசொல்லில்,
கால்அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால்அது ஐஞ்ஞூற்று ஒருபத்து மூன்றையும்
கால்அது வேண்டிக் கொண்டஇவ் வாறே.
(திருமந்திரம், 694)
காற்று உயிரோடு கலக்கும் வகை சொல்ல வேண்டுமானால், காற்று கொடிபோல உடல் எங்கும் ஓடுகிற நாடிகளின் வழியாகக் கலக்கிறது. நாடிகள் எத்தனை என்றால் ஐந்நூறும் பத்தும் மூன்றும்.
உயிர் வளர்க்கும் நாடிகள்
காற்றால் ஊட்டப்படும் ஆற்றலை உடல் முழுக்கக் கடத்தி உயிர் வளர்ப்பவை நாடிகள். உயிரை நாடிச் சென்று கலப்பதால் நாடிகள் எனப்பட்ட அவை, காற்றின் கைகளாக இருந்து, உயிர் தளிர்க்குமாறு உடம்பெல்லாம் விரல் ஓட்டி, உயிரைத் தழுவுகின்றன.
தந்திர, ஓக நூல்களின் கணக்குப்படி, நாடிகளின் எண்ணிக்கை எழுபத்து இரண்டாயிரம். நாடிகள் எழுத்திரண்டாயிரம் என்பதற்குத் திருமந்திரத்தில் குறிப்பில்லை.
எழுபத்துஈ ராயிரம் நாடி, அவற்றுள்
முழுபத்து நாடி முதல்
(ஔவைக் குறள், 31)
-என்று ஔவைக் குறள் குறிக்கிறது. எழுபத்து இரண்டாயிரம் நாடிகள். அவற்றில் பத்து நாடிகள் முதன்மையானவை. இதைப் பாடிய ஔவை, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நட்புப் பூண்டிருந்து, ‘சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே’ என்று பாடி, அதியனோடு கள் குடித்து மகிழ்ந்திருந்த சங்ககாலத்து ஔவை அல்லள்; ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை சொன்ன ஔவையும் அல்லள்; அதற்கும் பின்னால் சித்தர் நெறியில் நின்று ஓகக் குறள் எழுதியவள். விநாயகரை முன்னிட்டும் ஓகத்தை உள்ளிட்டும் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் ஓகக் குறள் எழுதிய ஔவையும் ஒருவர்தானா என்று தெரியவில்லை.
நாடி என்பது எது? நாடியை நரம்பு என்பார் உளர். நாடி என்பது நரம்புபோல எனலாமே ஒழிய, நரம்பு இல்லை. ‘நாடி நரம்பெல்லாம் ஊறிப் போயிருக்கிறது’ என்று சொல்லும் வழக்கிலேயே நாடி தனி, நரம்பு தனி என்று இரண்டும் பிரிந்துவிடவில்லையா? நாடி என்பது நரம்பின் ஊடாக ஓடுகிற துடிப்பு எனலாம்.
காலொடு கையின் நடுகிடைத் தாமரை
நூல்போலும் நாடி, நுழைந்து.
(ஔவைக் குறள், 34)
தாமரைத் தண்டின் ஊடாக ஓடுகிற நூல்போல, நாடி கால் கை நரம்புகளின் ஊடாக ஓடும். வேறுபாடு என்னவென்றால், தாமரைத் தண்டின் ஊடாக ஓடுகிற நூலை வேறாகப் பிரித்தெடுத்துத் திரித்து இழையாக்க முடியும்; நாடியை நரம்பிலிருந்து பிரித்து உணர முடியுமே தவிரப் பிரித்தெடுத்துக் காட்சிப்படுத்த முடியாது. நாடிக்குப் பூத இருப்பு (physical existence) கிடையாது; நாடியின் இருப்பு அருவ இருப்பு (formless existence). அதற்காக நாடி பொய் என வேண்டாம்.
மெய்யெல்லாம் ஆகி, நரம்பொடு எலும்புஇசைந்து,
பொய்இல்லை நாடிப் புணர்வு.
(ஔவைக் குறள், 36)
நரம்போடும் எலும்போடும் இசைந்து, உடம்பெல்லாம் பரவிச் செல்கிற நாடியைப் பொய் என வேண்டாம்; மெய்.
நாடிகள் ஊடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.
(ஔவைக் குறள், 38)
நாடிகளின் ஊடாகப் பரவுகிறது நலம் தரும் சுடர் ஒன்று; அது உங்கள் விடுதலையின் வித்து; உயிர் வீச்சின் அடையாளம்.
நாடியின் நடை கோழி நடையா, குயில் நடையா, அன்ன நடையா, ஆமை நடையா, அட்டையும் பாம்பும்போல ஊர்கின்ற வகையா, தவளைக் குதிப்பா என்று கணக்குப் பார்த்தால் உயிரின் வீச்சு புரிந்துபோகும்.
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதஆ கமங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.
(திருமந்திரம் 2317)
இறைவனின் திருக்கூத்தைக் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களே! அதற்காக வேத ஆகமங்களைப் பாடியும், உடுக்கடித்து ஆடியும் தவித்துக் கிடக்கிறவர்களே! ஆட்டமும் பாட்டமும் கூத்தும் குதிப்பும் நாடியில் அல்லவா நிகழ்கின்றன? நாடியை நாடுக.
(நாடி நாடுவோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT