Published : 20 Mar 2019 06:49 PM
Last Updated : 20 Mar 2019 06:49 PM
மாயையை விட்டு ஞானி விலகுகிறா னென்றில்லாமல், ஞானியை விட்டே மாயை விலகுகிறது என்ற இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லியிருக்கிறது. ‘பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபடணும்’ என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் ப்ரார்த்திக்கும் மகா மிருத்தியுஞ்சய மந்திரம் அது.
வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டுப் படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது.
அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உசரக்க ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும், பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால், அதுதான் விழமுடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி பாட்டுக்குப் படர்ந்து கொண்டே இருக்கும்.
அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் அந்தண்டை நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற கார்யத்தைக் கூடப் பண்ணுதில்லை!
இதே போலத்தான் – ஞானி ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும் தான் பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான்.
வெளியிலே கார்யம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல் தான் இருப்பான். ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற கார்யம் அவனுக்கில்லை. த்வைதிகள் தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோக்ஷத்திற்கு போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும் போதே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவன்.
அதுதான் விடுபட்ட நிலையான மோக்ஷம் என்பது. ‘விடுபட்ட’ என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் கார்யம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் ஸாக்ஷாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், ஸம்ஸார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஓடிப்போய்விடும்.
வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பது போல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனாலும், லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும். இதுதான் வெள்ளரிப்பழ முக்தி!
தேக முக்தி விதேக முக்தி
லோகத்தில் ஒருத்தன் இருக்கிற மாதிரித் தோன்றும் போதே ஞானம் வந்து மாயை விலகி, தனி மனஸின் வேலை அடங்கிப் போய் ஆத்மாநுபவத்திலிருந்து கொண்டிருப்பது தான் ஜீவன் முக்தி. லோக மாயை இவனிடமிருந்து அப்போது கத்தரித்துப் போய்விடுவதைத்தான் வெள்ளரிக்கொடி பழத்திலிருந்து கத்தரித்துக்கொண்டு ஓடுவதற்கு உவமித்தது. இப்படி லோக மாயை போனாலும் அந்த ஜீவன் முக்தனுக்கு சரீரம் இருக்கிறது.
அவனுக்கு சரீர ப்ரக்ஞை இல்லாவிட்டாலும் நாம் பார்ப்பதற்கு சரீரம் என்று ஒன்று தெரியத்தானே செய்கிறது? ப்ராரப்த கர்மா தீர்கிறவரை அதன் பலனாகப் பலபேர் அவனைப் பூஷிப்பது, தூஷிப்பது, வியாதி வக்கைப் படுவது, நல்லாரோக்யம் காண்பது முதலானவற்றுக்கு ஆஸ்பதமாக அந்த சரீரமிருக்கிறது. மனஸிலே அவன் இவற்றுடைய நல்ல – கெட்ட பாதிப்பு எதையும் அநுபவிக்காவிட்டாலும், கர்ம தர்மத்திற்காக அந்தச் சரீரமாவது அவற்றுக்கு இலக்காக ப்ராரப்தம் தீர்ந்து முடியும்வரை இருந்து கொண்டுதானிருக்கும்.
கொடியிலிருந்து பிரிந்த பின்னும் வெள்ளரிப் பழம். தன்னுடைய ரூபம் இருக்கிறபடியே இருப்பதுபோல லோகபந்தம் போன அப்புறமும் ஜீவன் முக்தன் ஒரு சரீரத்தோடு இருந்து கொண்டிருக்கிறான். பிற்பாடு ஒருநாள் – அவனுடைய ப்ராரப்தம் முழுசாகத் தீர்ந்து போகும் நாள் – வரும்போது அவனுடைய சரீரம் மரணமடைகிறது. அதுதான் விதேஹ முக்தி தேஹத்திலிருந்து கொண்டே அவன் மாயை விலகி ஆத்மாவை அநுபவித்து வந்தது ஜீவன் முக்தி.
அப்போது மனஸின் பந்தம் போனாற்போலவே இப்போது தேஹ பந்தமும் போய் மரணம் ஏற்படுவதால் இது வி-தேஹ முக்தி. ஞானியான அப்புறமும் அவனுக்கு இருந்த ப்ராரப்த கர்மா இப்போது அடியோடு இல்லாமல் வெடித்து விட்டது.
அகண்டகாரத்தில் மறைவு
ஜீவன்முக்தர்களான ஞானிகளில் சில பேர் – நம்முடைய ஆசார்யாள், மாணிக்கவாசகர் போன்றவர்கள் – ஜீவனம் முடிந்து, அதாவது தேஹத்திற்கான ஆயுள் முடிந்து மரணமடைந்து, விதேஹமுக்தர்களாகும்போது அந்த தேஹம் ரோகத்தினால் அழுகி, துர்கந்தமெடுத்து புழுத்து இழுத்துக் காலமானதாக இல்லை.
அவர்களுடைய தேஹம் ஜீர்ணமடைந்து சவமாக ஆவது என்றில்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும்போதே என்னவாச்சு எங்கே போச்சு என்றே தெரியாமல் அகண்டாகாரத்தில் அப்படியே மறைந்து விட்டதாக இருக்கிறது.
வெள்ளரிப்பழம் ஜீர்ணித்துப் போகாமல் நல்ல புஷ்டியுடனும், துர்கந்தமெடுக்காமல் ஸுகந்தமாகவும் இருந்துகொண்டே பட்டென்று வெடித்து, இல்லாமல் போய்விடுவது போல மேலே சொன்ன ஞானிகளின் சரீரத்திற்கும் ஏற்படுவதாகச் சொல்லலாம். வெள்ளரி விஷயத்தில் அது வெடிப்பதால் சத்தம் எழும்பும்.
இந்த மஹான்கள் விஷயத்தில் சத்தமாகச் சொல்லாமல், ஜ்யோதியோடு ஜ்யோதி கலந்தது என்று சொல்கிறார்கள். அதாவது ஒலிக்குப் பதில் ஒளியைச் சொல்கிறார்கள். அப்படி ஜ்யோதியாகத் தெரிவதும் ஒரு க்ஷணந்தான். உபசாரத்துக்காக அப்படித் தெரிவது. அப்புறம் எங்கேயும் பரவிய அரூப நிலையான ப்ரம்மத்தின் அகண்டாகாரந்தான்.
அவுட் வாணம் விடும்போது வெடிச்சத்தம், ஜ்யோதிப்ரகாசம் இரண்டும் இருக்கிறதென்றால், வெள்ளரி ‘அவுட்’ ஆகிறபோது வெடிச்சத்தம் மட்டும் இருக்கிறது; மஹான்கள் ‘அவுட்’ ஆகும் போது ஜ்யோதி ப்ரகாசம் மட்டும் இருக்கிறது!
(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT