Published : 31 Mar 2019 10:19 AM
Last Updated : 31 Mar 2019 10:19 AM
பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று (31.3.19) திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள். திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மனக்குறைகளும் கிலேசங்களும் காணாமல் போகும். மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.
விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT