Published : 20 Mar 2019 11:35 AM
Last Updated : 20 Mar 2019 11:35 AM
ஊடலும் கூடலும் இல்லாத வீடு இருக்கிறதா என்ன? ஆனானப்பட்ட, பெருமாளுக்கே இவையெல்லாம் நேர்ந்திருக்கும் போது, நாமெல்லாம் எம்மாத்திரம்?
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு அப்படியான ஊடல்கூடல் சரிதம் ஒன்றைச் சொல்லுகிறது புராணம். ஊடலுக்குப் பின் பெருமாளும் தாயாரும் மீண்டும் இணைந்தார்கள். அந்த நாள்... ஓர் பங்குனி உத்திரத் திருநாள் என்கிறது ஸ்தல புராணம்.
திருச்சி உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்கு ஒரேகுறை... அள்ளியெடுத்துக் கொஞ்ச ஒரு குழந்தை இல்லையே என்பதுதான். மக்கள் மீது பேரன்பும் கடவுளிடம் மாறா பக்தியும் கொண்டிருந்த அந்த மன்னனுக்கு கருணை காட்ட திருவுளம் கொண்டார் பெருமாள்.
ஒருநாள்... மகாலக்ஷ்மியே தாமரை மலர் ஒன்றில் அன்றலர்ந்த மலராக அவதரித்தாள். மன்னன், அந்தக் குழந்தையை வாரியணைத்துச் சீராட்டி வளர்த்தான். அப்படி மகாலக்ஷ்மி உதித்தது ஆயில்ய நட்சத்திர நாள் என்கிறது உறையூர் நாச்சியார் கோயில் ஸ்தல புராணம். இன்றைக்கும் உறையூரில் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்கிறது நாச்சியார் கோயில்.
இதையொட்டி ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து பெருமாள், உறையூருக்கு வந்து எழுந்தருளி சேவை சாதிப்பார். உறையூர் நாச்சியார்கோயிலில், நாச்சியாருடன் சேர்ந்து ஸ்ரீரங்கநாத பெருமாளும் சேவை சாதிப்பார். அப்போது, சிம்மாசனத்தில் கம்பீரமாகக் காட்சி தருவாள் நாச்சியார். இதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அவர்களின் அழகில் சொக்கிப்போவார்கள்.
இவையெல்லாம் பக்தர்களுக்கும் நாச்சியாருக்கும் வேண்டுமானால் மகிழ்வைத் தரலாம். ஆனால், ஸ்ரீரங்கத்தில் கணவனே கண்கண்ட தெய்வம் என்றிருக்கும் ரங்கநாயகிக்கு எப்படியிருக்கும்?
ரங்கநாதர் உறையூர் செல்லும் விவரம் அறிந்த ரங்கநாயகி, வெகுண்டாள். ஆவேசமானாள். ஆத்திரமும் கோபமும் கொண்டாள். ரங்கநாதரிடம் பேசாமல் புறக்கணித்தாள்.
இந்த செல்லமான ஊடல் எத்தனைநாளைக்கு நீடிக்கும்? ராமானுஜர் இவர்களை மீண்டும் இணைப்பதற்கான நாளொன்றைத் தேர்ந்தெடுத்தார். அது பங்குனி உத்திர நன்னாள் என்கின்றனர்.
அப்படியொரு பங்குனி உத்திர நாளில், ரங்கநாதரும் ரங்கநாயகியும் ஆலயத்தின் ஓரிடத்தில், சேர்ந்து காட்சி தருவார்கள்.
ராமானுஜர் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது போலவே நம்மாழ்வாரும் அந்தப் பெருமுயற்சியில் இறங்கினார். ரங்கநாயகித் தாயாரிடம் ஏதேதோ பாடல்களெல்லாம் பாடி, உதாரணங்களையெல்லாம் அடுக்கி விளக்கினார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர நாளன்று, பெருமாளும் தாயாரும் அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் இன்றைக்கும் தரிசனம் தருகின்றனர். இந்த மண்டபத்துக்கு, பங்குனி உத்திர மண்டபம் என்றே பெயர்.
இதோ... நாளைய தினம் 21.3.19 வியாழக்கிழமை பங்குனி உத்திர நன்னாள். இந்த நாளில், ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி உத்திர மண்டபத்தில், எழுந்தருளும் ரங்கநாதரையும் ரங்கநாயகித் தாயாரையும் கண்ணாரத் தரிசியுங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் பறந்தோடிவிடும். தம்பதி இடையே இருந்த சின்னச் சின்ன வேற்றுமைகளெல்லாம் நீங்கிவிடும். ஒற்றுமை பலப்படும். வீட்டில் நிம்மதியும் அமைதியும் குடிகொள்ளும். சந்தோஷமும் குதூகலமும் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT