Published : 19 Mar 2019 07:27 PM
Last Updated : 19 Mar 2019 07:27 PM
திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழா, வருடந்தோறும் களைகட்டும். அப்போது முக்கியமான நிகழ்ச்சியாக, வள்ளி திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும். கல்யாணம் தள்ளிப்போகும் ஆண்களும் பெண்களும் வந்து தரிசித்தால், விரைவில் கெட்டிமேளச் சத்தம் நிச்சயம் என்பது ஐதீகம்.
வருகிற 21.3.19 வியாழக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள். இதையொட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்செந்தூரில் அமர்க்களமாக நடந்து வருகிறது பங்குனி உத்திரப் பெருவிழா.
பங்குனி உத்திர நாளில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவள்ளிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் நடைபெறும் திருமண வைபவத்தைக் கண்ணாரத் தரிசிப்பது மகா புண்ணியம். கல்யாணத் தடைகள், செவ்வாய் தோஷம் முதலான விஷயங்கள் அனைத்தும் விலகிவிடும். விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
21ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 5 மணிக்கு திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற, முக்கியத்துவம் வாய்ந்த உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதன் பின்னர், வள்ளி தபசுக்குப் புறப்படும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.
இதையடுத்து மாலை 3.10 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். அதன் பின்னர், பந்தல் மண்டபத்தில் எழுந்தருளி, முருகப்பெருமானும் வள்ளிதேவியும் தோள்மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம் சிறப்புற நடைபெறும்.
இதன் பின்னர், இருவரும் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தேறும். இரவு, 108 மகாதேவர் சந்நிதியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க, திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறும்.
பங்குனி உத்திர நன்னாளில், செந்தூரில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசியுங்கள். இயலாதவர்கள், அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் திருக்கல்யாண விழாவைத் தரிசியுங்கள். உங்கள் வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ, சகோதர சகோதரிகளுக்கோ இருந்த கல்யாணத் தடை அகலும். விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். கருத்துவேற்றுமை கொண்ட தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி கூட இணைந்து வாழத் தொடங்குவார்கள் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT