Published : 28 Mar 2019 09:52 AM
Last Updated : 28 Mar 2019 09:52 AM
கவலைகள் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவரை வழிபடுங்கள். நம் கஷ்டங்களையெல்லாம் போக்கி அருள்வார் பைரவர்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவ வழிபாடு செய்யச் செய்ய, வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி.
சிவாலயங்களில், பைரவருக்கு சந்நிதி இருக்கும். பொதுவாகவே, சந்நிதி என்று இல்லாமல், பைரவரின் திருவிக்கிரகம் மட்டுமே இருக்கும். இந்தநாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் சென்று, பைரவரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
திருப்பட்டூர் பிரம்மா முதலான கோயில்களில், ராகுகாலத்தின் போது பைரவ வழிபாடு செய்யப்படுகிறது. பெரும்பாலான ஆலயங்களில் காலையும் மாலையும் வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இன்று தேய்பிறை அஷ்டமி (28.3.19). மாலையில் பைரவரை தரிசனம் செய்யுங்கள். எதிரிகளால் தொல்லை என்று கலங்குவோர், எந்தக் காரியம் செய்தாலும் தடையாக இருக்கிறதே எனப் புலம்புவோர், கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியவில்லையே என்று கண்ணீர் விடுவோர் மறக்காமல் பைரவரை தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள்.
மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் பக்தர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT