Last Updated : 03 Mar, 2019 01:11 PM

 

Published : 03 Mar 2019 01:11 PM
Last Updated : 03 Mar 2019 01:11 PM

மகா சிவராத்திரி ஸ்பெஷல்: ’நமசிவாயம்’ சொன்னாலே மகா புண்ணியம்

மகா சிவராத்திரி நாளில், ‘நமசிவாயம்’ என்று மனதுக்குள் உச்சரித்து வந்தாலே, மகா புண்ணியம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

மகா சிவராத்திரி நாளில் விரதம் மேற்கொள்பவர்கள், மகா சிவராத்திரியான 4.3.19 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஒருமுறை நீராடுங்கள். மிதமான உணவு முடித்து விட்டு கோயிலுக்குச் செல்லுங்கள்,

பணியில் உள்ளவர்கள் பணி முடிந்து வரத் தாமதமாகும் பட்சத்தில், வீட்டுக்கு வந்ததும் குளித்து விட்டு, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். அங்கே, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொள்ளுங்கள்.

சிவ ஸ்லோகம், சிவ ஸ்தோத்திரம், சிவ புராணம் என எதுவும் தெரியவில்லையே என வருந்தவேண்டாம்.

'சிவாய நம ஓம்’ என்று சொல்லமுடியும்தானே. இதை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டே இருங்கள். இதுவும் இயலாதவர்கள் ‘நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்’ என்று சொல்லிக்கொண்டே இருங்கள். மகா சிவராத்திரி நாளின் முழுமையான பலன்கள் கிடைப்பது உறுதி!

முடிந்தால், இன்னொரு விஷயமும் செய்யுங்கள்.

சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் உஷ்ணமாகிவிட்டதாக ஐதீகம். அவரின் வெப்பத்தைத் தணிக்குப் பொருட்டு, அன்றிரவு... அதாவது மகா சிவராத்திரியின் இரவு, சிவனாருக்குக் குளிரக்குளிர அபிஷேகங்கள், ஒவ்வொரு கால பூஜையிலும் நடைபெறுகின்றன.

பொதுவாகவே, திருமால் அலங்காரப்ரியன், சிவபெருமான் அபிஷேகப்ரியன் என்று சொல்வார்கள். எனவே, சிவனாருக்கு உரிய மகா சிவராத்திரி நாளில், சிவ திருமேனி உஷ்ணமடைந்திருக்கும் வேளையில், தேன், பால், தயிர், நெய் முதலான 16 வகையான திரவியங்களால் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கான பொருட்களை முடிந்த அளவு வழங்கி, சிவ தரிசனம் செய்யுங்கள்.

சிவராத்திரி என்ற பெயர் வருவதற்குக் காரணமே உமையவள்தான் என்கிறது புராணம்.

பிரளய காலத்தின் போது பிரம்மா உட்பட அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் சிவனாருக்கு அர்ச்சித்து பூஜித்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும். அப்படி அனுஷ்டிப்பவர்களுக்கு அனைத்து வரங்களையும் தந்து அருளுங்கள் என வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவபெருமானை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னை பராசக்தி வேண்டினாள். சிவனாரும் மகிழ்ந்து வரம் தந்தார். அந்த நாளே... மகா சிவராத்திரி. அதுவே மகா சிவராத்திரி பூஜை.

எனவே, மகா சிவராத்திரி நாளில், மகேஸ்வரி பூஜித்து வணங்கியது போலவே மகேஸ்வரனை பூஜிப்போம். தரிசிப்போம். பிரார்த்திப்போம். எல்லா வரங்களும் வளங்களும் பெற்று இனிதே வாழச் செய்வார் ஈசன்! கடன் தொல்லையில் இருந்து மீளலாம். இல்லறத்தில் அமைதியும் ஒற்றுமையும் நீடிக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x