Last Updated : 24 Mar, 2019 09:58 AM

 

Published : 24 Mar 2019 09:58 AM
Last Updated : 24 Mar 2019 09:58 AM

இன்று சங்கடஹர சதுர்த்தி; சங்கடம் தீர்க்கும் விநாயக தரிசனம்

இன்று 24.3.19 சங்கடஹர சதுர்த்தி. எனவே இந்தநாளில், மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்!

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம். முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், விநாயகப் பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.

அப்போது, பிள்ளையாரப்பனுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று 24.3.19 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தியில், மாலை 4.30 முதல் 6 மணி வரை விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெறும். இந்த 4.30 முதல் 6 மணி வரை என்பது, ஞாயிற்றுக்கிழமையைப் பொருத்தவரை, ராகுகால நேரம். எனவே, ஞாயிறன்று வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி, ரொம்பவே கூடுதல் பலன்களை வழங்கக் கூடியது என்பார்கள்.

ஆகவே, இன்றைய தினம், சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடுங்கள். அப்படியே, ராகுகால வேளையில் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x