Published : 14 Mar 2019 10:25 AM
Last Updated : 14 Mar 2019 10:25 AM
மரியாதைக்குரிய விருந்தாளி நீ,
இந்த உலகின் அற்ப வளத்தை
ஒரு யாசகனைப் போல
யாசித்துக் கொண்டிருக்காதே
- ஜலாலுதீன் ரூமி
கறுத்த நிறம், மெல்லிய தேகம், குள்ளமான உருவம், கிழிந்து தொங்கும் உடை போன்றவைதாம் கைருன் நஸ்ஸாஜ்ஜின் அடையாளங்கள். ஞானி என்பதற்கான புறத்தோற்ற அடையாளம் எதுவுமற்ற அவரைத்தான், சூபி உலகிலேயே மேன்மையானவர் என்று ஜுனைத்துல் பக்தாதி கூறினார்.
எளிமையின் சிகரம் அவர். பக்தியின் உருவம் அவர். உருவமற்ற ஞானத்தின் உருவம் அவர். வறுமை அவர் வாழ்வின் அங்கமாக இருந்தது. இறைவணக்கமே அவர் வாழ்வின் சுவாசமாக இருந்தது. சிறு வயது முதலே, ஏனென்று எதையும் கேள்வி கேட்காமல், வாழ்வில் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் இயல்பை வரமாகப் பெற்றிருந்தார்.
மக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. தனியாகப் பிரயாணம் செல்லும் துணிவு பெற்றவுடன் அவர் மக்காவுக்குப் பயணப்பட்டார். வசதியற்ற காரணத்தால், அவர் கடும் வெயில் கொளுத்தும் பாலைவனத்தினூடே நடந்தேசென்றார். மக்காவுக்குச் செல்லும் வழியிலிருந்த கூஃபா நகரில் ஓய்வுக்காக ஒதுங்கினார். ஏற்கெனவே கறுத்த நிறமுடைய அவர், பாலைவனப் பயணத்தில் மேலும் கறுத்து, ஓர் அடிமையைப் போல் தோற்றமளித்தார்.
ஆமாம், நான் அடிமை
கூஃபா நகரில் அவரைப் பார்த்த ஒரு செல்வந்தர், ‘நீஅடிமையா?’ என்று கேட்டார். இறைவனின் அடிமை நான் எனும் பொருளில், கைருன்னும், ‘ஆமாம்’ என்றார். ‘சரி. என்னுடன் வா, நான் உன்னை உன் எஜமானிடம் சேர்த்துவைக்கிறேன்’ என்றார், கண்களில் நீர் வழிய, கைருன் அவரைப் பார்த்து ‘வாழ்நாள் முழுவதும் என் எஜமானரிடம் என்னைச் சேர்ப்பித்து வைப்பவருக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என் வாழ்வில் ஒளியேற்றி வைத்து விட்டீர்கள்’ என்று சொல்லி, அவருடன் சென்றார்.
கைருனைத் தனது வீட்டுக்கு அவர் அழைத்துச் சென்றார். கைருன்னுக்கு ‘கைருன்’ என்று பெயரிட்ட அந்தச் செல்வந்தர், அவரைத் தனக்கு வேலையாள் ஆக்கினார். நெசவுத் தொழிலில் கொடிகட்டி பறந்த அந்தச் செல்வந்தர், கைருனை நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தினார். ஓராண்டு அல்ல, ஈராண்டல்ல. பல ஆண்டுகள் அவருக்கு அடிமையாக கைருன் வாழ்ந்தார்.
கைருனின் விசுவாசமும் இறைநம்பிக்கையும் அந்தச் செல்வந்தரின் மனத்தை மாற்றியது. கைருனைஅழைத்து, ‘நீங்கள் இனி இங்கு இருக்க வேண்டாம். சுதந்திரமாக இறைவனைத் தேடிச் செல்லுங்கள்’ என்று கூறினார். ‘நான் ஏதும் தவறு செய்துவிட்டேனா?’ என்று கைருன் அவரிடம் கேட்டார். அந்தச் செல்வந்தர் ஓவென அழத் தொடங்கிவிட்டார். ‘என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள்’ என்று அவர் அழுதபடியே கூறினார்.
கடமையை நிறைவேற்றிய கைருன்
கைருன்னுக்கு எதுவும் புரியவில்லை. வேறு வழியின்றி அந்த வீட்டை விட்டு வெளிவந்தார். எதுவும் யோசிக்காமல், மீண்டும் மக்காவை நோக்கி நடக்கத் தொடங்கினார். மக்காவில் உள்ளம் குளிர தனது ஹஜ் கடமையை கைருன் நிறைவேற்றினார். பின்பு அங்கிருந்து பாக்தாத்துக்கு வந்தார்.
பாக்தாத்தில், அந்தக் காலகட்டத்தின் மிகப் பெரும் சூபி ஞானியான ‘ஸர்ரி அஸ்ஸகதி’யைச் சந்திக்க நேரிட்டது. அவரது சொல்லாலும் செயலாலும் ஈர்க்கப்பட்ட கைருன், அவருக்குச் சீடரானார். கைருன்னின் ஆன்மிக ஞானம் அந்த ஞானியால் பட்டை தீட்டப்பட்டது. ஞான நிலையின் உச்சத்தை கைருன்அடைந்தார். ஸர்ரி அஸ்ஸகதியின் மறைவுக்குப் பின், அவர் தன்னை ஜுனைத்துல் பக்தாதியின் ஆன்மிகக் குழுவில் இணைத்துக்கொண்டார்.
பாக்தாத்தில் கைருன்னின் வாழ்க்கை, ஆன்ம விசாரணையில் கரைந்த ஒன்றாக இருந்தது. இறைவணக்கமும் ஆன்மிக விவாதங்களும் மட்டுமே அவர் வாழ்வானது. சில நேரத்தில் நெசவும் செய்வார். மாலை நேரம், நதிக் கரையோரத்தில் உலவுவார்.
ஒருமுறை, ஒரு மூதாட்டி கைருனிடம் மஸ்லின் துணி நெய்து தரக்கேட்டார். ‘நூல் வாங்க ஒரு திர்ஹம் கொடுத்தால், நான் நெய்து தருகிறேன்’ என்று அந்த மூதாட்டியிடம் கைருன் கூறினார். ‘நாளை வந்து பணம் தருகிறேன். ஒருவேளை நான் வரும்போது நீங்கள் இல்லையென்றால், பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்?’என்று அந்த மூதாட்டி கேட்டார். ‘பணத்தை இந்த நதியில் எறிந்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று அவரிடம் கைருன் சொன்னார்.
மீன்கள் கொடுத்தன
மறுநாள் அந்த மூதாட்டி வரும்போது, கைருன் வீட்டில் இல்லை. அந்த மூதாட்டியும் பணத்தை ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார். பின்பு மாலையில் அந்த நதிக்கரையில் கைருன் உலாவும்போது, மீன்கள் அந்த ஒரு திர்ஹம்மை எடுத்து வந்து கைருன்னிடம் கொடுத்தன. கைருன் நூல் வாங்கி, மஸ்லின் துணியை நெய்து அந்த மூதாட்டியிடம் கொடுத்தார். பணத்துக்கு என்ன செய்தீர்கள் என அந்த மூதாட்டி கேட்டார். பணத்தை இறைவன் கொடுத்தான் என மெல்லிய குரலில் கைருன் பதிலளித்தார்.
லௌகீகத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு அல்ல அவருடையது. வாழ்வின் அத்தனை கஷ்டங்களையும் கடந்தே அவர் வந்தார். எது நடந்தாலும், அது தன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் பாதையின் கூறு என்று நம்பிய அவர், 120 வயதுவரை இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார்.
(மெய்ஞ்ஞானம் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT