Last Updated : 14 Mar, 2019 10:15 AM

 

Published : 14 Mar 2019 10:15 AM
Last Updated : 14 Mar 2019 10:15 AM

காற்றில் கீதங்கள் 17: ராம நாமத்தின் சுவை!

உரைநடையிலும் கவி பாடுவதிலும் ஒருங்கே சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சதாசிவ பிரம்மேந்திரர். பிரம்ம சூத்திர விருத்தி, பிரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம விலாசம் போன்ற வடமொழி நூல்களை எழுதியிருக்கும் பிரம்மேந்திரர், இசைத் துறைக்கும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளை தன்னுடைய கொடையாக வழங்கியிருக்கிறார்.

சர்வம் பிரம்ம மயம், ப்ருஹி முகுந்தேஹி, மானச சஞ்சரரே போன்றவை இன்றைக்கும் கர்னாடக இசை உலகில் கோலோச்சும் கீர்த்தனைகள். இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் பக்தியை தோய்த்து தோய்த்து எழுதியிருக்கும் கீர்த்தனை `பிபரே ராமரஸம்’.

இந்தக் கீர்த்தனைக்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா ‘ஆஹிர் பைரவ்’ எனும் ராகத்தில் இசையமைத்துப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை பக்தி ரசத்துடன் பாடியிருக்கிறார் ராகுல் வெள்ளாள். இசையமைத்து, தயாரித்து வழங்கியிருப்பவர் குல்தீப் எம்.பை. குழந்தைகளுக்கு கர்னாடக இசையில் முறையாகப் பயிற்சி அளித்து அவர்களுக்கேற்ற அருமையான பாடல்களையும் பாடவைத்து அவர்களுக்கு உலக மேடைகளில் பாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர் குல்தீப் எம்.பை. மிதமான தாளத்துடன் இசை ஒருங்கிணைப்பை கணபதியும் அசாத்தியமான புல்லாங்குழல் இசையை விஷ்ணு விஜய்யும் வழங்கியிருக்கின்றனர்.

ராம நாமத்தின் சுவையை அதன் மகிமையை உலகம் முழுவதும் எல்லா உயிர்களையும் ரட்சிக்கும் அதன் பெருமையை ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படும் பாடலாக இதை கேட்பவர்கள் பக்தியில் சொட்டச் சொட்ட நனையும் அளவுக்கு எழுதியிருப்பார் சதாசிவ பிரம்மேந்திரர்.

அந்த உணர்வு முழுவதும் சிந்தாமல் சிதறாமல் இந்தப் பாடலில் வெளிப்படுத்தி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது  சிறுவன் ராகுலின் குரல். சமஸ்கிருத வார்த்தைகளை அட்சர சுத்தமாக உச்சரிப்பதிலும் ஸ்வரங்களின் அமைப்புகளுக்கேற்ற ஆடம்பரமில்லாத பிருகாக்களிலும் ராகுலின் சங்கீத ஞானம் கேட்பவரை வியக்கவைக்கும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x