Published : 28 Mar 2019 11:31 AM
Last Updated : 28 Mar 2019 11:31 AM
மார்ச் 18, 19, 20 தேதிகளில் சென்னை மாநிலக் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இயல், இசை, நாடகம் ஆகியவற்றோடு இரண்டறக் கலந்திருக்கும் தமிழையும் மரபார்ந்த கலை வடிவங்களின் சிறப்புகளையும் பல்வேறு அறிஞர்கள் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்த மூன்று நாள் விழாவில் இசைத் தமிழ் விழாவிலிருந்து சில துளிகள்…
மாங்காடு அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் பி.கோமதி, ‘பக்தி இலக்கியத்தில் பண்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் பொதிந்துள்ள இசை நுணுக்கங்களை அலசியதோடு சில பதிகங்களை இனிமையாகப் பாடினார். நட்டபாடை, இந்தளம் பண்ணில் காரைக்கால் அம்மையார் அமைத்திருக்கும் பதிகங்களில் வெளிப்படும் பக்தியின் மேன்மையையும் இறைவனின் பெருமையையும் விளக்கியது அவரது உரை.
எந்த இடத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடுகிறோம். பாடுபவர் யார், இந்தப் பாடலைப் பாடினால் கிடைக்கும் பயன் என்ன என்பதைப் பாட்டிலேயே குறிப்பிடுவதற்கு `முத்திரை’ என்று பெயர். இந்தப் பாணியைத் தொடங்கி வைத்தவரே காரைக்கால் அம்மையார்தான் என்பதைப் பதிகத்தின் பாடல்களின் வழியே மாணவர்களுக்குப் புரியவைத்தார் கோமதி.
காலம்தோறும் கரஹரப்ரியா
`தமிழிசையில் திரையிசை’ எனும் தலைப்பில் இராணி மேரிக் கல்லூரியின் பேராசிரியர் ஞா.கற்பகம், தன்னுடைய உரையில் தமிழிசையின் தோற்றம், பக்தி இலக்கியங்களின் மூலமாக அது அடைந்த வளர்ச்சி எனப் பல விஷயங்களையும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் எளிய மொழியில் விளக்கினார்.
‘குனித்த புருவமும்’ தேவாரப் பாடலைப் பாடிக்காட்டியவர் அது எப்படித் திரையிசையில் நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விளக்கினார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலான முத்தைத்தருபத்தித் திருநகை, ‘யாயும் யாயும்’ - குறுந்தொகை பாடல், பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, பாரதிதாசனின் `துன்பம் நேர்கையில்’ போன்ற பல பாடல்களும் திரையில் பயன்படுத்தப்பட்டு வெகு மக்கள் ரசனைக்கு சென்று சேர்ந்திருப்பதை தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார்.
கோடிப்பாலை எனும் முந்தைய வடிவத்தின் இந்தக்கால வடிவம் கரஹரப்ரியா ராகம். இந்த ராகம் திரையிசையில் பல்வேறு காலகட்டங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பி.யு. சின்னப்பா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை குறிப்பிட்ட பாடல்களைப் பாடிக்காட்டியே இசையமைப்பாளர்கள் கரஹரப்ரியா ராகத்தில் பயன்படுத்தியிருக்கும் நுட்பங்களை விளக்கினார் கற்பகம்.
திருவருட்பாவின் கருணை மழை
வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து சில பாடல்களை அரிவிதார்த்தின் சிந்து பைரவி இசைக் குழுவினர் எளிமையான இசையோடு வழங்கினர். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, நினைந்து நினைந்து, போன்ற பாடல்கள் மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் நெகிழ்த்தியது. அரிவிதார்த்தின் குரலுக்குப் பக்கபலமாக ரமேஷின் கீபோர்ட் இசையும் சுரேஷின் மிருதங்க இசையும் அமைந்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT