Published : 25 Sep 2014 01:21 PM
Last Updated : 25 Sep 2014 01:21 PM
ஆண்டவர் இயேசுவிடம் அவருடைய சீடரான பேதுரு ஒரு நாள் கேட்டார்: “பிதாவே, என் உடன்பிறப்புகளான என் சகோதர, சகோதரிகளுள் யாரெனும் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், எத்தனை முறை அவரை நான் மன்னிக்க வேண்டும்?”
இயேசு அதற்குப் பதிலாக ஓர் உவமைக் கதையைச் சொன்னார். அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் வரவு/செலவுக் கணக்குகளைப் பார்க்கக் கேட்டார். அவர்களும் அரசனின் ஆணைக்கு இணங்கிக் கணக்குகளைக் காண்பித்தனர்.
அப்போது அவரிடம் ஆயிரக் கணக்கில் கடன் வாங்கித் திருப்பித் தராமால் இருக்கும் ஒருவரைப் பற்றித் தெரியவந்தது. பணியாளர்கள் அவரை அரசனின் முன்பு கூட்டி வந்து நிறுத்தினர். ஆனால் அவனுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை.
அரசர், அவன் உடமைப் பொருள்கள் அனைத்தையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். கடன்தாரரான அந்த நபர் அரசனின் காலில் விழுந்து, “என்னைப் பொறுத்தருள வேண்டும். கூடிய விரைவில் எல்லாவற்றையும் திருப்பித் தந்து விடுகிறேன்” எனப் பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர் மேல் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அரசன் அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அரசனிடம் இருந்து விடுதலை அடைந்த அந்த நபர் வெளியே சென்றதும், அவனிடம் சிறு தொகையைக் கடனாகப் பெற்றிருந்த அவனது நண்பன் ஒருவரிடம், “என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தா” எனக் கூறி அவரைப் பலவந்தமாகப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
உடனே கடன் வாங்கியிருந்த நண்பர் இவரது காலில் விழுந்து, “என்னைப் பொறுத்தருள வேண்டும். கூடிய விரைவில் எல்லாவற்றையும் திருப்பித் தந்து விடுகிறேன்” எனப் பணிவுடன் வேண்டினார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
இந்தச் சம்பவம், அரசரின் காதுகளுக்குப் போனது. அவர் உடனே தன்னிடம் கடன் பெற்ற அந்த நபரை உடனே பிடித்துவர ஆணையிட்டார். “நீ என்னை வேண்டிக்கொண்டதால் உன் கடனை தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் நண்பருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும்தானே?” என்று கேட்டார்.
கோபம் கொண்ட அரசர், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைக் கூடத்தில் இருக்கும்படி ஆணையிட்டார்.
ஒருவன் தன்னுடைய சகோதர, சகோதரிகளின் பாவங்களை மன்னிக்காவிட்டால் கடவுளும் அவனை மன்னிக்க மாட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT