Published : 03 Mar 2019 01:13 PM
Last Updated : 03 Mar 2019 01:13 PM
அமைதியும் ஒருமித்த சிந்தனையுமாகக் கொண்டாடுவதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம். ஆனால், ஆரவாரம், இசை, ஆட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள் சிலர். ஏகாந்தமாக வழிபடுங்கள். அமைதியுடன் சிவ சந்நிதியில் ஒன்றிடுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகா சிவராத்திரி அன்று இரவில் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். இந்தப் பூஜைகளில் கலந்துகொண்டு, அபிஷேகத்தின் போது சிவனாரை தரிசிப்பது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறது சிவயோகம் நூல்.
மகா சிவராத்திரி அன்று அன்னதானம் செய்கிறார்கள் பலரும். இந்த உலகில் மனிதர்களாகிய நாம் வாழ்வதற்குத் தேவையானவை உணவும் தூக்கமும்! இந்த உணவையும் உறக்கத்தையும் விடுத்து சிவ தரிசனம் செய்வதுதான், மகா சிவராத்திரியின் தாத்பர்யம். அப்படியிருக்க, உணவு அளித்து, அடுத்தவரின் விரதத்தைக் குலைப்பது மகா பாபம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
உணவையும் உறக்கத்தையும் துறந்திருந்தால், புலன்கள் தானாகவே கட்டுக்குள் வரும். அப்போது இறையின் மகோன்னத சக்தியை மிக எளிதாக உணரமுடியும். அந்த சக்தியை உள்வாங்கிக் கொள்வதால், நினைத்த காரியத்தை வீரியத்துடன் செயலாற்ற முடியும்.
வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, மகா சிவராத்திரி முதலான நாட்களில் விரதம் மேற்கொள்ளச் சொன்னதற்கு உள்ளே இப்படி பல காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
ஆகவே, மகா சிவராத்திரி நாளில், உணவு அருந்தவும் கூடாது. ஆலயங்களுக்கு வந்திருப்பவர்கள், விரதத்தைக் கலைக்கும் வகையில் உணவு வழங்கவும் கூடாது. சொல்லப்போனால், மகா சிவராத்திரி நாளில், அம்பாளே உணவு அருந்தாமல், சிவனருளுக்காக விரதம் மேற்கொண்டாள் என்கிறது புராணம்!
மேலும் ஆரவாரத்தை விரும்பாதவர் சிவனார். ஏகாந்தத்தையே அவர் விரும்புகிறார். ஏகாந்தம்... அப்படியொரு அமைதி. மகா சிவராத்திரி நன்னாளில், கோளறு பதிகம் பாராயணம் செய்யுங்கள். சிவபுராணம் படியுங்கள். லிங்காஷ்டம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் முதலான சிவ ஸ்துதிகளைப் பாராயணம் செய்து ஜபித்துக்கொண்டே இருங்கள்.
இந்த நாளில் சொல்லப்படும் துதிகளுக்கு, நூறு கோடி முறை சொன்ன பலன் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT