Published : 11 Feb 2019 01:27 PM
Last Updated : 11 Feb 2019 01:27 PM
ரத சப்தமி நன்னாளில், ஏழு எருக்கம் இலைகள், அட்சதை, அருகம்புல், பசுஞ்சாணம் முதலானவற்றைக் கொண்டு நீராடவேண்டும் என்கிறது சாஸ்திரம். இப்படி நீராடினால், சகல தோஷங்களும் நீங்கும். துர்தேவதைகள் நம்மை அண்டாது. தேக ஆரோக்கியத்துடனும் மனத்தெளிவுடனும் வாழலாம். நம் பாவங்களெல்லாம் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கின்றன ஞானநூல்கள்.
மேலும் இது பீஷ்மர் சம்பந்தப்பட்டது என விவரிக்கிறது புராணம்.
மகாபாரத யுத்தத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். ஆனாலும் புண்ணியங்கள் நிறைந்த உத்தராயன புண்ய காலத்தில் இறந்தால் புண்ணியம் என மரணத்துக்காகக் காத்திருந்தார். அப்படி காத்திருக்கும் வரத்தை, அதாவது நினைத்த நாளில் இறந்து போகிற வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர்.
ஆனால், செய்த பாவங்கள் அவரை தடுத்துக் கொண்டே வந்தன. முக்கியமாக, சபையில், அத்தனை பேருக்கு நடுவே பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டாள். அப்போது, அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாவம்தான் இப்போது சாக விடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை வேதவியாசர், பீஷ்மரிடம் விவரித்தார். தவறு செய்வது மட்டுமே பாவமல்ல; தவறைத் தட்டிக்கேட்காமல் பார்த்துக்கொண்டு நிற்பதும் கூட பாவம்தான் என்றார் வியாசர்.
அத்துடன் பரிகாரம் ஒன்றையும் சொன்னார்.
அதன்படி, புத்தியால் செய்த பாவம் நீங்க தலையில் ஒரு எருக்கம் இலை, கண்களால் செய்த பாவம் நீங்க, கண்களில் இரண்டு எருக்கம் இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என எருக்கம் இலைகளை வைக்க அருளினார் வியாசர். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு அவ்வாறு எருக்க இலைகள் வைக்கப்பட்டன. சூரிய உதயத்தின் போது, உயிர் பிரிந்தது என்கிறது புராணம்!
நாளை ரதசப்தமி (12.2.19 செவ்வாய்க்கிழமை). ரதசப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி (13.2.19). ரத சப்தமி வழிபாட்டுடன் மறுநாள் பீஷ்மாஷ்டமியும் கொண்டாடப்படுகிறது. வணங்கப்படுகிறது. ரதசப்தமியில் எருக்க இலை கொண்டு நீராடுவதும் மறுநாள் பீஷ்டாஷ்மியில் அவருக்காக தர்ப்பணம் செய்வதும் குருவருளையும் இறையருளையும் தந்தருளும் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT