Published : 21 Feb 2019 10:48 AM
Last Updated : 21 Feb 2019 10:48 AM
பண்டிகைகளை மையப்படுத்தி தமிழில் பாடப்படும் பாடல்கள் குறைவு. அந்தக் குறையைப் போக்கிறது இந்தப் பாடல்.
உழவின் பெருமையையும் அதற்கு உதவும் மாடுகளையும் போற்றும் பண்டிகை பொங்கல். புத்தாடை உடுத்தி, சர்க்கரை பொங்கல் வைத்து, குடும்பத்தோடும் உறவினர்களோடும் கொண்டாடும் மண் சார்ந்த பண்டிகையைப் போற்றி ஜீவராஜா குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளிப் பாடல் `தைமாசம் பொறந்தாச்சு... பொறந்தாச்சு... தமிழினமே எழுந்தாச்சு எழுந்தாச்சு’.
ஆலயச் சடங்குகளில் மட்டுமே இன்றைக்கும் வாசிக்கப்படும் பழங்கால வாத்தியங்களான திருச்சின்னம், எக்காளம் போன்ற வாத்தியங்கள் முகப்பிசையில் ஒலிக்க, அதைத் தொடர்ந்து நவீனமும் கிராமியமும் கலந்த துள்ளல் இசை தொடர்கிறது. பாடலுக்கு இசையமைத்ததுடன் பாடலைப் பாடியிருக்கிறார் ஜீவராஜா. பிரதானமான குரலுக்கு ஒத்திசைவாக ஒலிக்கிறது அம்புலி, கோகி ஆகிய இரு பெண்களின் குரல். ஊரும் உறவும் இணைந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் தமிழரின் வீரம், உரிமை, இனத்தின் பெருமை அனைத்தும் கருப்பொருள்களாக வசீகரிக்கின்றன.
நம் மண்ணில் இன்றைக்கும் உயிர்ப்போடு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பழைய படங்களில் பார்த்திருப்போம். அந்த உயிர்ப்பான தருணங்களை இந்த வீடியோ பாடல் சில மணித் துளிகளில் நம் மனதில் மீட்டெடுக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT